வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

ஞாயிறு, 30 நவம்பர், 2008

வாக்கெடுப்பு (5) முடிவு


தமிழர்கள் தங்கள் மொழி இன வரலாற்றை
அறிய விரும்புகின்றனர்?


ஆம்:- 42%

இல்லை:- 58%


@ஆய்தன்:-

தன்னுடைய சொந்த மொழி இன வரலாற்றை அறியாத மானங்கெட்டவர்கள் அதிகமாக இருக்கும் ஓர் இனம் உலகில் உண்டென்றால், அது தமிழினமாகத்தான் இருக்கும்.


அதனாலேயே, தான் ஒரு தமிழன் என்று அறியாமல் – புரியாமல் – தெரியாமல் தன்னைத் திராவிடன் என்றும் – இந்தியன் என்றும் தமிழர்களே சிலர் சொல்லிக் கொள்கிறார்கள்.

மொழி இன வரலாற்றை அறிந்த தமிழர்களில் ஒரு பகுதினர்தாம் இன்னமும் தமிழினத் தொப்புள்கொடி அறிந்துவிடாமல் பாதுகாத்து வருகின்றனர்.

இவர்களால் மட்டுமே இன்னமும் உலகத்தில் தமிழினம் – தமிழ்மொழி வாழ்ந்துகொண்டிருக்கிறது என்றால் மிகையன்று.

தன்னுடைய சொந்த மொழி இன வரலாற்றை அறியாத நிலையிலும் – அறிந்துகொள்ள விரும்பாத நிலையிலும் இன்று தமிழர்கள் பலவகையிலும் தாழ்ந்து போயிருக்கின்றனர்.

அதுமட்டுமல்லாது, அன்னிய மொழி, இன, பண்பாடு, கலை, நாகரிகத்திற்கு அடிமைகளாகவும் அடிவருடிகளாகவும் பெரும்பான்மைத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

மொழி இன வரலற்றை அறியாத இந்தக் குருட்டுத்தமிழர்கள், ஆரியம் - சமற்கிருதம் - வட இந்தியாவுக்குச் சொந்தமான வரலாறு, மொழி, சமயம், பண்பாடு, கலை, இசை, உடை, உணவு, இலக்கியம் ஆகியவற்றை எல்லாம் தங்களுக்குச் சொந்தனமானது – தமிழருக்குச் சொந்தமானது என நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

சுருக்கமாகச் சொன்னால் தன்னுடைய சொந்தக் கால் இருப்பதே தெரியாமல் செயற்கைக் காலில் நின்றுகொண்டிருக்கிறனர்.

எவ்வளவு பெரிய பரிதாபம்!! எவ்வளவு பெரிய அறியாமை!!

இப்படிப்பட்ட மூடத்தனமான நம்பிக்கையின் காரணமாக தமிழையும் தமிழின மரபுகளையும் எதிர்க்கவும் துணிகின்றனர் – வேரோடு அழித்துவிட முயற்சியும் செய்கின்றனர்.

இப்படி, சொந்தக் கண்ணையே குத்திக் குருடாக்க யாராவது முனைவார்களா?

எந்த ஓர் இனம் தன்னுடைய சொந்த மொழி இன வரலாற்றை அறிந்திருக்கிறதோ, அந்த இனமே தன்னம்பிக்கை கொண்ட இனமாக இருக்கும்.

எந்த ஓர் இனம் தன்னுடைய சொந்த மொழி இன வரலாற்றை உயர்த்திப் பிடிக்கிறதோ, அந்த இனமே தன்மானத்துடன் வாழும்.

எந்த ஓர் இனம் தன்னுடைய சொந்த மொழி இன வரலாற்றை முன்னெடுக்கிறதோ, அந்த இனமே தலைநிமிர்ந்து முன்னேறும்.
மொழி இன வரலாறு அறியாமல் கல்வி, பொருளாதாரம், தொழில்நுட்பம் என எப்படி முன்னேறினாலும் அது முழுமையான முன்னேற்றமாக அமையாது.

வெள்ளி, 28 நவம்பர், 2008

ஓகக்(யோகா) கலைக்குத் தடை

இதற்குத் தடை..!

உடலை ஓம்பி
உள்ளொளி பெருக்கி
உயிரை வளர்க்கும்
உயரியக் கலையாம்
ஓகக் கலைக்குத் தடையாம்..!

இதற்கு விடை..?

உடலைக் குலுக்கி
உணர்ச்சியைப் பெருக்கி
உள்ளத்தைக் கெடுக்கும்
உலுத்தக் கலையாம்
குலுக்கல் ஆட்டத்திற்கு என்ன விடையாம்?


இதையெல்லாம் கேள்வி கேட்டால்...
இனவாதம் என்பார்கள்!
எகிறிப் பாய்வார்கள்!

ஏனிந்த பொல்லாப்பு.. நமகேனப்பா வம்பு..!

பின்குறிப்பு:- வரும் 29-11-2008இல், இந்தோனேசியாவின் கவர்ச்சிப் புயல் இனுல் டாராதிசுதா என்ற குலுக்கல் ஆட்டக்காரியின் 'டங்டுட்' எனப்படும் இடுப்பாட்டும் குத்தாட்ட நிகழ்ச்சி இதே நாட்டில் புக்கிட் சாலில் அரங்கில் நடைபெறவுள்ளது.


@ஆய்தன்:-
சிரிப்பு வருது.. சிரிப்பு வருது
சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது
சின்ன மனுசன் பெரிய மனுசன்
செயலைப் பார்த்து சிரிப்பு வருது

செவ்வாய், 25 நவம்பர், 2008

புதியத் தமிழனாய் எழுந்துவிட்டேன்

மலேசியத் தமிழர்கள் தங்கள் உரிமைகளைக் காப்பதற்காக மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்த நாள் 25-11-2007. இன்றோடு ஓராண்டு நிறைபெறும் அந்தப் போராட்ட நினைவலைகளில் முகிழ்த்த உரைவீச்சு இது.



விடுதலைக் கிடைத்தும்
விடியாத மூஞ்சியாய்
ஐம்பது ஆண்டுகள்
வீணாய் கழித்தேன்!

வெந்ததைத் தின்னுவோம்
விதிவந்தால் சாகுவோம்
இதுவே வாழ்க்கையென
இயல்பாய் வாழ்ந்தேன்!

எனக்கும் உரிமையுண்டு
எதற்கும் வழியுண்டு
இதனை நம்பியே
ஏமாந்து இருந்தேன்!

எங்கும் அச்சம்
எதிலும் அச்சம்
எதிர்த்து எதனையும்
கேட்கவே அஞ்சுவேன்!

தலைவர் சொல்வதும்
ஊடகம் பேசுவதும்
உண்மையே என்றெண்ணி
ஊமையாய் கிடந்தேன்!

அறியாமைக் குட்டையின்
ஆழத்தில் படுத்திருந்தேன்
அச்சுறுக்கை மணியோசை
அலறலில் துடித்தெழுந்தேன்!

நவம்பர் இருபத்தைந்து
நாள்காட்டிக் காட்டியது
நானிருந்த சிறைக்கதவு
நாதாங்கிக் கழன்றியது!

தூங்கி வழிந்தவனைத்
தூக்கிநிறுத்திய பொன்னாள்
ஏங்கிக் கிடந்தவனை
எழுப்பிவிட்ட நன்னாள்

எனதுரிமை சொல்லவந்த
ஏற்றமிகு திருநாள்
என்னருமை இனப்பிறப்பை
எடுத்துரைத்த ஒருநாள்

எழுந்துவிட்டேன் கண்திறந்தே
எகத்தாளரை எதிர்கொள்ள
துணிந்துவிடேன் மனந்திறந்தே
தொல்லையரை வென்றெடுக்க

ஓயமாட்டேன் இனிமேல்
உரிமைகளை மீட்காமல்
சாயமாட்டேன் இனிமேல்
சந்ததியை காக்காமல்

@ஆய்தன்:-
தமிழினம் வீழும்போதெல்லாம் அதனைத் தாங்கிநிற்கவும் தூக்கிநிறுத்தவும் இயற்கையே முன்னின்று வீரத்தமிழரை வீறுகொண்டு எழச்செய்துள்ள வரலாறு ஆகக் கடைசியாக மீண்டும் இங்கே எங்கள் மலேசியத்திலும் நிகழ்ந்துள்ளது..!

தமிழினம் சாயாது..! தமிழோசை ஓயாது..!!

ஞாயிறு, 23 நவம்பர், 2008

சாலைப் பெயர்ப்பலகையில் தமிழ்

கீழே படத்தில் இருப்பது என்ன என்று கவனித்துப் பாருங்கள்..!



கடந்த 21-11-2008இல், மலேசியா – பினாங்கு மாநிலத்தில் திறந்துவைக்கப்பட்ட சாலைப் பெயர்ப்பலகைதான் இது!

மக்கள் கூட்டணி அரசாங்கம் பினாங்கைக் கைப்பற்றிய பின்பு, நீதியாகவும் நடுநிலையாகவும் மேற்கொண்டுவரும் பல்வேறு அதிரடித் திட்டங்களில் இப்படி பன்மொழிகளில் சாலைப் பெயர்ப்பலகை அமைக்கும் திட்டமும் குறிப்பிடத்தக்கது.

பினாங்கின் தலைநகரான சோர்ச்சுடவும் (Georgetown) உலகத் தொல்நகரமாக அறிவிக்கப்பட்ட பின்னர், அந்நகரத்தில் உள்ள முக்கியச் சாலைகளின் பெயர்ப்பலகைகளில் மலாய், ஆங்கிலம், சீனம், சாவி ஆகிய மொழிகளோடு தமிழ்மொழியும் பயன்படுத்தப்படும் என மாநில மக்கள் கூட்டணி அரசாங்கம் அறிவித்தது.

இந்த அறிவிப்பானது, மலாய்க்காரர்கள் மத்தியில் மாபெரும் எதிர்ப்பு அலையைக் கிளப்பியது. பினாங்குச் சட்டமன்றம் தொடங்கி நாடாளுமன்றம் வரையில் இதுபற்றி கடுமையான விவாதங்கள் நடைபெற்றன.

அதுமட்டுமா? பல்வேறு மலாய் அமைப்புகள் காவல்துறையில் புகார் செய்தன – உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்தன – சாலை மறியல், கண்டனப் பேரணி என எதிர்ப்புகள் காட்டின.


இத்தனையையும் மீறி, பினாங்கு மாநில அரசாங்கம் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அதிரடியான நடவடிக்கைக்கு மாநில அரசு கொடுத்துள்ள சில வலுவான காரணங்கள்:-

1)சாலைப் பெயர்ப்பலகைகள் அமைக்கும் பொறுப்பு மாநில ஆட்சிக்கு உட்பட்டது.
2)தொல்நகரம் என்ற உலகப் புகழுக்கு ஏற்றதாக உள்ளது.
3)பினாங்கிற்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளுக்கு வழிகாட்டுவது.
4)நாட்டின் அதிகாரப்படியான மொழிகளை அங்கீகரிப்பது.
5)சொகூர் போன்ற பிற மாநிலச் சாலைப் பெயர்ப் பலகைகளிலும் தேசிய சுற்றுலாத் தளங்களின் பெயர்ப்பலகைகளிலும் பன்மொழிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
6)இத்திட்டமானது நாட்டின் தேசியமொழிக் கொள்கைக்கு எதிரானது அன்று.

எது எப்படியோ! பினாங்கு மாநில அரசு தான் சொன்னதைச் சட்டத்திற்கு உட்பட்ட முறையில் செயல்படுத்தி உள்ளது. இதனால், நாட்டின் மிகப்பெரிய இனங்களாகிய சீனர்களும் தமிழர்களும் (வெளிப்படையாகப் பலரும் – மறைமுகமாகச் சிலரும்) மகிழ்ச்சியும் பெருமிதமும் கொண்டுள்ளனர் என்பது மட்டும் உண்மை!

இதில், தமிழர்கள் நமக்கு மகிழ்ச்சியளிக்கும் மற்றொரு சங்கதியும் உண்டு தெரியுமோ?

Lebuh Acheh – Acheh Street என்பதை

லெபோ ஆச்சே அல்லது ஆச்சே ஸ்திரிட்
என்று தமிங்கிலத்திலோ அல்லது கிரந்த எழுத்திலோ எழுதாமல்
'ஆச்சே வீதி'
என்று தமிழில் எழுதி
தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ள பினாங்கு அரசைத்
தமிழுயிர் மனமார வாழ்த்துகிறது.


பினாங்கு அரசுக்கு ஒரு வேண்டுகோள்

அடுத்து நீங்கள் வைக்கின்ற ஒவ்வொரு பெயர்ப்பலகையிலும் தமிழ் தமிழாக இருக்கட்டும்! தமிங்கிலமும் கிரந்தமும் ஒதுங்கி நிற்கட்டும்!!
**முக்கியக் குறிப்பு:-
சில ஆண்டுகளுக்கு முன்புவரை இதே பினாங்கில் பன்மொழிப் பெயர்ப்பலகைகள் இருந்தன. அவை படிப்படியாக ஓரங்கட்டப்பட்ட வரலாறு பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். அப்படித் தெரிந்தவர்கள் – தக்கச் சான்றோடு (நிழற்படம்) தமிழுயிருக்குத் தெரிவிக்கவும்.

@ஆய்தன்:-
உண்மையான மலேசியாவின் உருவாக்கத்திற்கு
இதுவொரு முன்னுரை ஆகட்டும்!

புதன், 19 நவம்பர், 2008

தமிழ்ப்பள்ளிகளை இழுத்து மூடி விடலாமா?

வசந்தராவ் என்னும் பெயரிய அன்பர் ஒருவர் "தமிழ்ப்பள்ளிகளை இழுத்து மூடலாம். ஆனால் ஒரு விதி.." (Seal The Tamil Schools With A Condition) என்ற தலைப்பிட்டு தம்முடைய 'பங்சா மலேசியா' வலைப்பதிவில் கடந்த 12-11-2008இல் எழுதியுள்ளார்.

இந்தச் செய்தியைப் படித்துவிட்டு அதிர்ந்துபோன தமிழன்பர்கள் பலர் தமிழுயிருக்கு மின்னஞ்சல் வழியாகத் தகவல் கொடுத்திருந்தனர். அதோடு, அந்த வலைப்பதிவருக்குத் தக்க பதிலைக் கொடுக்குமாறும் கேட்டிருந்தனர்.

முதலில், இந்தச் செய்தியை எமக்கு அறியச் செய்த அத்துணை தமிழன்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி உரித்தாகட்டும். அவர்களின் தமிழ்ப்பற்று உள்ளங்கள் செழித்தோங்கட்டும்!

'பங்சா மலேசியா' வலைப்பதிவர் அன்பர் வசந்தராவ் எழுதிய பதிவில் முக்கியக் கருத்தாக அவர் சொல்லியிருப்பது இதுதான்.

தமிழ்ப்பள்ளிகளை இழுத்து மூடிவிடலாம். ஆனால், தமிழ் மாணவர்கள் அனைவருக்கும் தமிழைக் கட்டாயப் பாடமாக ஆக்கிவிட வேண்டும். (Tamil schools should close down but with condition that Tamil made compulsory to all Tamil students.)

(முழுக் கட்டுரையைப் படிக்க படத்தைச் சொடுக்கவும்)



அன்பர் வசந்தராவ் எழுதியிருக்கும் கருத்து புதியது அல்ல. ஏற்கனவே, இதே கருத்து கல்வியாளர் இராமசுப்பையா தலைமையில் ஒரு குழுவினால் முன்மொழியப்பட்டது. தமிழ் மக்களிடையே இதற்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பியதால் அந்தக் கருத்து அப்படியே முடங்கிப் போய்விட்டது.

பின்னர், அவ்வப்போது இந்தக் கருத்து தலைதூக்கிக்கொண்டே இருந்தது. ஒவ்வொரு முறையும் மரண அடி வாங்கிக்கொண்டு படுத்துக்கொண்டது. ஆகக் கடைசியாகக் கடந்த 2007இல் இதே கருத்தை ஓர் அரசியல் தலைவர் முன்வைத்தார். ஆனாலும், அவரும்கூட தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்றாரே தவிர, தமிழ்ப் பள்ளிகளை மூடச் சொல்லவில்லை.

இத்தனைக்கும் மேலாக, ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் 'தமிழ்ப்பள்ளிகளை மூட வேண்டும்' என்று பேசி நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய வரலாறு ஒன்று கடந்த 2007இல் நடந்தது.

இப்படியாக, "தமிழ்ப்பள்ளிகளை மூடு! தமிழைக் கட்டாயமாக்கு" என்ற அந்த இத்துப்போன 'பீரங்கிக் குண்டு' ஒவ்வொரு முறையும் சமயலறையில் முள்ளங்கித் தண்டாக அவிந்து போனது.

இப்படிப் புளித்துப்போன வரலாறு ஒருபுறம் இருக்க, அன்பர் வசந்தராவ் மீண்டும் அதே பழைய பல்லவியைத்தான் பாடியுள்ளார். அதனால்தான், தொடக்கத்திலேயே இது ஒன்றும் புதிதல்ல என்று குறிப்பிட்டிருந்தேன்.

இருந்தாலும், அன்பர் வசந்தராவ் அவர்களுக்குச் சில செய்திகளைச் சொல்லியே ஆகவேண்டும் என்பதால்தான் இவ்வளவும் எழுதுகிறேன்.

கடந்த 2007இல் நான் எழுதிய இரண்டு பதிவுகளை இதற்குப் பதிலாக வைக்கிறேன். (கீழே உள்ள தலைப்புகளைச் சொடுக்கவும்.)

பதிவு 1:- தமிழ்ப்பள்ளிகளை ஒழிக்க வேண்டுமா?

பதிவு 2:- தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டுமா?

ஆக, அன்பர் வசந்தராவ் அவர்களும், அவரை ஒத்தக் கருத்துள்ள அன்பர்களும் ஏனையத் தமிழன்பர்களும் அதனைப் படித்து தெளியுமாறு வேண்டுகிறேன்.

அதோடு, அன்பர்கள் தவறாமல் மறுமொழிகளை எழுதுமாறு வேண்டுகிறேன்.

இறுதியாக ஒரு செய்தி. தமிழ்ப்பள்ளியை மூடிவிடலாம் என்ற அடிப்படையற்றக் கருத்தை முன்வைத்த அன்பர் வசந்தராவ் அதனை மீட்டுக்கொள்ள வேண்டும் என தமிழுயிர் கேட்டுக்கொள்ளும் அதேவேளையில், தமிழ்ப்பள்ளியில் படிக்காவிட்டாலும் தன்னார்வத்தின் அடிப்படையில் தமிழைக் கற்றதற்காகவும்; தமிழ்மொழி இந்த நாட்டில் நிலைக்க வேண்டும் என்ற எண்ணத்திற்காகவும்; இணையத்தில் தமிழ்ப்பணி செய்து வருவதற்காகவும் அவருக்குச் சின்னதாய் ஒரு பாராட்டு.

@ஆய்தன்:-
தமிழ்ப்பள்ளிகளை மூடுவதும் – தமிழன்
தனக்குத் தானே குழிப்பறிப்பதும் ஒன்றே!

ஞாயிறு, 16 நவம்பர், 2008

சிறீலங்காவைக் கண்டித்து மலேசியத் தமிழர்கள்

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து கடந்த 14-11-2008இல் பிற்பகல் 2மணி அளவில், மலேசியத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் முன் ஏறக்குறைய இரண்டாயிரம் தமிழர்கள் ஒன்றுதிரண்டு கண்டனப் பேரணி நடத்தினர்.

மலேசியத் தமிழர்கள் சார்ந்த அரசியல் கட்சிகள், அரசு சார்பற்ற இயக்கங்கள், சமுக அமைப்புகள், தமிழ்ப்பற்றாளர்கள், தனியாட்கள் என பல்வேறு தரப்பு தமிழ் மக்கள் அணிதிரண்டு வந்து இந்தக் கண்டனப் பேரணியில் கலந்துகொண்டனர்.

கடந்த 2007இல் நவம்பர் 25ஆம் நாள் நடந்த மாபெரும் உரிமைப் போராட்ட பேரணியில் சற்றேறக்குறைய ஐம்பதாயிரம் தமிழ் மக்கள் கலந்துகொண்டு நாட்டை மட்டுமல்லாது உலகத்தையே அதிரவைத்த வரலாறு படைத்தனர். அதன்பிறகு, அதிகமான தமிழர்கள் ஒன்றுகூடிய மாபெரும் கண்டனப் பேரணியாக இந்தப் பேரணி அமைந்தது.

"ஈழத்தமிழர்கள் படுகொலையைத் தடுத்து நிறுத்த வேண்டும்".
"அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவிக்கும் இலங்கை அரசை எதிர்த்து மாபெரும் கண்டனப் பேரணி"
போன்ற பதாகைகளைக் காணமுடிந்தது.

"கொல்லாதே கொல்லாதே தமிழர்களைக் கொல்லாதே" என்று வானமே அதிரும் வகையில் உரக்க முழக்கமிட்டனர்.

இறுதியில், இலங்கைத் தூதரக அதிகாரிகளிடம் கண்டனத் தீர்மானம் வழங்கப்பட்டது.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் கொலைவெறிபிடித்த சிறீலங்கா அரசுக்கு எதிராகவும் நடத்தப்பட்ட இந்த மாபெரும் கண்டனப் பேரணியில் கலந்துகொண்ட முன்னணித் தலைவர்கள் சிலரின் முழங்கங்கள் பின்வருமாறு:-

1)துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன்:- நாட்டில் கடசி, இயக்கம், மொழி, இனம் ஆகிய வேற்றுமைகளை மறந்து மலேசியத் தமிழர் அனைவரும் ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பது பாராட்டுக்குரியது. இரண்டாவது முறையாக நாம் நமது ஒற்றுமையைக் காட்டி உள்ளோம். இந்த ஒற்றுமை தொடர்ந்தால் மலேசியத் தமிழர்களையும் ஈழத்தமிழர்களையும் யாரும் அசைக்க முடியாது.

2)மலேசியத் திராவிடர் கழகத் தலைவர் ரெ.சு.முத்தையா:- ஈழத்தில் நடக்கும் வன்கொடுமைகளை கண்டு மானமுள்ள தமிழர்கள் இனி பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். இனியும் தமிழன் உதைபடுவதைவிட அவன் உயர்வதற்குரிய வழிகளைக் காண வேண்டும். தமிழ் ஈழம் மலரும் நாளே தமிழர்களின் துயர் தீரும் நாளாகும்.

3)மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தலைவர் இரா.திருமாவளவன்:- உலக வரலாற்றில் சொந்த மக்களை சித்திரவதை செய்யும் கொடிய அரசாங்கம்; இறையாண்மை பேசிக்கொண்டே நாட்டு மக்களை பட்டினிப் போட்டுக் கொல்லும் வஞ்சக அரசாங்கம் இலங்கை அரசாங்கமாகத்தான் இருக்கும்.

4)உலகத் தமிழர் நிவாரணநிதி மையத் தலைவர் வழக்கறிஞர் பசுபதி:- இலங்கை அரசாங்கம் பகிரங்க பயங்கரவாதத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். தமிழர் படுகொலை, பொதுமக்கள் சித்திரவதை போன்ற மனித உரிமை அத்துமீறல்களை உடனே அந்த அரசாங்கம் நிறுத்த வேண்டும்.

5)மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றத் தலைவர் பி.பொன்னையா:- இலங்கை அரசாங்கம் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவிப்பதை நிறுத்தும் வரையில் மலேசியத் தமிழர்கள் யாரும் இலங்கைப் பொருள்களை வாங்கக் கூடாது. குறிப்பாக, ஏர் லங்கா ஏர்லைன்சு விமானச் சேவை, சிறீகங்கா தேயிலை போன்றவற்றை புறக்கணிக்க வேண்டும்.

6)உலகத் தமிழர் மாமன்றப் பொதுச் செயலர் எசு.பி.மணிவாசகம்:- "மாடியிலிருந்து துப்பினால் குடிசையில் விழும். ஆனால், குடிசையிலிருந்து துப்பினால் மாடியே விழும்" என்று ஈழக் கவிஞர் காசி ஆனந்தன் கூறியது விரைவில் நடக்கப் போகிறது. மலேசியத் தமிழர்களின் இந்த உணர்வுப்பூர்வமான கண்டனம் அதிபர் இராசபக்சேவை தட்டியெழுப்ப வேண்டும். தமிழர்களுக்கு இன்னல் என்றால் ஒவ்வொரு தமிழனும் துடித்தெழ வேண்டும்.

7)தமிழர் உதவும் கரங்கள் சமூக இயக்கத் தலைவர் முரளி:- சொந்த நாட்டிலேயே அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டிக்கும் வகையிலும், மனித உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்றும் எங்கள் இயக்கத்தினர் ஒருநாள் உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொள்கிறோம்.

மலேசியத் தமிழர்களின் இந்தக் கண்டனக் குரல் சிறீலங்கா அரசின் மரத்துப்போன காதுகளுக்கு எட்டவேண்டும்..!

ஈழத் தமிழர்களுக்காக உலகமெங்கும் உள்ள தமிழர்கள் வெளிப்படுத்தும் கண்டனக் குரல்கள் சிங்கள மரமண்டைகளைத் தட்ட வேண்டும்..!

உலகத் தமிழர்களின் அழுகையும் கண்ணீரும் சிறீலங்கா கொலைவெறியர்களின் இரக்கமற்ற இதயத்தைப் பிளந்துப் போட வேண்டும்..!


@ஆய்தன்:-
இயற்கையும் இறைமையும் இருப்பது உண்மையென்றால்...
தமிழரின் இன்னல்கள் மறைந்து போகட்டும்!
தமிழரின் துயரங்கள் தொலைந்து போகட்டும்!
தமிழரின் விடுதலை விரைவில் வரட்டும்!
தமிழரின் தனிநாடு தமிழீழம் மலரட்டும்!

செவ்வாய், 11 நவம்பர், 2008

இலங்கைக்கு எதிராகக் கண்டனப் பேரணி



இலங்கை அரசு அந்நாட்டு தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தி வரும் போரால் இலட்சக் கணக்காக மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். அங்கு நடந்து கொண்டிருக்கும் இனப்படுகொலையைக் கண்டித்து போரை நிறுத்தக் கோரும் பேரணி இலங்கை தூதரகத்தின் முன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (14.11.2008) நடபெறவிருக்கிறது.


இலங்கை அரசாங்கப் படையினரின் குண்டுவீச்சு மற்றும் பீரங்கித் தாக்குதலால் இலங்கை தமிழர்கள் பாதுகாப்பின்றி தவிக்கின்றனர். உணவு, குடிநீர், இருக்க இடம் இன்றி தவிக்கின்றனர். இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டு அல்லல் படுகின்றனர்.


இலங்கை இனவாத அரசால் கொல்லப்பட்டு, அழிக்கப்பட்டு வரும் தமிழர்களுக்கு மனிதர்கள் என்ற அடிப்படையில் உதவியும் ஆதரவும் வழங்க வேண்டிய நமது கடமையாகும்.

>> மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்

நன்றி:- மலேசியா இன்று
@ஆய்தன்:-
தமிழா ஒன்றுபடு..!
தமிழருக்காக ஒன்றுபடு..!
தமிழின விடுதலைக்காக ஒன்றுபடு..!