வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வியாழன், 2 அக்டோபர், 2008

தமிழ் மானங்கெட்ட வானவில்!

என்னடா இது! தமிழுயிர் எப்போ பார்த்தாலும் அசுற்றோ பற்றியே எழுதுகிறது என்று சலித்துக்கொள்ளாமல் தொடர்ந்து படியுங்கள்.

மேலே இருக்கும் படத்தை உற்றுக் கவனித்தால், தமிழ்ப் பெயரில் எழுத்துப் பிழையைக் காணலாம். 'பயிற்ச்சி பட்டறை' என்று அசுற்றோ வானவில் திரும்பத் திரும்பக் காட்டியது.

உண்மையில் 'பயிற்சி பட்டறை' என்று "ச்" ஒற்று இல்லாமல் எழுதுவதே சரியானது. இது என்ன பெரிய குற்றமா? சின்ன ஒரு எழுத்துப் பிழைதானே! ஒற்றுப் பிழைதானே! என்று இதனைச் மிக எளிதாகக் கருதிவிட முடியாது.

'பயிற்சி' என்ற மிக மிக எளிமையான ஒரு சொல்லைக் கூட பிழையின்றி எழுத முடியாதா இந்த அசுற்றோவால்?

மாணவர்கள் தொடங்கி படித்தவர்கள், பெரியவர்கள் என பல இலக்கம் (இலட்சம்) தமிழ் மக்கள் பார்க்கக்கூடிய ஒரு ஊடகம் இப்படி ஒரு தவற்றைச் செய்யலாமா?

நிகழ்ச்சித் தலைப்புகளையும் அறிவிப்புகளையும் விளம்பரங்களையும் எப்போதுமே "ரோமனாய்சு தமிழில்' போடும் அசுற்றோ, அத்திப் பூத்தது போல எப்போதாவது போடும் தமிழ் எழுத்துகளில் இப்படி குளறுபடி செய்யலாமா?

தமிழ் என்றால் அவ்வளவு இளக்காரமா இந்த அசுற்றோவுக்கு?

தமிழ் எழுத்தை / சொல்லைப் பிழையில்லாமல் போட வேண்டுமே என்ற அக்கறை வேண்டாமா இந்த அசுற்றோவுக்கு?

THR Raga என்பதை கொஞ்சமும் பிசிறில்லாமல் "தி ஹெச் ஆர் ராகா! அஹா.. சிறந்த இசை" என்று சமற்கிருத எழுத்தைச் சேர்த்து 'H' மற்றும் 'HA' ஆகிய ஓசை கெடாமல் எழுத புத்தியும் சுரணையும் உள்ள அசுற்றோவுக்கு.. தமிழ் எழுத்தில் மட்டும் புத்திகெட்டு.. சுரணைக்கெட்டுப் போனது ஏன்? ஏன்? ஏன்?

"வீட்டில் பிள்ளை பட்டினிக் கிடக்குதாம்; அடி மடையன் ஒருவன் குரங்குக் குட்டிக்குப் பால் கொடுத்தானாம்" என்று மலாய்மொழியில் ஒரு பழமொழி உள்ளது. அதுபோல், சொந்த மொழியைச் சீரழிய விட்டுவிட்டு செத்துபோன சமற்கிருதத்தையும் தமிழைச் சாகடிக்கும் ஆங்கிலத்தையும் வாழவைக்கும் அசுற்றோ வானவில்லுக்கு அறிவு இருக்கிறதா?

தாய்த்தமிழைப் பிழைபட எழுதி இப்படி நாசப்படுத்தும் அசுற்றோவுக்குக் கொஞ்சமாவது தமிழ்மொழி மானம் வேண்டாமா?

அழகு தமிழைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கும், தமிழ் மானங்கெடா அசுற்றோவைச் சும்மா விடலாமா?

தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடக்கூடாது என்பார்கள். அப்படி ஒரு நிலைமையை அசுற்றோ வானவில் ஏற்படுத்தலாமா?

தெரியாமல்தான் கேட்கிறேன், அசுற்றோவில் தமிழ் அறிந்தவர் எவரும் இல்லையா? தமிழைக் கவனிக்க ஆளே கிடையாதா? தமிழ் எழுத்துகளைப் பார்த்து திருத்தும் அளவுக்கு தமிழ்மொழி கற்ற பணியாளரை அசுற்றோ நியமிக்கவில்லையா?

தமிழ்க் கணினித் துறையில் உலகத்திற்கே முன்னோடியாக இருக்கும் மலேசியத் தொலைக்காட்சித் திரையில் தமிழுக்குப் பதிலாக, 'ரோமனைசு தமிழ்' எழுத்து வருவதும், தப்பித் தவறி வருகின்ற தமிழும் தப்பும் தவறுமாக வருவதும் மானங்கெட்டச் செயலாகத் தெரியவில்லையா?

இரண்டே சொற்கள் கொண்ட 'பயிற்சி பட்டறை' என்பதை சரியாக எழுதத் தெரியாமல் 'பயிற்ச்சி பட்டறை' என எழுத்துப் பிழையோடு போடுகின்ற அசுற்றோவுக்குத் தமிழ்ச் சுரணை கிடையாதா?

@ஆய்தன்:-
தமிழாலே அசுற்றோ வானவில் பிழைக்குமாம்! – அந்தத்
தமிழுக்கு அதுவேதான் கொள்ளியும் வைக்குமாம்!

21 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

தமிழில் பல்லாயிரக்கணக்கான பழமொழிகள் இருக்கும்பொழுது, மலாய் பழமொழியை உதாரணம் காட்டியது எதற்கு?

நம் பழமொழிகளுக்கென்ன பஞ்சமா?

ஆய்தன் இதற்கு பதில் கூறுவாறா?

ஆதவன் சொன்னது…

பெயரில்லா அன்பரே,

மலாய் பழமொழியைப் பயன்படுத்தியது தவறு என நினைக்கிறீர்கள் போலும். இதில் ஏதும் தவறு இல்லையே!

மற்றவர்களின் நல்ல கருத்துகளை எடுத்து மேற்கோள்தானே காட்டியிருக்கிறோம்! அதுவும், மொழியாக்கம் செய்துதானே பயன்படுத்தியிருக்கிறோம்.

ஒருவேளை, மலாய் எழுத்துகளைப் பயன்படுத்தியோ, அல்லது தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்தி மலாய் மொழியை எழுதியிருந்தாலோ கண்ணையும் கருத்தையும் உறுத்தலாம்.

தங்கள் வினா புரியவில்லை. தெளிவுபடுத்தவும்.

பெயரில்லா சொன்னது…

பெயரில்லாத நண்பரே,
ஒரு மனிதனின் பண்பு , இவ்வுலகில் உள்ள நன்மைகளை ஏற்றுக் கொண்டு தீமைகளை விட்டு விடுவதாக இருக்க வேண்டும்.அதேபோல் தான் எந்த மொழியிலும் நல்லதை பற்றி கூறியிருந்தாலும் நாம் அதை ஏற்றுக் கொள்ளலாம்.. நன்றி..அப்பழமொழி மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளதைக் உற்றுக் கவனிக்கவும்.. பெயர் இல்லாதவரே

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

இதனால் தான் வீட்டில் இந்த 'ஏஸ்ட்ரோ' இணைப்புக் கொடுக்கவில்லை... அதனை பார்த்து நேரத்தை வீணடித்து மனம் நொந்துப் போகவும் வேண்டியதில்லை... ஆட்டம் 100 வகையாம்... நல்ல தூண்டுதல் படைப்புகள்... தமிழ் போட்டிகளை நடத்தித் தொலைக்கிறார்கள் என்றால் அதுதான் இல்லை... நாவல் எழுதும் போட்டி என ஏதோ நடத்துகிறார்கள் பெயருக்கு...

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள். அதுபோல, தமிழுயிர் தொடர்ந்து கண்டித்து வருவதால் நிச்சயமாக தமிழுக்கு நன்மை நடக்கும் என எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

ஆகவே, தமிழுயிர் தொடர்ந்து தமிழ்க் கேடுகளை வெளிப்படுத்த வேண்டும்! தட்டிக் கேட்க வேண்டும்!

பெயரில்லா சொன்னது…

Hello sir,

VANAKKAM

i saw your BLOG .
very interesting. good job.... keep it up...SIR
pls continue to comment to public regarding problem arise in tamil news paper,radio,tv and more.
we must teach direct to this people. as what we have done on 11/25
we are always support your. sir.

VALGA TAMAIL....VALGA TAMAIL....VALGA TAMAIL....VALGA TAMAIL....VALGA TAMAIL....

VALARGA TAMILAR....VALARGA TAMILAR....VALARGA TAMILAR....VALARGA TAMILAR....

TQ.

M.SELVAM

vky சொன்னது…

vanakkam 2 all the editors,

i saw ur blog,it's intresting.

keep it up n continue ur's good job.

tamil valzhtaal! tamilinam valzhtidum!

பெயரில்லா சொன்னது…

அசுற்றோ வானவில்லுக்கு ஒரு கெட்ட பழக்கம் உள்ளது தெரியுமோ?

தமிழ் மொழி, கலாச்சாரம் பற்றி மக்கள் சொல்லும் கருத்துகளை "எருமை மேல் பெய்த மழை" போல அது நினைக்கிறது.

சமுதாயத்தில் உயர்நிலையில் இருப்பவருக்கும், தமிழர் அல்லாதாருக்கும் வக்காளத்து வாங்குவதும், அவர்களை திருப்திபடுத்துவதும் தான் அசுற்றோவுக்கு முதல் வேலை!

தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் எவ்வளவு குறைத்து கொள்கிறதோ அல்லது எவ்வளவு கேவலப்படுத்துகிறதோ அந்த அளவுக்கு தமிழ்ப் பகைவர்களிடமிருந்து பாராட்டும் ஊக்குவிப்பும் அசுற்றோவுக்குக் குவிகிறது!

அசுற்றோ தலைவர் திரு.இராசாமணி தமிழ் நாட்டுத் தமிழராக இருந்தும் தமிழ் மேல் பற்றும் பாசமும் இல்லாமல் தமிழைச் சிதைப்பதைப் பார்த்துக்கொண்டு வெறுமனே தான் இருக்கிறார்.

தமிழ்நாட்டில் தாய்த்தமிழ்ப் பள்ளியில் அல்லது 'கார்ப்பரேசன்' பள்ளியில் படித்திருந்தால் அவருக்கு தமிழ் உணர்வெல்லாம் இருந்திருக்கும்.

அவர் 'கான்வெண்ட்' பள்ளியில் படித்து வந்திருப்பாரோ?

அசுற்றோவின் மொழி, இன, கலாச்சார ஒழிப்பை நிறுத்துவதற்கு இன்னொரு முறை தமிழர்கள் உரிமைப் போரில் இறங்க வேண்டுமோ?

பெயரில்லா சொன்னது…

வணக்கம் வாழ்க.

தொடர்ந்து தமிழுக்கு ஊறு விளைவித்து வரும் அசுட்ரோ உடனே தனது போக்கினை மாற்றிக்கொள்ளுதல் அவசியம். நமது மொழியை நாம் காப்பாற்றாமல் வேறு எவர் வந்து காப்பார்.

தமிழ் மொழியையும் பண்பாட்டையும் சமயத்தையும் சிதைப்பது என்பது தனது தாயின் ஆடைகளைக் கழற்றி அவளை அம்மணமாக வீதியில் நிற்க வைத்து அழகு பார்ப்பதற்கு ஒப்பாகும்.

கடுமைக்கு மன்னிக்கவும்

தமிழுணர்வுடன்

தமிழினியன்
சொகூர்

கோவி.மதிவரன் சொன்னது…

வணக்கம் வாழ்க

அசுட்டுரோவிற்கு ஓர் அன்பு வேண்டுகோள்.

தமிழ் மொழியையும் பண்பாட்டையும் காப்பதற்கான பெரும் பங்கினை தகவல் ஊடகங்கள் பெற்றிருக்கின்றன் என்பது நாம் அறிந்ததே. ஆனால். இன்றைய நிலையில் நமது மொழி தகவல் ஊடகங்களின் வழியாக பல்வேறு தாக்குரவுகளுக்கு ஆளாகி வருகின்றது மிகுந்த வருத்தத்தைத் தருகின்றது. இந்நிலை தொடர்ந்தால் நாளைய தலைமுறை நம்மைப் பார்த்து எக்காளமிடும். நமது மொழி நமது கடமை என்ற சிந்தனை வேறூன்ற வேண்டும். நல்லனவற்றைப் பாராட்டுகிற போது குறைகளைச் சுட்டிக்காட்டுகிற போக்கும் கண்டிப்பாக நமக்கு இருத்தல் வேண்டும்.சிந்திப்பார்களா

Sathis Kumar சொன்னது…

வியாபார உலகில், ஊடகங்கள் மொழி உணர்வை விற்று விட்டன. எஞ்சி இருந்த இணையம் எனும் ஊடகத்திலும் தமிழ் ஆங்காங்கு சிதைக்கப்பட்டு வருகின்றன.

மலேசிய தமிழ் வலைப்பதிவர்களான நாமாவது மொழியைச் சிதைக்காது, சமுதாய உணர்வோடு பதிவுகள் இடுவோம்.

Kadaaram சொன்னது…

நான் இந்தக் கேள்விகளைக் கேட்டதற்காக என்னைத் திட்டவேண்டாம். நியாயமான கேள்விகள்:

நீங்கள் சங்கதம் கற்றிருக்கிறீர்களா?
சங்கதத்தைப் பற்றி எந்த அளவுக்கு நீங்கள் அறிவீர்கள்?

நேரடியான ஒழுங்கான மரியாதையான பதிலைத் தரவும்.
நானும் அவ்வாறுதானே கேட்டிருக்கிறேன்?

ஆதவன் சொன்னது…

#கடாரம்,

தங்கள் வினாவைத் தெளிவாகக் கேட்கவும்?

//நான் இந்தக் கேள்விகளைக் கேட்டதற்காக என்னைத் திட்டவேண்டாம்//

அதிகம் திட்டுகிறேனோ?

//நேரடியான ஒழுங்கான மரியாதையான பதிலைத் தரவும்.//

எமது பதில்கள் சுற்றிவளைந்தும் மரியாதைக் குறைவாகவும் இருப்பதாகக் கருதுகிறீர்கள் போலும்!

Kadaaram சொன்னது…

>>தங்கள் வினாவைத் தெளிவாகக் கேட்கவும்?

தெளிவாகத்தான் கேட்டிருக்கிறேன்.

>>அதிகம் திட்டுகிறேனோ?

இதே கேள்வியை இதுவரைக்கும் கேட்டுவிட்டு வாங்கிக்
கட்டிக்கொண்டதே அதிகம்.
ஆகையால்தான் ஈட்டியை ஓங்கின கையோடு கேடயத்தையும் தூக்கிப் பிடித்துக்கொண்டேன்.
எல்லாம் தற்காப்புத்தான்.

Kadaaram சொன்னது…

தெளிவான கேள்விகளுக்கு அறவே பதில் இல்லை.
கேள்விகள் புரியவில்லை போலும்.
இதற்கு நிச்சயம் கோபம் வரவேண்டும்.
வெளுத்துக்கட்டுங்கள், வழக்கம்போல.

அதன் பின்னர் கட்டாயமாக நான் கேட்ட கேள்விகளுக்குப்
பதில் அளியுங்கள்.

நமக்குப் பதில் கிடைத்தால் போதும்.

Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பெயரில்லா சொன்னது…

#கடாரம்,

//நீங்கள் சங்கதம் கற்றிருக்கிறீர்களா?
சங்கதத்தைப் பற்றி எந்த அளவுக்கு நீங்கள் அறிவீர்கள்?//

தாங்கள் 'சங்கதம்' என குறித்துள்ளது 'சங்கீதமா?' விளக்கவும்.

கோபம் என்பது 'அறக்கோபமாக' அல்லது குமுகாய நோக்கோடு அமைவதில் தவறில்லையே கடாரம்!

Kadaaram சொன்னது…

ஆகமத்தொடு மந்திரங்கள் அமைந்த *சங்கதம்* பங்கமாப்
*பாகதத்*தொ டிரைத்துரைத்த சனங்கள் வெட்குறு பக்கமா
மாகதக்கரி போல்திரிந்து புரிந்துநின்றுணும் மாசுசேர்
ஆகதர்க் கெளியேன் அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே!

திருவாலவாய்த் திருப்பதிகம் 3
பாடல் 2
திருமுறை 3
திருஞானசம்பந்தர்

சங்கதம் = சமஸ்கிருதம்
பாகதம் = ப்ராகிருதம்

தொல்காப்பியர் 'வடமொழி' என்று குறிப்பிடுவார்.

இப்போது பதில் சொல்லலாம்.
இல்லையா?

ஆதவன் சொன்னது…

#கடாரம்,

//நீங்கள் சங்கதம் கற்றிருக்கிறீர்களா?
சங்கதத்தைப் பற்றி எந்த அளவுக்கு நீங்கள் அறிவீர்கள்?// என்ற தங்கள் வினாவுக்குக் 'கற்கவில்லை', 'அறிந்ததில்லை' என்பவையே என்னுடைய பதில்.

சங்கதம் அறிந்தோர் இப்போது 1% இருப்பார்களா?

அகராதிவழி மட்டுமே இப்போதைக்கு 'சங்கதச்' சொற்களுக்குப் பொருள்காண முடியும் என நினைக்கிறேன்.

அழிந்துபட்ட பழம்பெரும் மொழிகளில் 'சங்கதமும்' சேர்ந்துகொண்டதாக அறிஞர்கள் கூறுகிறார்கள்.

பாகதத்தின் சிதைவே பின்னாளில் 'சங்கதமாக' திருத்திச் செய்யப்பட்டது. அந்த இரண்டுக்குமே தமிழ்தான் மூலம் எனவும் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

அது சரி, சங்கதத்திற்கும் என்னுடைய இந்த இடுகைக்கும் என்ன தொடர்பு?

Kadaaram சொன்னது…

கேணப்பயல் என்று நினைத்துக்கொண்டு 'அறிஞர்கள்
சொல்கிறார்கள்', அறிஞர்கள் சொல்கிறார்கள்' என்று
எழுதியிருக்கிறீர்கள். அதுவும் உங்களுக்குத் தெரியாத
விஷயத்தைப் பற்றி.
இதற்கு மேல் ஏதும் வளர்த்தால் என்னுடைய மரியாதை
இங்கு கெட்டுவிடும்.
இந்தப் பக்கம் வந்ததே தவறு.
புத்தியைச் செருப்பால் அடித்துக்கொள்ளவேண்டும்.
வணக்கம்!

ஆதவன் சொன்னது…

#கடாரம்

//கேணப்பயல் என்று நினைத்துக்கொண்டு 'அறிஞர்கள்
சொல்கிறார்கள்', அறிஞர்கள் சொல்கிறார்கள்' என்று எழுதியிருக்கிறீர்கள். அதுவும் உங்களுக்குத் தெரியாத விஷயத்தைப் பற்றி.//
என்று

//அழிந்துபட்ட பழம்பெரும் மொழிகளில் 'சங்கதமும்' சேர்ந்துகொண்டதாக அறிஞர்கள் கூறுகிறார்கள்.//
இதனைச் சொல்கிறீர்கள் போலும்.

வேறு ஒன்றுமில்லை ஐயா! எமது முப்பாட்டன் தொல்காப்பியம் கற்றுதந்த பாடம்தான்.

"எண்மனார் புலவர்" என்று நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் எமது முப்பாட்டன் மூத்தோருக்கு மதிப்பளித்து குறிப்பிட்டது எமக்கும் தொற்றிக் கொண்டது போலும்.

தொல்காப்பியன் கூற்றை வைத்து அவரும் அன்றைய மக்களை 'கேணப்பயல்கள்' என்று நினைத்ததாக தயவுகூர்ந்து சொல்லவேண்டாம் என வேண்டுகிறேன்.

சங்கதம் இன்னும் வாழ்வதாக மொழி அறிஞர்கள் சொன்னதாக எனக்குத் தெரியவில்லை. தங்களுக்குத் தெரிந்தால் சொல்ல வேண்டுகிறேன்.

எல்லாவற்றையும் தெரிந்துகொண்டுதான் எழுத வேண்டும் என்றால் எமது ஆயுளுக்கும் ஒன்றுமே எழுத முடியாது.

காரணம், ஒன்றைத் தெரிந்துகொள்ளும்போது கூடவே தெரியாத ஒன்றும் இருக்கும் என எமது கொள்ளுத் தாத்தா திருவள்ளுவன் "அறிதோறும் அறியாமை கண்டற்று" என்று சொல்லியிருக்கிறார்.

நமக்கு முன் ஏற்கனவே பெரியோர்கள் சான்றோர்கள் கண்டதை எடுத்தாள்வதில் குறையொன்றுமில்லை என கருதுகிறேன்.

எதிலும் மெய்ப்பொருள் காண்பது நல்லதுதான். ஆனால், உள்ளத்தால் பொய்யாது ஒழுகியவர்கள் பலர் நிறுவிய ஓர் உண்மைக்கு மீண்டும் ஆய்வுகள் எதற்கு? கைப்புண்ணுக்கு கண்ணாடி ஏன்?

'சங்கதம்' பற்றிய எமது எழுத்துகளில் தங்களுக்கு மாறுபாடு எனத் தெளிகிறேன்.

மாற்றுக் கருத்துகளை தாங்களும் பரிமாறலாமே.

தங்களின் தொடர் வருகைக்கு நன்றி கடாரம் ஐயா!