வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

திங்கள், 29 செப்டம்பர், 2008

அசுற்றோவைப் பாராட்டலாம்! ஆனால்...

கடந்த 27.9.2008 காரி(சனி)க்கிழமை இரவு மணி 10.30க்கு அசுற்றோ வானவில்லில் 'அலாரம்' நிகழ்ச்சி 'தமிழும் தமிழரும்' என்ற தலைப்பில் ஒளிபரப்பானது.

நாட்டில் உள்ள ஒட்டுமொத்தத் தமிழ் மக்களின் உள்ளத்தைத் தொடுகின்ற வகையிலும், தமிழ்; தமிழன் என்கிற உணர்வைத் தட்டி எழுப்புகிற வகையிலும் வெகு சிறப்பாக அமைந்தது என்றால் மிகையாகாது.

பெரும்பாலும் தமிழ் நிகழ்ச்சி என்ற பெயரில் குப்பைகளையும் கழிசடைகளையும் ஒளிபரப்பி தமிழ்க் குமுகாயத்தை சீரழித்து வரும் அசுற்றோவில் இப்படி ஒரு நிகழ்ச்சியா? என நம்ப முடியாத அளவுக்கு இந்த 'அலாரம்' நிகழ்ச்சி அமைந்திருந்தது.

தமிழ்மொழி - தமிழ் இனம்;
தமிழ்க் கலை - தமிழ்ப் பண்பாடு;
தமிழ்ப் பள்ளி - தமிழ்க் கல்வி
தமிழ்க் கணினி – தமிழ் ஊடகம்;
தமிழ்ச் சான்றோர்கள் – தமிழ் இயக்கங்கள்;
தமிழ் மாணவர்கள் – தமிழ்ப் பெயர்கள்;
என பல்வேறு கோணங்களில் மிக மிக அருமையான; காலத்திற்கு ஏற்ற கருத்துகள் அறிவான நிலையிலும் எழுச்சியான வகையிலும் பரிமாறப்பட்டன.

தமிழின் வழித்தடத்தை விட்டுவிட்டு தடுமாறிப் போய், தறிகெட்டுத் திரியும் இன்றையத் தமிழ் இளைஞர் கூட்டத்தைத் தட்டியெழுப்பி விழிப்புறச் செய்யும் 'தமிழ் மருந்து' நல்ல விருந்தாகப் பரிமாறப்பட்டது.

பேச்சாளர்களாகக் கலந்துகொண்ட தமிழ் மானமுள்ள ஐந்து இளையோர்களும் தமிழுக்கு ஆக்கமான ஏடல்களை (Idea) ஏரனமான (Logic) முறையில் முன்வைத்தனர்.

பத்தாயிரம் ஆண்டுகள் பழமைச் சிறப்பு வாய்ந்த செம்மொழித் தமிழின் தொப்புள் கொடி அறுந்துவிடாமல், அடுத்தத் தலைமுறைக்குத் தமிழைக் கொண்டு செல்வதற்கு அறிவும் ஆற்றலும் உறுதியும் தன்னம்பிக்கையும் கொண்ட எம் தமிழ் இளையோர் படை ஒன்று நாட்டிலே உள்ளது என்பதற்கு அந்த ஐந்து இளையோரும் நல்ல எடுத்துக்காட்டு!

அதோடு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தமிழ்ப் பெரியார் ஐயா டத்தோ அஜி தசுலிம் முகம்மது இபுராகிம் அவர்களும்; இளம் தமிழ்ச் சிங்கம் ஐயா சி.ம.இளந்தமிழ் அவர்களும் மிக அழகாக; அருமையாகத் தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.

இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து திக்கித் தடுமாறாமல்; ஆங்கிலம் கலக்காமல்; உளறிக் கொட்டாமல்; நல்ல முறையில் வழிநடத்தினார் தொகுப்பாளர். இந்த நிகழ்ச்சியை இவ்வளவு தரமாகத் தயாரித்து அளித்தவர் சற்குணன் சண்முகம்.

இந்தக் கூட்டணியில் உருவான 'தமிழும் தமிழரும்' என்ற அலாரம் நிகழ்ச்சிக்குத் 'தமிழுயிர்' மிக மகிழ்ச்சியோடு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கின்றது.
அசுற்றோ வானவில் நினைத்தால் இதுபோல இன்னும் பல நிகழ்ச்சிகளை மாறுபட்ட கோணத்தில் படைக்கமுடியும். 'மக்கள் தொலைக்காட்சி'யில் தமிழையும் தமிழரையும் தமிழ்க் கலை, பண்பாடு, இலக்கியத்தை முன்னெடுக்க எப்படி எப்படியெல்லாம் புதுமையாக – திறமையாக – கவரும்படியாக நிகழ்ச்சியைப் படைக்கிறார்கள் என்பதைப் பார்த்தாவது 'வானவில்' தன்னைத் திருத்திகொள்ள முன்வர வேண்டும்.

சன் டீவி, எம்.டீவி, மெகா டீவி என்ற தமிழ் மானங்கெட்ட அலைவரிசைகளைப் பார்த்து 'ஈ அடிச்சான் காப்பி' போல வானவில்லும் கூத்தடிக்கக் கூடாது; இளைஞர்களைக் கூட்டி வைத்து கும்மாளமும், குத்தாட்டமும் போடக் கூடாது!

தமிழைக் கெடுக்கும் வகையிலும்; தமிழில் அன்னிய மொழிகளைக் கலப்படம் செய்தும் பேசக்கூடாது!

இளம் பெண்களையும்; திருமணம் முடித்த பெண்களையும் அரைகுறை ஆடைகளுடன் ஆட்டம் போட வைத்து, அவர்களின் முன்னழகையும் பின்னழகையும் திரும்பத் திரும்பக் காட்டக் கூடாது!

இளையோர்களைக் கவர வேண்டும் என்பதற்காக மேல்நாட்டு பாணியில் உடையணிந்து சகிக்க முடியாத அளவுக்கு ஒப்பனைகள் (Make up) செய்து காட்டுக்கத்தல் கத்தி அறிவிப்புகள் செய்யக் கூடாது!

கல் வணிகர்களையும், எண் கணித மேதைகளையும், சோதிட ஞானிகளையும் கூட்டிவந்து பேசவைத்து தமிழர் சமுதாயத்தை இன்னும் மூட நம்பிக்கையில் ஆழ்த்தக் கூடாது!

அனைத்துக்கும் மேலாக, ஒரு பக்கம் மக்களைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கும் கேடுகெட்ட கழிசடை நிகழ்சிகளை வண்டி வண்டியாக படைத்துவிட்டு இன்னொரு பக்கம் வாழ்க்கைக் கல்வி, வாழ்வோம், விழுதுகள், குற்றப் பத்திரிகை, இலக்கிய மேடை இப்படி நல்ல நிகழ்ச்சிகளை நாங்கள் படைக்கிறோம் என்று குள்ளநடி வேடம் போட்டு நடிக்கக்கூடாது!!

தமிழுக்கும் தமிழருக்கும் ஆக்கமான ஒரு சில நிகழ்ச்சிகள் அசுற்றோவில் வருவதால் அசுற்றோவைப் பாராட்டலாம்தான்! ஆனால், 'சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது' என்று ஒரு பழமொழி உண்டு. அசுற்றோ இப்போதுதான் 'சாண்' அளவு ஏறியுள்ளது. ஆனால், இதற்கு முன்பு அது சறுக்கியது என்னவோ கிலோ மீட்டர் அளவுக்கு!!

@ஆய்தன்:
தமிழன் மனத்தைக் கெடுத்துவிட்டு – அந்தத்
தமிழனுக்கே புத்தி சொல்கிறது அசுற்றோ!
தமிழன் பணத்தை வாங்கிக்கொண்டு – அந்தத்
தமிழனுக்கே ஆப்பு வைக்கிறது அசுற்றோ!

8 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

எங்கேயாவது நல்லது நடந்தால், அதனை நம் எதிரி செய்தாலும் பாராட்டிட வேண்டும் என்பதற்கு உங்கள் கட்டுரை நல்ல எடுத்துக்காட்டு.

அலாரம் நிகழ்ச்சியை நானும் பார்த்தேன். நீங்கள் குறிப்பிட்டது போல மிகவும் நன்றாக இருந்தது. இது போன்ற நிகழ்ச்சிகளை அதிகரித்து மக்களுக்கு அசுற்றோ நல்வழி காட்ட வேண்டும்.

பெயரில்லா சொன்னது…

"எங்கேயாவது நல்லது நடந்தால், அதனை நம் எதிரி செய்தாலும் பாராட்டிட வேண்டும் என்பதற்கு உங்கள் கட்டுரை நல்ல எடுத்துக்காட்டு."

ithai naanum valimoligiren. thamilanin uyar panpukalil ithu muthanmaiyaanathu.athu aaythanidam ullathu.vaalthukkal

Anbuchelvan,
sungai siput

Unknown சொன்னது…

இளையவேல்,

எமக்கு எவர் மீதும் வெறுப்பு கிடையாது. தமிழுக்கு ஏற்படும் கேடுகளைத் தட்டிக் கேட்பது தமிழனாகப் பிறந்த எமது பிறப்புக் கடமை. அதே வேளையில் தமிழுக்கு நல்லது செய்தவர் எமது எதிரியாக இருந்தாலும் பாராட்டி ஊக்கப்படுத்துவதும் எமது கடமை என கருதுகிறேன்.

ஆதவன் சொன்னது…

அன்புச்செல்வன்,

தங்கள் முதல் வருகைக்கு நன்றி. தொடர்ந்து தமிழுயிரைப் படியுங்கள். கருத்துகள் கூறுங்கள்; மறுமொழி எழுதுங்கள்.

விரும்பினால், தாங்களும் தமிழுயிருக்குப் பங்களிக்கலாம். தமிழுயிருக்குப் பொருத்தமான செய்திகளை மின்னஞ்சலில் விடுக்கலாம்.

பெயரில்லா சொன்னது…

கடந்த காரிக்கிழமையன்று ஒளியேறிய அலாரம் நிகழ்ச்சியின் தலைப்பு அற்புதம். அதில் பங்கேற்றவர்களும் சிறப்பாக விவாதித்தனர். இந்நிகழ்சி திண்ணமாக தமிழ்ப்பேசும் மக்களை வசப்படுத்தி இருக்கும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை. இதே போன்று ஒவ்வொரு வாரமும் நிகழ்ச்சி படைக்கப்படின் மிகச் சிறப்பாகும். கடந்த கிழமைகளில் ஒளியேற்றப்பட்ட சில நிகழ்ச்சிகள் சிறப்பாக அமையவில்லை. தமிழன் என்ற முறையில் கருத்துக்கூறினால் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இருப்பின் மிகச் சிறப்பாகும்.

பெயரில்லா சொன்னது…

Vanakam....intha agapakkam miga sirappaga irukirathu…Alaram nigalchiyai patriya karuthirku mikka nandri…Valga tamizh…

Anbudan,
Revathy

பெயரில்லா சொன்னது…

அலாரம் அழகாய் அடித்தது இம்முறை. வாழ்த்துக்கள். இனி இது போன்ற மக்கள் வழிக்காட்டும் நடைமுரை தொடர வேண்டும். ஒரு கருத்து, விழுதுகள் அறிவிப்பாளர்கள் உடைகளில் வடநாட்டுக் கலாச்சாரம் அதிகம் மிளிர்கிறதே, தமிழருடைக்கு வழி உண்டோ..? குறிப்பாக ஆண் அறிவிப்பாளர் வேட்டி சட்டைக்கு மாறுவதெப்போது? மிடுக்காய் அதையும் உடுத்தலாமே..

அன்புடன்,
இளவேனில்

Sivaganapathy சொன்னது…

வணக்கம்...அலாரம் நிகழ்ச்சி வானவில்லில் வரவேற்க்க வேண்டிய மாறுப்பட்ட படைப்பு.
சமீபத்தில் அரேங்கேற்றம் கண்ட 'தமிழும் தமிழரும்' என்ற படைப்பு சற்று தமிழ் உணர்ச்சியை தூண்டிவிட்டது என்று சொல்லலாம்.

ஆனால் அந்த 'தமிழும் தமிழரும்' என்ற படைப்பு இன்னும் மலேசியா தமிழர்கள் (இந்தியர்கள்) ஏன் தமிழ் படிக்க வேண்டும் என்ற முக்கியமான ஒரு கருத்தை வலியுறுத்த அல்லது நிருபிக்க தவறி விட்டது என்றுதான் கூறவேண்டும்.

நேயர்கள் அல்லது முக்கிய பிரமுகர்கள் தெரிவித்த கருத்துக்கள் மேலும் தமிழ் உணர்ச்சியை தூண்டியதே தவிர எதற்காக தமிழ் படிக்க வேண்டும் என்பதை உணர்த்த மறந்துவிட்டார்கள்.

'தமிழும் தமிழரும்' ....அதாவது இங்கே குறிப்பிடுவது "மலேசியா தமிழர்கள் அல்லது மலேசியா இந்தியர்கள் அல்லது மலேசியா இந்திய வம்சாவளிகள் ஏன் தமிழ் படிக்க, பேச, வேண்டும் என்பதே கேள்வி?

இதற்க்கு பதில் இப்படித்தான் வர வேண்டும் ....

மலேசியா இதியர்களில் பல மொழி பேசும் வர்க்கத்தினர் இருந்தாலும் கூட
மலேசியா அரசாங்கத்தால் மலேசியா இந்தியர்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட மொழி தமிழ் மொழி.
அதாவது மலேசியா இந்திய வம்சாவளிகளுக்காக. இங்கே மலேசியா இந்திய வம்சாவளிகள் என்றால் யார் யார் ?? தமிழர்கள், தெலுங்கு , மலையாளம் கன்னடம் , சீக்கியர்கள் , இந்திய கிருஸ்தவர்கள், இந்திய முஸ்லிம்கள், என்று மேலும் பலர் .
இந்த இந்திய வம்சாவளிகளுக்காக மலேசியா அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மொழி தமிழ் மொழி . ஆகவேதான் நாம் மலேசியா இந்தியர்கள் அனைவரும் தமிழ் படிக்க பேச வேண்டும். இந்த மொழி என்ற ஒன்றால்தான் நாம் ஒற்றுமையாக வாழ முடியும்.