வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

செவ்வாய், 23 டிசம்பர், 2008

தமிழோடு உயர்க தமிழ் இளைஞர் மணிமன்றம்


கடந்த 21-12-2008இல், மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் 41ஆவது பேராளர் மாநாடு மிகச் சிறப்புற நடத்தேறியது. நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் ஐந்தாவது தலைவராக இருந்த திரு.பொன்னையா பிரம்பன் பதவி விலகிய வேளையில், நெகிரி மாநிலத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் திரு.முரளி புதியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மணிமன்றத்தைக் கடன் தொல்லையிலிருந்து மீட்டெடுத்தது, தமிழ் அலை சொற்போர் போட்டியை மாபெரும் அளவில் நடத்தியது, தமிழ்ப்பள்ளிகளுக்குக் குழந்தைகளை அனுப்பும் இயக்கத்தை முடுக்கிவிட்டது, நாடளாவிய நிலையில் தமிழர் திருநாள் கொண்டாட்டத்தை மீண்டும் எழுச்சியுற வைத்தது, இடைநிலைப்பள்ளி பாடநூலில் மலேசியத் தமிழர்கள் பற்றிய இழிவான சொற்களை நீக்க போராடியது முதலானவற்றை மணிமன்றத்தின் முன்னாள் தலைவர் பொன்னையாவின் சாதனைகளாகக் குறிப்பிடலாம். தமிழ்க் குமுகாய நலன்கருதி அவர் மேற்கொண்ட பணிகள் பாராட்டப்பட வேண்டியவை - போற்றப்படவேண்டியவை.

என்ன செய்யப் போகிறார் முரளி?

தற்போது, புதிதாகத் தேர்வு பெற்றிருக்கும் முரளி மணிமன்றத்தில் தொடக்கக்கால சாதனைகளைப் போல அல்லது முன்னாள் தலைவர் பொன்னையா போல தமிழ் இளைஞர்களுக்கும் – தமிழுக்கும் – தமிழர்க்கும் என்ன செய்யப் போகிறார் என்பது சமுதாயத்தின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.

திரு.முரளி தன்னுடைய தலைமைத்துவத்தில் மணிமன்றத்திற்குப் புதிய தோற்றத்தையும் புத்தெழுச்சியையும் ஏற்படுத்துவதோடு, "தமிழோடு உயர்வோம்" என்ற மணிமன்றத்தின் முழக்கத்தைச் செழிக்கச் செய்யவேண்டுமென தமிழுயிர் கேட்டுக்கொள்கிறது.

தமிழ் இளைஞர் மணிமன்றம் என்ற சத்திமிக்க பேரமைப்பு எந்தவித அழுத்தத்திற்கும் ஆளாகாமல் – எவ்வித நயப்புக்கும் அடிமையாகாமல் – எந்த அரசியல்கட்சிக்கும் அடிவருடாமல் – எந்தவொரு தனிமனிதருக்கும் துதிபாடாமல் – எத்தகைய எதிர்ப்புக்கும் அஞ்சாமல் தமிழ் இளைஞர்களுக்காகவும் ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமுதாயத்திற்காகவும் குரல்கொடுக்க வேண்டும் – பணியாற்ற வேண்டும்.

நாட்டில் நாளுக்குநாள் நலிந்துகொண்டிருக்கும் இளைஞர் கூட்டத்தையும் இளைஞர்களாக வளர்ந்துவரும் இடைநிலைப்பள்ளி மாணவர்களையும் முதல் இலக்காகக் கொண்டு சீறிய செயல்களில் ஈடுபட வேண்டும்.

நாட்டில் தமிழுக்கும் – தமிழ்ப்பள்ளிக்கும் – தமிழ்க்கல்விக்கும் மணிமன்றம் தொடர்ந்து அரணாக இருந்து செயல்பட வேண்டும்.

தமிழ் இளைஞர்களிடையே தமிழ் மொழியின உணர்வை ஊட்டி - தமிழின வரலாற்றுப் பெருமைகளை எடுத்துக் காட்டி – தமிழிய மரபுகளை விளக்கிச் சொல்லி தமிழ் இளைஞர்களை தமிழினத்தின் உயர்வுக்கு உதவுகின்ற 'மாந்த மூலதனமாக' உருவாக்கிட வேண்டும்.

மலேசியத்தில் தமிழ் இளைஞர் மணிமன்றம் தோன்றி ஏற்படுத்திய சிந்தனைப் புரட்சியும் மறுமலர்ச்சியும் மீண்டும் ஏற்பட வேண்டும். அதற்காக, புதியத் தலைவர் திரு.முரளி பல்லாற்றானும் பாடாற்றிட வேண்டும்.

நடந்துமுடிந்த பேராளர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஏட்டளவில் மட்டும் எழுதப்பட்டதாக இருத்துவிடக் கூடாது. அந்தத் தீர்மானங்கள் அனைத்தும் செயல்வடிவம் காண்பதற்கு அரயாது பாடுபட வேண்டும் என தமிழுயிர் கேட்டுக்கொள்கிறது.

மேலே சொல்லப்பட்ட பல எதிர்ப்பார்ப்புகளோடு , தமிழ் இளைஞர் மணிமன்றத் தலைவர் திருவாளர் முரளிக்குத் தமிழுயிர் மனமார்ந்த நல்வாழ்த்துகளை வழங்குகிறது.

@ஆய்தன்:-
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல் (அதி:48 குறள்:471)

5 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

//தமிழ் அலை சொற்போர் போட்டியை மாபெரும் அளவில் நடத்தியது//

இச்சொற்போரில் கலந்துகொண்டு சிறந்த பேச்சாளர் என தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆனால் சான்றிதழை இப்பொழுது தருகிறேன், நாளை தருகிறேன் என இழுத்தடித்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டன.

எனக்கே 'சீ! போ'! என்றாகிவிட்டது! கேட்பதை நிறுத்திவிட்டேன்..!

தமிழ் அலை சொற்போர் சிறப்பானதொரு நிகழ்வு எனினும், அதனை இவர்கள் நடத்தியவிதம் மனநிறைவை அளிக்கவில்லை. போட்டிகளின் முக்கிய விதிகளைக் கடைப்பிடிக்காமல் விரைவாக நடத்தி முடித்தனர்!

ஆதவன் சொன்னது…

@பெயரில்லா அன்பரே,

தங்களின் மறுமொழிக்கு நன்றி. அடுத்த முறை பெயரில்லாமல் எழுதுவதைவிட புனைப்பெயரில் எழுத அன்போடு வேண்டுகிறேன் அன்பரே!

//இச்சொற்போரில் கலந்துகொண்டு சிறந்த பேச்சாளர் என தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆனால் சான்றிதழை இப்பொழுது தருகிறேன், நாளை தருகிறேன் என இழுத்தடித்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டன.//

தங்கள் மனக்குறையை தமிழுயிரில் வெளிப்படுத்தியுள்ளோம். சம்பந்தப்பட்டவர்கள் இதற்கான தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்ப்போம். குறந்தளவு இரண்டு வரிகளில் பதிலாவது எழுதுகிறார்களா பார்ப்போம்!

Sukumaran Suppiah சொன்னது…

thiru murali avargalukku paaraattukkal! mandra manigalukku vaazhthugal! sonna sollaik kaapaatria thiru ponniah avargal pallaandu vaazhga!
neenda gaalathirkkup piragu ponniah avargalin thalaimayil manimandram meendum than adaiyalathaip petrathu.
ini antha adaiyaalthaik kattik kaakka vendiyathu puthiya seyalavaiyinarin poruppu matrum thalaiyayak kadamaiyum aagum.
manimandrathin porkkaalam meendum pirakka vendum.
mandrathin uruppinar perumalavil peruga vendum. thotdatai vittu pattananggalukkarugil kudiyiruppup paguthigalil athigamaana mandranggal thotruvikkappada vendum. thamizhaik karkaamal inam, mozhi matrum panbaadu theriyaamalum maranthum uyar kalvikkoodanggalil payilum inthiya maanavargalukku ilavasamaaga thamizh karppikka aavana seiya vendum. ina ottrumai ongga enna seiyalam? araayavum!!
athodu aaithan kooriyulla aalosanaigalai gavanathil kondu seyalpaduvathu nalam!
thamizhodu uyarvom!

ஆதவன் சொன்னது…

@சுகுமாறன் சுப்பையா,

தங்களின் அருமையான கருத்துகளும் நல்லுரைகளும் மணிமன்றத்தின் புதிய தலைமைத்துவத்திற்குச் சென்று சேரட்டும்.

அருமையான திட்டங்களை முன்மொழிந்துள்ளீர்கள். தங்களின் எண்ணப்படி மண்மன்றம் செயல்படுமானால், நமது வெற்றிகள் விரைவில் மலரும். நமது சமுதாயம் விரந்து எழுச்சி பெறும்.

தங்கள் வரவுக்கும் மறுமொழிக்கும் மிகுந்த நன்றி. தொடர்ந்து வாருங்கள்..!

தங்களைப் போன்று ஆக்காமான எண்ணங்களை உடையவர்கள் சமுதாயத்திற்கு மிகவும் தேவைப்படுகிறார்கள். உங்கள் எண்ணங்களையும் ஏடல்களையும் தமிழுயிர் வழியாகத் தொடர்ந்து பகிர்ந்துகொள்ளவும்.

தங்கள் கணினியில் தமிழ் மென்பொருளை இணைத்து / பதிவிறக்கம் செய்து, தமிழில் தட்டச்சு செய்ய பழகிக்கொள்ளுங்கள். அதற்கான வழிமுறைகள் தமிழுயிர் முகப்பில் வழங்கப்பட்டுள்ளன.

manithilagam சொன்னது…

puthiya thalaivar thiru k. murali avargal indraya kaalathu ilainyargaluku enna thevayo athai muraiyaaga kaalathukku etpa sariyaaga seyvathai kandu magilchi adaigindrom.

thodarattum avarathu panigal.
vaalthukkal thamilodu uyarvom.