வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வெள்ளி, 10 அக்டோபர், 2008

தமிழுக்கு அதிகாரியா? தமிழுக்குச் சதிகாரியா?

கடந்த 6.10.2008இல் 'கணிதமும் அறிவியலும் தமிழில் படித்தால் ஏறுமா?' என்று தலைப்பிட்டு 'தமிழுயிரில்' ஓர் இடுகை வந்தது. (கடந்த இடுகையைப் பார்க்க) அதனைப் படித்துவிட்டு நெகிரி செம்பிலான் மாநிலத்தைச் சேர்ந்த நல்லாசிரிய அன்பர் கோ.குணசீலன் என்பவர் தமிழுயிருக்கு நீண்ட நெடிய மின்மடல் எழுதியிருந்தார். அம்மடலில் இடம்பெற்ற முகாமையான விவரங்களின் தொகுப்பு இங்கே இடம்பெறுகிறது.

*மின்மடல் விடுத்தவர்: கோ.குணசீலன், நெகிரி செம்பிலான்.

தமிழுயிர் ஐயா ஆய்தன் அவர்களுக்கு வணக்கம்.

கணிதமும் அறிவியலும் தமிழில் படித்தால் ஏறுமா? என்ற உங்கள் ஆய்வுக் கட்டுரையையும் அதற்கு மற்றவர்கள் எழுதிய கருத்துகளையும் ஆழமாகப் படித்தேன். அதனை ஒட்டி ஒரு முக்கியமான தகவலை மிகுந்த மன வருத்தத்தோடு உங்களுடன் பகிர்ந்துகொள்ள இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

அண்மையில் என் ஊரில் ஆசிரியர்களுக்கான ஒரு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஓர் உயர் தமிழ்ப் பிரிவு அதிகாரி வந்தார். உணவு நேரத்தில் பலர் கூடி அவருடன் கலந்துரையாடினர். அப்போது கணிதம் அறிவியல் பாடங்களை மீண்டும் தமிழுக்கு மாற்றுவது பற்றி பேச்சு வந்தது.

அப்போது அந்த தமிழ் அதிகாரி கூறிய வார்த்தைகள் என் நெஞ்சில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியதைப் போல் இருந்தது. அவர் கூறியவை பின்வருமாறு:-

1)கணிதம் அறிவியலை மீண்டும் தமிழுக்கு மாற்றத் தேவையில்லை.

2)அப்படி மாற்றினால் பாதிக்கப்பட போவது தமிழ் மாணவர்கள்தான்.

3)உலகமொழியாகிய ஆங்கிலத்தில் படித்தால் எதிர்காலத்தில் வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்களுக்குப் பிரச்சனைகள் இருக்காது.

4)மீண்டும் அந்தப் பாடங்களுக்குப் புதிய பாடத்திட்டம் உருவாக்க ஆசிரியர்களுக்குச் சிரமமாக இருக்கும்.

5)கணிதம் மற்றும் அறிவியல் பாடத்திற்குப் பயிற்சி பெற்ற தமிழ் ஆசிரியர்கள் இல்லை.

6)அறிவியல் பாடத்திற்குத் தேவையான கலைச்சொற்கள் தமிழில் இல்லை.

7)புதிய சொற்களை உருவாக்குவது மிகவும் சிரமமான காரியம்.

8)அப்படியே உருவாக்கும் சொற்களில் கிரந்த எழுத்துகள் வந்துவிட்டால் சிலர் ஆர்ப்பாட்டம் செய்வார்கள்.

9)தேர்வு வாரிய அதிகாரிகள் ஒருபக்கம் புதுப்புதுச் சொற்களைப் போட்டு மாணவர்களைக் குழப்பி விடுவார்கள்.

10)இந்தியர்களில் தெலுங்கு, மலையாள வம்சாவளியினர் இந்த மாற்றத்தை விரும்பவில்லை.

இதுபோல் பல காரணங்களை அவர் அடுக்கிப் பேசினார். தமிழ் மொழிக்காக நியமனம் செய்யப்பட்ட ஓர் உயர் அதிகாரி இப்படி பேசிய மன்னிக்க முடியாத குற்றம் என்று நினைக்கிறேன். தமிழுக்கு ஆதரவாக பேச வேண்டிய அந்த அதிகாரி தமிழுக்குக் குழிபறிக்கும் வகையில் பேசலாமா? அவர் அந்தப் பதவியில் நீடிக்கலாமா? இதற்கு நாம் என்ன செய்யலாம்?

தாய்த்தமிழுக்காக இந்தத் தகவலை வெளிப்படுத்துகிறேன். நீங்கள்தான் ஒரு தீர்வைச் சொல்ல வேண்டும். நன்றி, வணக்கம்.

@ஆய்தன்:-

  • நல்லாசிரிய அன்பர் கோ.குணசிலன் அவர்களின் மேற்கண்ட மின்மடலை படித்துவிட்டீர்களா?

  • தமிழுக்குப் பணி செய்ய நியமிக்கப்பட்ட அதிகாரிகள் சிலர் இவ்வாறு தமிழுக்கு எதிராக செயல்படுகிறார்கள்.. கீழறுப்பு வேலை செய்கிறார்கள்.. என்பதைத் அறிவீர்களா?
  • தனக்கும் தன் மனைவி மக்களுக்கும் சோற்றையும் சுகத்தையும் வாரி வழங்கும் தமிழுக்கு இப்படி ஒரு இரண்டகம் செய்யலாமா?
  • அல்லது அந்த அதிகாரி கூறியுள்ள வாதங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளதா? தமிழுக்கும் தமிழ் மாணவர்க்கும் ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கும் நன்மையாக அமையுமா?
உங்கள் மறுமொழிகளை எழுதுங்கள். உடனே...!!!

(பின்குறிப்பு:- இந்தச் செய்திக்குத் தமிழுயிர் அன்பர்களிடமிருந்து வந்த சூடான மறுமொழிகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்.)

13 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அந்த வடிகட்டின முட்டாள் ஓர் அதிகாரியா? அடக் கடவுளே, தமிழ்த் துரோகியல்ல அவன்.. மாங்காய் மடையன்..கேணக் கிறுக்கன். அப்படியென்றால் தாய்மொழிக்கு மாற்ற விரும்பும் மலாய்க்காரர்களுக்கும் சீனர்களுக்கும் இதைக் கொள்கையாய்க் கொண்டுள்ள ஐ.நாவுக்கும் இதை இந்த அறிவுச்சுடர் வெளிப்படையாகக் கூறுவானா? மானங்கெட்டவன். சோறு தானே தின்கிறான்? ஆங்கிலம் ஒரு மொழி ; அறிவு அல்ல என்பதை ஒரு பொது மனிதர் கூட அறிந்திருப்பார். இவன் உண்மையிலேயே படித்துத்தான் அதிகாரி ஆனானா? அந்த மனநோயாளியை ஒரு நல்ல மருத்துவரை நாடச் சொல்லுங்கள்.
உலகில் எவன் திருந்தினாலும் இவன் திருந்த மாட்டான்... திருத்துவதும் வீண் வேலை. அவன் மானத்தை காற்றில் விட ஆவன செய்வோம். அந்த வெறிநாயின் விவரங்களை வெளியிடுங்கள்.


மு.குலசேகரன்,
கடாரம்.

பெயரில்லா சொன்னது…

இப்படி ஒரு புல்லுருவி தமிழுக்கு அதிகாரியாக இருக்கிறான் என்பது வெட்கக்கேடான விசயம். அவன் யார் என்று முகத்திரையை கிளிக்க வேண்டும். தமிழ் மொழி பாடத்திற்கு அதிகாரியாக இருந்தும் தமிழுக்கே குழி பறிக்கிறானா அவன்? அவன் சொன்ன காரணங்களைத் தூக்கி மலத்தொட்டியில் தான் கொட்ட வேண்டும். முடிந்தால் அவனையும் தூக்கி அதன் உள்ளே போட வேண்டும். கணிதமும் அறிவியல் பாடமும் தமிழ் மொழியில் போதிக்க மறைமுகமாக திரைக்குப் பின்னல் ஒழிந்துகொண்டு குழி பறிக்கும் அந்த சதிகாரனை வீதிக்கு இழுத்து மானத்தை வாங்க மானமுள்ள தமிழர்கள் ஓர் அணியில் சேர வேண்டும்!

நன்றி! வணக்கம்!

இக்கண்,
விஷ்வநாதன் நாராயணன்,
தெலுக் பங்லிமா காராங்.

Sathis Kumar சொன்னது…

யார் அந்த அதிகாரி?

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

தமிழுக்கு அதிகாரியாக பணியாற்றிக் கொண்டே, அந்தத் தமிழுக்கே தீங்கு நினைக்கும் இப்படிப்பட்ட அதிகாரிகள் சிலர் இருப்பது உண்மையிலேயே வருத்தமான செய்திதான்.

தமிழ்ப் பள்ளிகளிலும் தமிழ்க் கல்வியிலும் இடைநிலைப் பள்ளி இலக்கியப் பாடத்திலும் பல புதிய முன்னேற்றங்களை ஏற்படுத்துவதற்கு உயர் அதிகாரிகள் பலரும் ஆசிரியர்கள் பற்பலரும் உழைத்துக் கொண்டிருக்கும் வேளையில், இப்படிப்பட்ட சில கோடரி காம்புகளா?

அந்த உயர் அதிகாரி முன்வைத்துள்ள காரணங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அந்த அனைத்துக் காரணங்களையும் சீனர்கள் முன்பே ஆராய்ந்து முடிவெடுத்துவிட்டனர். மலாய்க்காரர்கள் இப்போது ஆராய்ந்து பார்த்து உண்மையைப் புரிந்துகொண்டனர்.

ஆனால், தமிழர்களில் இப்படிப்பட்ட சிறுமதியாளர்கள் சிலர் இன்னமும் சிந்தனை மாற்றம் பெறாதவர்களாக உள்ளனர். உலக நடப்பையும் உண்மை நிலவரத்தையும் அறியாமல் உள்ளனர்.

தமிழனாகப் பிறந்தும் இவர்களுக்குத் தமிழ்ப் பற்றும் உணர்வும் இல்லாமல் போனதாலும், தமிழின் மீது மிக ஆழமான தாழ்வு மனப்பான்மை ஆழ்மனத்தில் இருப்பதாலும், அறிவடிமைகளாக இருப்பதில் விருப்பம் கொண்டிருப்பதாலும் இவ்வாறு தமிழுக்கு எதிராக சிந்திக்கிறார்கள் செயல்படுகிறார்கள்.

இப்படிப்பட்டவர்கள் அதிகாரத்திலும் ஆட்சியிலும் இருக்கும் வரை தமிழுக்கும் தமிழருக்கும் மீட்சி இல்லவே இல்லை!

நாளைய தலைமுறைக்குத் தமிழைச் சேர்க்க வேண்டிய பொறுப்பிலிருந்து இன்று நாம் விலகிவிட்டால், ஒரு பேரினத்தின் தொப்புள் கொடியை அறுத்தெறிந்து அந்த இனத்தையே அடியோடு ஒழித்தப் படுபாவிகளாகக் கருதப்படுவோம்.

ஆகவே, இனம் வாழ மொழி வாழ வேண்டும். மொழி வாழ நம் நாட்டில் தமிழ்ப் பள்ளிகள் வாழ வேண்டும். தமிழ்ப்பள்ளிகளில் பாடங்கள் அனைத்தும் தமிழாக வாழ வேண்டும்.

பெயரில்லா சொன்னது…

தமிழுக்குத் தமிழனே தூக்குக்கயிறா....

இருக்காது.. அப்படிச் சொன்னவன் நிச்சயம் ஒரு தமிழனாகவே இருக்க முடியாது. ஒரு தமிழ் அதிகாரியாக உருவாவதற்கு அவனும் தமிழ்ப் படித்துதான் உயர்ந்திருக்க முடியும். இப்படிப்பட்ட அறிவாளிகள் நம்மிடையே நிறையவே உலாவிக்கொண்டிருக்கின்றனர். அன்றும் சரி.. இன்றும் சரி.. அவன் உண்கின்ற உணவு தமிழால் கிடைத்துக்கொண்டிருக்கிறது என்பதை மறந்து பேசிக்கொண்டிருக்கிறான். இவனைப் போன்றே ஒரு சில ஆசிரியர் பயிற்சிக் கழகங்களிலும், ஏன்.. நம் கல்வி அமைச்சிலும் பல புல்லுருவிகள் இருக்கின்றனர்.. இவர்களின் முகத்திரைகளை கிழித்தெரிய வேண்டியது தமிழர்கள் அனைவரின் கடமை. அவன் விவரங்களை வெளியிடுங்கள்.

தமிழுக்காகவும், தமிழ் இனத்திர்க்காவும், தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்காவும் தொடர்ந்து குரல் கொடுப்போம்..

வாழ்க தமிழ்.. வளர்க தமிழ் இனம்..
நன்றி! வணக்கம்!

பெ.தமிழ்க் குமரன்
கடாரம்

பெயரில்லா சொன்னது…

வணக்கம் ஐயா.

தாங்கள் எழுதியுள்ள செய்திக்கு கீழே இணைப்பில் உள்ள கட்டுரை தக்க பதிலுரை வழங்கும் என நம்புகிறேன்.

http://httpdevamaindhan.blogspot.com/2008/07/blog-post_18.html

அன்பன்,
சிவபாண்டியன்.

பெயரில்லா சொன்னது…

2002க்கு முன்னர் கணிதத்தையும் அறிவியலையும் தமிழில் கற்பித்த ஓர் ஆசிரியன் என்ற முறையில், அந்தச் சதிகார அதிகாரி அடுக்கியுள்ள காரணங்களுக்கு என் சிற்றறிவிற்கு எட்டிய விளக்கங்களைச் சொல்ல விழைகிறேன்.

1)கணிதம் அறிவியலை மீண்டும் தமிழுக்கு மாற்றத் தேவையில்லை.

>>தமிழுக்கு மாற்ற வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. மீண்டும் தமிழுக்குத் திரும்ப வேண்டும் என்பதே உண்மை நிலை. காரணம், கடந்த 2002 வரை இவ்விரு பாடங்களும் தமிழில்தான் பயிற்றுவிக்கப்பட்டன.

2)அப்படி மாற்றினால் பாதிக்கப்பட போவது தமிழ் மாணவர்கள்தான்.

>>தாய்மொழியில் கணிதம் அறிவியலைப் படிக்கும் மலாய், சீன மாணவர்களுக்கு நன்மை! அதுபோல் செருமானிய, சீன, சப்பான், கொரிய மாணவர்களுக்கு நன்மை! அப்படியிருக்க தமிழ் மாணவர்களுக்கு மட்டும் எப்படி பாதகமாக இருக்கும்! அறிவுக்குப் பொருந்தவில்லையே!

3)உலகமொழியாகிய ஆங்கிலத்தில் படித்தால் எதிர்காலத்தில் வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்களுக்குப் பிரச்சனைகள் இருக்காது.

>>கணித அறிவியல் சூத்திரங்களையும் கோட்பாடுகளையும் தாய்மொழியில் படித்துப் புரிந்துகொண்டால், பின்னர் வேறு எந்த மொழியிலும் மொழியாக்கம் செய்து கொள்ள முடியும். இதற்குத் தேவை மலாய், ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற் மற்றைய மொழி அறிவும் ஆளுமையும்தான்.

4)மீண்டும் அந்தப் பாடங்களுக்குப் புதிய பாடத்திட்டம் உருவாக்க ஆசிரியர்களுக்குச் சிரமமாக இருக்கும்.

>>பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு நமது ஆசிரியர்களுக்கு இல்லை. அதனை கல்வி அமைச்சு செய்துவிடும். அதனைச் சரியாக மொழிப்பெயர்க்க வேண்டியது மட்டுமே நமது வேலை.

5)கணிதம் மற்றும் அறிவியல் பாடத்திற்குப் பயிற்சி பெற்ற தமிழ் ஆசிரியர்கள் இல்லை.

>>தவறான கூற்று. அறிவியல் பாடத்தில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பலர் உள்ளனர். அவர்களின் அறிவையும் ஆற்றலையும் தமிழ்ப்பள்ளிக்கே பயன்படுத்த இதுவொரு நல்ல வாய்ப்பு. இல்லையேல், காலப்போக்கில் நமது ஆசிரியர்களை தேசிய பள்ளிகளுக்கு மாற்றி எடுத்துக்கொள்வார்கள்.

6)அறிவியல் பாடத்திற்குத் தேவையான கலைச்சொற்கள் தமிழில் இல்லை.

>>பூனை கண்ணை மூடிக்கொண்ட கதைதான் இது. ஏற்கனவே, கல்வி அமைச்சின் கலைத்திட்ட மேம்பாட்டு மையம் கலைச்சொல் பட்டியல் ஒன்றினை உருவாக்கி உள்ளது. சிறீ கோத்தா ஆசிரியர் பயிற்சி கல்லூரி தமிழ்ப் பிரிவு ஒரு கலைச்சொல் அகராதியை வெளியிட்டுள்ளது. தவிர, தமிழகத்தில் மணவை முஸ்தப்பா, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சார்பில் அறிஞர் ப.அருளி ஆகியோர் பல்லாயிரக் கணக்கு சொற்களைக் கொண்ட கலைச்சொல் அகராதிகளை உருவாக்கியுள்ளனர்.

7)புதிய சொற்களை உருவாக்குவது மிகவும் சிரமமான காரியம்.

>>ஆழமான வேர் மூலமும், அகன்ற சொல் வளமும் கொண்ட தமிழில் புதிய சொற்களை உருவாக்க முடியாது என்பதெல்லாம் மொழியறிவும் ஆய்வறிவும் இல்லாதவர்களின் அறியாமைப் பேச்சு.

8)அப்படியே உருவாக்கும் சொற்களில் கிரந்த எழுத்துகள் வந்துவிட்டால் சிலர் ஆர்ப்பாட்டம் செய்வார்கள்.

>>தமிழில் சொல் உருவாக்க எதற்குக் கிரந்த எழுத்து? கிரந்தம் இல்லாமல் இயங்குவதே தமிழ்.

9)தேர்வு வாரிய அதிகாரிகள் ஒருபக்கம் புதுப்புதுச் சொற்களைப் போட்டு மாணவர்களைக் குழப்பி விடுவார்கள்.

>>இவைதாம் கலைச்சொற்கள் என வரையரை செய்துவிட்ட பிறகு எந்தத் தரப்பும் குழப்பம் செய்ய வாய்ப்பில்லை.

10)இந்தியர்களில் தெலுங்கு, மலையாள வம்சாவளியினர் இந்த மாற்றத்தை விரும்பவில்லை.

>>மலேசிய இந்தியர்களில் பெரும்பான்மையினர் தமிழர்கள். மலேசிய இந்தியர்களின் அதிகாரப்படியான மொழியாக இருப்பது தமிழ். ஆகவே, சிறுபான்மை தெலுங்கு, மலையாள மக்கள் அதுவும் தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் அவர்களின் குழந்தைகள் கட்டாயம் தமிழில்தான் படிக்க வேண்டும். தெலுங்கு, மலையாள மொழிகளுக்குத் தாயாக இருப்பது தமிழே என்பதால் அவர்கள் தாயை நேசிப்பதிலும் தமிழை வாசிப்பதிலும் பெருமைகொள்ள வேண்டும்.

படித்தவர், பட்டம் வாங்கியவர், ஆசிரியர், அதிகாரி என்ற நிலையில் இருப்பவர்கள் எதனைப் பேசினாலும் ஆய்வுகளின் அடிப்படையிலும் சான்றுகளுடனும் பேச வேண்டும்.

தெருவோரம் நின்றுகொண்டு வாய்க்கு வந்ததையெல்லாம் 'வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ' என்று பேசுவது அழகல்ல!

பெயரில்லா சொன்னது…

ஐயா ஆய்தன் அவர்களே,நான் அனுப்பிய மின்னஞ்சல் மடலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுவீர்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. அதற்கு பலரும் காட்டமான கருத்துகளை எழுதி இருக்கின்றார்கள். இன்னும் சிலர் அருமையாக கருத்துகளை எழுதி இருக்கிறார்கள். இவ்வளவு விசயங்கள் இருப்பதை படிக்கவே வியப்பாக உள்ளது. மீண்டும் தங்களுக்கு மனமார்ந்த நன்றிகளைக் கூறி விடைபெறுகிறேன். நன்றி.

தங்கள் அன்புள்ள,
கோ.குணசீலன்
நெகிரி செம்பிலான்

பெயரில்லா சொன்னது…

வணக்கம் வாழ்க

தமிழால் வேலையில் சேர்ந்து கொண்டு தமிழால் பிழைப்பு நடத்திக் கொண்டு இருக்கும் இவர்களைப் போன்ற அதிகாரிகள் தமிழுக்கு நிகழ்ந்த குறைபேறு. அதுவும் தமிழ் அதிகாரியாக இருந்து கொண்டு இவ்வாறு பேசுபவரை என்னவென்று சொல்வது? பிறகு எதற்கு தமிழ் அதிகாரி பதவி? ஆங்கில அதிகாரியாக ஆகவேண்டியதுதானே !

நமது மொழியையும் பண்பாட்டையும் அழிப்பதற்கு வேறொருவன் தேவையில்லை. இவர்களைப் போன்ற மானங்கெட்ட தமிழனே போதும். யார் அந்த தமிழ்ங்கிலன் உடனே அம்பலப்படுத்தவும்

தமிழுறவுடன்

தமிழாசிரியன்
பகாங்கு

கோவி.மதிவரன் சொன்னது…

வணக்கம் வாழ்க

நமது தமிழ்ப்பள்ளிகளையும் தமிழ்மொழியையும் காக்கின்ற மிகப் பெரிய பொறுப்பு நமக்கு இருக்கின்றது. அதைவிட தாய்ப்பால் அருந்தி தமிழால் வேலையில் சேர்ந்து தமிழின் காரணமாக இன்று உயர் பதவிகளில் இருக்கின்ற ஒவ்வொரு தமிழ் அதிகாரிகளுக்கும் இருத்தல் வேண்டும். நமது தாய்மொழியையும் பண்பாட்டையும் தமிழ்ப்பள்ளிகளையும் நாம் தான் காக்க வேண்டுமே ஒழிய பிறர் வந்து காப்பது கிடையாது. ஆங்கில மொழியின் வரவால் இன்று நமது மானவர்கள் கூட்டல், கழித்தல்,வகுத்தல், பக்கம் போன்ற பல சொற்களை மறந்திருக்கின்றனர் என்பது நாம் கண்ட உண்மை. இது ஏன் நமது தமிழ் அதிகாரிகளுக்குப் புரியவில்லை. கணிதம் அறிவியல் போன்ற பாடங்களுக்குக் கலைச்சொல்லாக்கம் செய்வது கடினம் என்றால் பிறகு எடற்கு நீங்கள்? எதற்கு உங்களுக்கு ஊதியம்.

மானமுள்ள மலேசியத் தமிழர்கள் இவர்களைப் போன்ற கயவர்களை அடையாளம் கண்டு கொள்ளுதல் வேண்டும்.
நமது தமிழர்கள் சிந்திப்பார்களா ?

பெயரில்லா சொன்னது…

இவன் திருந்தவே மாட்டான். அந்த தமிழ்த்துரோகியின் பெயரை உடனே வெளியிடுமாறு தமிழுயிரைக் கேட்கிறோம். அவனுக்கு நாம் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

மதிவாணன்
சிலாங்கூர்

தமிழ் பெயரில்லா தமிழன்(SATEES) சொன்னது…

அன்புடைய மலேசிய தமிழ் வலைப்பதிவாளர்களே,

எதிர்வரும் 17-10-2008 (வெள்ளிக்கிழமை) ஜாலான் பாரு முனிஸ்வரன் ஆலயத்தின் முன்புறம்,இலங்கை அரசின் கண்மூடித்தனமான தமிழ் மக்களுக்கெதிரான கொலைவெறி தாக்குதல்களை கண்டித்து கண்டன கூட்டம் ஒன்றை ஜசெக,ஜாலான் பாரு கிளை ஏற்பாடு செய்துள்ளது.இக்கூட்டத்தில் ஜசெக சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துக் கொள்வார்கள். இந்நிகழ்வை பற்றிய அறிவிப்பு செய்தியை தங்களது வலைப்பதிவுகளிலும், இணையத்தளங்களிலும் வெளியிட்டு ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். ஈழத்தமிழர்களின் கண்ணிரை துடைக்க ஒவ்வொரு தமிழனும் தன் பங்கை செய்வோமாக.வாழ்க தமிழ்,வளர்க தமிழினம்!! நிகழ்வின் விவரம் பின்வருமாறு :-

இடம் : பிறை,ஜாலான் பாரு முனிஸ்வரன் ஆலயம் முன்புறம்
தேதி : 17-10-2008 ( வெள்ளிக்கிழமை )
நேரம் : இரவு 8.00 மணிக்கு மேல்

அன்புடன்,

சத்திஸ் முனியாண்டி,
செயலாளர்,
ஜனநாயக செயல் கட்சி
ஜாலான் பாரு கிளை,பிறை.

ஆதவன் சொன்னது…

தமிழைக் கெடுக்கும் அந்தச் 'சதி'காரியை வன்மையாகக் கண்டித்து மறுமொழி எழுதிய தமிழுயிர் அன்பர்களுக்கு நன்றி.

இளஞ்சித்திரன் கருத்துகள் / பதில்கள் மிக நன்று. அதனைத் தனி இடுகையாக வெளியிட எண்ணமுண்டு.

குலசேகரன், விசுவநாதன் நாராயணன், பெ.தமிழ்க்குமரன், சிவபாண்டியன், கோ.குணசீலன், மதிவாணன், பகாங்கு தமிழாசிரியன் என புதியவர் பலர் மறுமொழி எழுதியுள்ளீர்கள்.

அனைவருக்கும் நன்றி, தொடர்ந்து எழுதவும்.