வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

செவ்வாய், 29 டிசம்பர், 2009

மீண்டும் உயிர்த்தது.. தமிழுயிர்..!



இனிய தமிழுயிர்ப் பெருமக்களே....


2010 ஆம் ஆண்டு முதல் தமிழுயிர் மீண்டும் தமது, தமிழ்ப்பணியை தொடரவுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரவித்துக்கொள்கிறோம்.

புதிய கோணத்தில் புதிய கருத்துக்கள் புதிய செய்திகள் உங்களை நாடி வரும்.

தமிழ், தமிழர் சார்ந்த சிந்தனை செறிவுகள் நாட்டு நடப்புககள் அரசியல் அலசல்கள், என பல்துறை பதிவுகள் இனி தமிழுயிரில் வெளிவரும்.


வாசகர்கள் வழக்கம் போல் தங்களின் வற்றாத ஆதரவை நல்கவும். உங்கள் உள்ளக் கிடைக்களை உள்ளது உளளபடி எழுதுங்கள்.

அன்புடன்,
தமிழுயிர் பணியில்,



ஆதவன்

வெள்ளி, 16 அக்டோபர், 2009

தமிழன் போத்திட்டாண்டா பொன்னாடை..!

தமிழகத்திலிருந்து தலைவர்கள் சில இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட செய்தி தெரிந்ததே. அந்தப் பயணத்தின்போது நடந்த கண்கொள்ளாக் காட்சிதான் மேலே இருப்பது. அதைப் பற்றி குண்டுமணி வலைப்பதிவில் வந்த உரைவீச்சு இது.


போர்த்திட்டாண்டா..
தமிழன் பொன்னாடை போர்த்தித்தாண்டா..!

காலம் காலமாய்
வரலாறாய் எழுதி வைத்து..
தமிழினத்தை..
அழித்து துன்புறுத்தியவனுக்கே
சொந்த இனத்தை..
ஊரை விட்டே துரத்திஅடித்தவனுக்கே..

தமிழன்பொன்னாடை போர்த்திட்டாண்டா..
பாரடா பார்.. உலக மைந்தா.

தமிழன் போல்
சன நாய் அக வாதி
உலகில் உண்டோ சொல்
அவன் போல்வீரம்
உனக்கும் வருமா கேள்..??!

மானம் கெட்டதுகள்
வாழ்ந்தென்ன..
வீழ்ந்தே தொலையட்டும் என்றே
அன்னை சோனியாவின் எடுபிடிகளாய்
வடக்கிருந்து வந்து..
தமிழன் பொன்னாடை போர்த்திட்டாண்டா
சிங்களத் தானைத் தளபதிக்கு
பொன்னாடை போர்த்திட்டாண்டா..!

வாழ்க தமிழ் வீரம்
எழுக தமிழக புதிய வரலாறு..
காட்டிக் கொடுப்பதில்
காக்கவன்னியனுக்கு எட்டப்பனே
வழிகாட்டி என்று
புதிய பரணி பாடு..
தமிழா பாடு.

தமிழ் மொழி
கனிமொழி
சிங்களவன் பாதம் தடவினாள் என்று
அவள் வீரம் சொல்லி
உன் பரணியில்
புறணி பாடடா
தமிழாபாடு..!

@ஆய்தன்:-
பன்னாடைத் தமிழன் இருக்கும்வரை
பல்லாண்டா னாலும் எழமாட்டான் தமிழன்..!!

ஞாயிறு, 4 அக்டோபர், 2009

விழ விழ எழுவோம்..!


விழ விழ எழுவோம் என்னும் ஆவணத் திரைப்படம்(30 நிமிடம்) மறுமலர்ச்சிப் பாசறையினரால் வெளியிடப்பட்டுள்ளது.

மிகச் சுருக்கமாகத் தமிழன் வரலாற்றைக் கூறி, முள்ளிவாய்க்கால் அவலங்களைச் சித்தரித்து, பின்னர் இனி என்ன செய்யப்போகிறோம் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ள இந்தக் காணொளி பார்ப்பவர்களைக் கண் கலங்கவைக்கிறது, "விழ விழ எழுவோம் நாம் விழ விழ எழுவோம் ஒன்று விழ நாம் ஒன்பதாய் எழுவோம்" என்ற பாடல் வரிகள் உணர்ச்சிமிக்கதாக அமைந்துள்ளது.

இந்த 30 நிமிட ஆவணப்படம் விரைவில் பிரித்தானியாவில் வெளியிட இருப்பதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


@நன்றி:தமிழ்த்தேசியம்


@ஆய்தன்:-
விழ விழ எழுவோம்
வேறூன்றி நிற்போம்
வின்னிலே ஏறுவோம்
வெற்றிக்கொடி கட்டுவோம்!

புதன், 23 செப்டம்பர், 2009

தமிழர் நலன் காக்க நாம் தமிழர் இயக்கம்



(மேல் விவரம் அறிய இங்கே சொடுக்கவும்)
@ஆய்தன்:-
நாம் தமிழர் - நம் மறை திருக்குறள்

வெள்ளி, 11 செப்டம்பர், 2009

தமிழச்சி தாமரையின் கண்ணீரும் கருஞ்சாபமும்

தமிழகத்தில் வாழும் பல கலைஞர்களுக்குத் கவிஞர் தாமரையின் நேர்மையோ துணிச்சலோ இல்லை. தமிழன் என்று இனமுண்டு; இந்தியன் என்று ஒரு இனமே இல்லை என்று தைரியமாகச் சொல்பவர் தாமரை.

ஈழத்தில் எண்ணற்ற அப்பாவி தமிழ் மக்கள் கொண்டழிக்கப்பட்ட பொழுது எரிமலையான தாமரை “கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம்” என்ற கவிதையை வெளியிட்டார்.

சமீபத்தில் குமுதம் இணையதளம் நடத்திய நேர்காணலில் கவிதையை வாசித்து காண்பித்தார்.

ஒரு சொட்டு தண்ணீருக்காய் விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!

என்ற வரிகள் வாசிக்கும் பொழுது சகோதரியின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. மேலும் வாசிக்க முடியாமல் அழுத தாமரை கொஞ்சம் அமைதிப்படுத்தி கொண்டு மீண்டும் வாசித்தார்.

குழந்தையை பறிகொடுத்த தாயின் துயரம் இன்னொரு தாய்க்குத்தானே தெரியும். நேர்காணலின் இறுதியில் “நான் இந்தியன் என்பதைவிட தமிழச்சி என்பதை பெருமையாக கருதுகிறேன்” என்றார். (விரிவாக)
@நன்றி:தமிழன்பன் பக்கம்
@ஆய்தன்:-
நாம் தமிழர்
நம் மறை திருக்குறள்
உண்மையறி தமிழா
உணர்ந்துகொள் தமிழா

திங்கள், 7 செப்டம்பர், 2009

ஒவ்வொரு தமிழனும் ஒவ்வொரு தீப்பந்தம்: காணொளி

seeman @ Yahoo! Video

@ஆய்தன்:-
ஒவ்வொரு தமிழனும் ஒவ்வொரு தீப்பந்தம்
ஓடு பகையே ஓடு..!!

புதன், 2 செப்டம்பர், 2009

உலகம் ஏன் தமிழர்களைக் கைவிட்டது?

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற உன்னதமான தத்துவத்தை உலகிற்கு அளித்த இனம். தமிழினம் அது மட்டுமல்ல சங்க காலத்திலிருந்தே தமிழர்கள் உலக கண்ணோட்டத்தோடு சிந்தித்தார்கள். திருவள்ளுவர், நக்கீரர், கபிலர், இளங்கோவடிகள், சேக்கிழார், கம்பன் போன்ற பெரும் புலவர்கள் தாங்கள் உரு வாக்கிய இலக்கியங்களை உலகம் என்றே எழுதித் தொடங்கினார்கள். இப்படி உலகம் முழுவதும் மனித குலத்திற்குச் சொந்தமானது.


உலகில் வாழும் மனிதர்கள் யாவரும் உறவினர்களே என்ற உயரிய கொள்கையை தமது இலக்கியங்களில் பொறித்துவைத்த தமிழர்களின் வழிவந்தவர்கள் இலங்கையில் இனவெறிக்கு ஆளாகி அழிவின் விளிம்பில் நின்று கதறியபோது உலகம் ஏன் என்று கேட்கவில்லை. அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டவில்லை. இந்தக் கேள்விகள் எழுப்பியுள்ள சிந்தனை தமிழர்கள் மத்தியில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தப்போவது உறுதி. (மேலும் படிக்க)
@ஆய்தன்:-
விதியே, விதியே, தமிழச் சாதியை
என் செய நினைத்தாய் எனக்குரை யாயோ? -பாரதி

திங்கள், 31 ஆகஸ்ட், 2009

மெர்டேகா...! -ஏழு முறை சொல்லுங்கோ..

வளமிகு மலேசியத்தின் குடிமக்கள் அனைவருக்கும்

52ஆம் ஆண்டு விடுதலை(சுதந்திர) நாள் நல்வாழ்த்துகள்.

மெர்டேகா..! மெர்டேகா..! மெர்டேகா..! மெர்டேகா..!

மெர்டேகா..! மெர்டேகா..! மெர்டேகா..!


@ஆய்தன்:-
ஒரே நாடு
ஒரே எண்ணம்
ஒரே இலக்கு
ஒரே மலேசியா

வியாழன், 27 ஆகஸ்ட், 2009

துப்பாக்கி முனையில் தமிழர்கள் படுகொலை:- சனல் 4 காட்சி


தமிழர்களை அழவைத்த
அந்தக் கொலைக்காட்சி
இதுவும் போதாதா உலகத்துக்கு
எங்கள் இனப்படுகொலைக்குச் சாட்சி....


இறந்த உடல்களெல்லாம்
நிர்வாணமாய் கிடக்க
உயிருள்ள ஓர் உறவின்
உயிர் குடிக்கிறது துப்பாக்கி.....
அவர் உதிரம் நிலம் நனைக்க
அவன் சிரிப்போசை கேட்கிறது....
நாம் சிந்திய இரத்தத்தில்
அவன் சந்தோசம் மிதக்கிறது.....


யார் இவர்கள்....?
எமைக் காத்த தெய்வங்களா....
இல்லை..
ஈழத்து இளம் மயிலா...
அல்லது...
எம் ஊரு காளைகளா....
எம் மொட்டுக்களின் பெற்றோரா...?


புலியாக இருந்தாலும்
பொதுமகனாக இருந்தாலும்
அவன் இறந்தது உனக்காக.....
உன் தேச மீட்புக்காக.......

கண்ணீரும் வற்றி விட்டோம்
கலங்க நேரமில்லை...
புலம்பெயர் உறவுகளே
புலம்ப பொழுதுமில்லை....
புகலிடமே ஒன்று சேரு
உன் பொறுமை நீங்கி போராடு
நீ ஒன்றுசேரத் தாமதித்தால்
மறுபடியும் ஓடும் அங்கே
தமிழன் இரத்த ஆறு....!!

ஆக்கம்:-இளங்கவி (யாழ் இணையம்)


முக்கிய அறிவிப்பு:- இளகிய மனமுள்ளவர்கள் இதனைப் பார்க்க வேண்டாம்

பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் உள்ள இராணுவ வதைமுகாமில், உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லாத நிலையில் தமிழ் இளைஞர்களை நிர்வானமாக்கி, தலையில் சுடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அதிர்ச்சியான இந்த புகைப்படங்களும் காணொளிகளும் எவ்வாறு வெளிவந்தன என்று தொலைக்காட்சி சித்தரித்துள்ளது. (கொடூரத்தைப் படிக்க / பார்க்க)


@ஆய்தன்:-

இரத்தம் உறைகிறது..
குலை நடுங்குகிறது..
இதயம் வெடிக்கிறது..
உயிரின் வேர்வரை துடிக்கிறது..
என் ஈழத்துத்
தொப்புள்கொடி உறவின்
உயிர்பலி..
மரணவலி..!!

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

கதற வைக்கும் காட்சிகள்..!!

கப்பட்ட துண்டு துணிகளைக் கொண்டு பெற்றுத் தாலாட்டிய பிஞ்சுப் பிள்ளைகளின் சிதறிய உடல்களை இயன்றமட்டும் பொதிந்து, மண் தோண்டி அடக்கம் செய்கிற அவகாசம் இல்லாத காரணத்தால் வீதியில் எரிந்தும் எரியாமலும் நின்ற வாகனங்களுக்குள் சொருகி வைத்துச் சென்ற தாய்மார்களின் சோக வலியை நீங்கள் அறிவீர்களா? முள்ளி வாய்க்கால் - வட்டுவாகல் பிரதான வீதியில் மே-17-ம் தேதி நான் கண்டேன். அழுது புலம்பும் இடைவெளி கூட இல்லாத, கடவுளால் சபிக்கப்பட்ட இனமாய் நாங்கள் ஆனோம்.

கடற்கரையில்தான் பிணக்காடென்றால் பிரதான வீதியும் தமிழர் சடலங்களால் நிறைந்து நீண்டு கிடந்தது. சின்னஞ்சிறு பிஞ்சுகளின் சிதறிய உடல்களைக் காணத்தான் நெஞ்சு பொறுக்கவில்லை. இறுகி, உணர்வு செத்து மரத்திருந்த மனது வெடித்தது. ஓவென்று அழ வேண்டும் போலிருந்தது. என் கால்கள் சிதறிக் கிடந்த தமிழர் தசைகள் மேல் பட்டுவிடக்கூடாதே என்ற பக்தியோடு தவண்டு தவண்டு நகர்ந்தேன். (மேலும் படிக்க)
@ஆய்தன்:-
எங்கு சென்றினும் எங்களுக்கேன் இந்நிலை
எதிரிக்கும் வாய்த்திடலாமோ எங்கள் நிலை!!

வியாழன், 13 ஆகஸ்ட், 2009

தமிழனுக்கு உலக முகவரி கொடுத்தவன் ஈழத்தமிழன்

@ஆய்தன்:-

வைரமுத்துவும் ஒரு போதிமரம்தான் - அவ்வப்போது

வைரத்தைப் போலொரு செய்தி தருவதால்..!

புதன், 5 ஆகஸ்ட், 2009

ஈனத்தமிழர்கள் காண வேண்டிய ஈழச்சிறுவன் பேச்சு



@ஆய்தன்:-
தமிழ் இனத்தை மதிக்கிறான் ஈழத்தமிழன்!
தமிழ் இனத்தை மிதிக்கிறான் ஈனத்தமிழன்!


வெள்ளி, 31 ஜூலை, 2009

பொட்டு அம்மான் உயிருடன் உள்ளார்:- இராணுவப் புலனாய்வுத் துறை


விடுதலைப்புலிகளின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதை இலங்கை இராணுவத்தின் புலனாய்வு பிரிவினர் அரசாங்கத்திடம் உறுதிப்படுத்தி உள்ளனர்.


விடுதலைப்புலி உறுப்பினர்களில் காயமடைந்த ஒருவர் குறித்தும் நாட்டிலிருந்து தப்பி செல்ல தயாரான நிலையில் இருந்த இன்னொருவர் குறித்தும் புலிகளின் தகவல் தொடர்புகள் மூலம் தகவல்களை அறிந்துகொண்டதாக இராணுவப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்களில் புலிகளின் உளவுப்பிரிவு தலைவரான பொட்டு அம்மானும் ஒருவர் என்பதும், அவரை குருவி என்ற புனை பெயரால் புலிகள் குறிப்பிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதே சமயம் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிருந்த கொழும்பு பிரபா என்றழைக்கப்படும் விடுதலைப்புலி இயக்கத்தின் உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவல்களுக்கு அமைய இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொழும்பில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் 6வது மாடியை ராணுவத்தினர் சோதனை யிட்டுள்ளனர்.

எனினும், இராணுவத்தினர் அங்கு செல்லும் முன்னரே அங்கிருந்தவர்கள் தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகின்றது. இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ள நபர் தெரிவித்த இடத்தில் விடுதலைப் புலிகளின் புலனாய்வு பிரிவினர் இருப்பதாக தகவல்களை வழங்கியுள்ளார்.
இந்த தகவல் வழங்கப்பட்ட சில மணி நேரத்தில் புலிகளின் புலனாய்வு பிரிவினர் என கூறப்படுவோர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதனை பார்க்கும் போது புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு நகரில் வலுவான நிலையில் இருப்பது உறுதியாக இருப்பதாக இராணுவத் தரப்பு தகவல்கள் கூறுகின்றன.

விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவின் தலைவர் உயிருடன் இருப்பது உறுதியாகி உள்ள நிலையில் அவர்கள் நாட்டில் இருந்து தப்பி சென்றது குறித்து தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக இராணுவத் தரப்பு தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
@செய்தி: நக்கீரன்
@ஆய்தன்:-
ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே - நம்
பொறுமையின் பொருள்மட்டும் விளங்கட்டுமே
வருங்காலத்திலே நம் பரம்பரைகள் - நாம்
அடிமையில்லை என்று முழங்கட்டுமே..!

வெள்ளி, 10 ஜூலை, 2009

ஈழம், நேற்று - இன்று - நாளை:- சீமான் நேர்க்காணல் காணொளி


பகுதி 1


பகுதி 2


பகுதி 3


ஆய்தன்:-
நிலம் வீழலாம்!-எங்கள்
நெஞ்சம் வீழாது!
களம் மாறலாம்-எங்கள்
உளம் மாறாது!
எல்லாம் முடிந்தது என்று
இறுமாந்திருக்காதே பகையே!
காலம் வரும்வரை பொறுத்திருப்போம்
கரும் புலிகளின் சாம்பலில் இருந்து
உயிர்தெழுவோம்!!!!!!!!!!!!

திங்கள், 6 ஜூலை, 2009

மலேசியாவில் நடந்த 'உயிர்தெழுவோம்' நிகழ்ச்சி


உலகநாடுகளின் கூட்டுச் சதியால் சரிந்த தமிழர் சேனையின் சாம்பலிலிருந்து புறப்படும் புதுப்புயலாக கிளம்பியுள்ள ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான மலேசியத் தமிழ் உறவுகளின் 'உயிர்த்தெழுவோம்' நிகழ்வு மலேசியா கோலாலம்பூர் நகரில் பேரெழுச்சியுடன் நடைபெற்றது.


6-7-2009 பிற்பகல் 5மணிக்கு பிரிக்பீல்ட்டு சாரணியர் மண்டபத்தில் உலகத்தமிழர் அறங்காவலர் சபைத் தலைவர் பசுபதி தலைமையில் ஆரம்பமானது. இந்த நிகழ்வில் அகவணக்கம், பொதுச்சுடர், ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து கரும்புலி மாவீரர்களுக்கு மக்களால் மலர் வணக்கம் செய்யப்பட்டது.


அதனைத் தொடர்ந்து உயிர்த்தெழுவோம் நிகழ்வு உறுதியுரை வாசித்தளிக்கப்பட்டது. மற்றும் மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தலைவர் திருமாவளவனின் எழுச்சிமிக்க உரை, தமிழீழ எழுச்சிப் பாடல்களுக்கான மாணவியரின் நாட்டியங்களும் நடைபெற்றன.


@நன்றி:- வர்மன்-தமிழ்த்தென்றல்

@ஆய்தன்:-
ஈழத் தாயகத்திற்கு வித்தாகிப் போயிருக்கும்
எமது வீரத்தமிழ் வேங்கைகளுக்கு வீரவணக்கம்!

சனி, 4 ஜூலை, 2009

'உயிர்த்தெழுவோம்' விடியலுக்குத் தொலைவில்லை..!

மலேசியத்தில் 'உயிர்த்தெழுவோம்' நிகழ்ச்சி



தமிழீழத்தில் தடுப்பு முகாம்களிலும், வதை முகாம்களிலும் தினம்தோறும் அடிப்படை வசதிகள் இன்றி வாடிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழ் மக்களின் உயிர் காக்கவும் அவர்களை மீட்டெடுத்து மீள் குடியேற்றவும், ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தமிழீழத் தனியரசுக்கான இலட்சிய வேட்கையை உலக சமூகத்துக்கு எடுத்துரைக்கவும், மலேசிய தமிழ் மக்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தவும் “உயிர்த்தெழுவோம்” நிகழ்வு நடைப்பெறவுள்ளது.

அத்துடன், தமிழினப் படுகொலையைச் செய்த சிறீலங்கா அரசை சர்வதேசக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த குரல் கொடுக்க வேண்டியது மலேசிய தமிழ் மக்களின் கடப்பாடு ஆகும்.

இறுதிக்கட்டப் போரில் வீரச்சாவைச் தழுவிக் கொண்ட மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வாகவும் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்குக் கண்ணீர் வணக்கம் செலுத்தும் நாளாகவும் உயிர்த்தெழுவோம் நிகழ்வு கீழ்க்கண்டவாறு நடைப்பெறவுள்ளது.

நாள் : 5 சூலை 2009 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம் : இரவு மணி 7.00 முதல்

இடம் : சாரணியர் மண்டபம், பிரிக்பீல்ட்டு. கோலாலம்பூர்.

இது அழுவதற்கான தருணம் அல்ல. அக்கினிப் பறவைகளாக உயிர்த்தெழுவோம். வீறுகொண்டெழுந்து தமிழீழத் தேசத்தை மீட்டெடுக்க உலகத் தமிழ் மக்களுடன் சேர்ந்து உரிமைக் குரல் கொடுக்க தமிழ் இயக்கங்கள், உணர்வாளர்கள், ஆர்வலர்கள் திரளாக கலந்து கொள்ளும்படி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

மேலதிகத் தொடர்புகளுக்கு : 016-3262479 / 012-3142900 / 016-6031085

@செய்தி:-மலேசியாஇனறு

இத்தகு 'உயிர்த்தெழுவோம்' நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் பல நாடுகளில், ஒரே காலத்தில் நடைபெறவிருக்கின்றன.

@ஆய்தன்:-
தமிழன் இல்லாத நாடில்லை!
ஆனால்..
தமிழனுக்கு ஒரு நாடு இல்லை!
அதனால்..
தமிழனுக்கு உலகில் நாதியில்லை!
ஆகவே..
தமிழன் உயிருக்கு எங்குமே மதிப்பில்லை!
இருந்தாலும்..
உயிர்த்தெழுவோம் விடியலுக்குத் தொலைவில்லை..!

வியாழன், 2 ஜூலை, 2009

சிறிலங்காவில் தமிழினப் படுகொலை:- மலேசியா, சொகூரில் கண்டனம்

சிறிலங்கா அரசாங்கம் ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்றுள்ளது. தமிழ் இன அழிப்பில் தீவிரமாக இருக்கும் சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து 300,000 தமிழர்களை தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்துள்ளது.


அந்தத் தடுப்பு முகாம்களில் தமிழர்கள் அனுபவிக்கும் அவலங்கள் எண்ணற்றவை. அம்முகாம்களில் போதுமான உணவு, குடிநீர், மருத்துவ மற்றும் சுகாதார வசதிகள் கிடையாது. பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இளைஞர்கள் கடத்தப்படுகின்றனர். குழந்தைகள் செத்து மடிகின்றன.

சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களுக்கு எதிராக இழைக்கும் இக்கொடுமைகள் கண்டிக்கப்பட வேண்டும். மனித உரிமை அத்துமீறல்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.

மலேசியர்களின் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவிப்பதற்காக சொகூர் மாநில மனித உரிமைக்குழு (Johor Human Rights Group) ஒரு கண்டனக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.

வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் கண்டனக் கூட்டத்தில் மலேசிய சோசலிசக் கட்சியின் தலைவர் மருத்துவர் நசீர், சுவாராமின் நிகராளி நியாம், செம்பருத்தியின் கே.ஆறுமுகம் ஆகியோர் முறையே மலாய், சீன, தமிழ் மொழிகளில் உரையாற்றுவார்கள்.

மலேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையர் டத்தோ. சிவசுப்பிரமணியம் சிறப்புரையாற்றுவார்.

மலேசியர்கள் அனைவரும் இக்கண்டன கூட்டத்திற்கு திரண்டு வருமாறு சொகூர் மாநில மனித உரிமைக்குழு அழைக்கிறது.

சிறிலங்கா தமிழ் இனப்படுகொலை கண்டனக் கூட்டம் கீழ்க்கண்டவாறு நடைபெறும்:-

நாள்:- 05.07.2009 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்:- பிற்பகல் மணி 2.00 லிருந்து
இடம்:- தேவான் ஆயாதி, மாவார் வளாகம், சுங்கை சாட் சாலை, சொகூர் பாரு.

மேல் விபாங்களுக்கு:-
நாகரத்தினம் 012-7571994 / செல்வகுமார் 013-7773030 / மோகன் 019-7102895

@செய்தி:-மலேசியாஇன்று
@ஆய்தன்:-
தமிழா ஒன்றுபடு! தமிழுக்காக ஒன்றுபடு!
தமிழால் ஒன்றுபடு! தமிழருக்காக ஒன்றுபடு!

வியாழன், 25 ஜூன், 2009

தமிழ் இணையத்தளம் - வலைப்பதிவுகளுக்கு 'இளந்தமிழர் இயக்கம்' அவசர வேண்டுகை

மிழ் ஈழ ஆதரவு இணையத்தளங்களுக்கும் - வலைப்பதிவுகளுக்கும் தமிழகத்தில் செயல்படும் 'இளந்தமிழர் இயக்கம்' அவரச வேண்டுகை ஒன்றினை முன்வைத்துள்ளது. அதன் முழு அறிக்கை இது:-


இன அழிப்பு உச்சத்தை எட்டிய 19/5 க்குப் பிறகு தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களைப் பற்றியும் விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பற்றியும் உலகத்தமிழர்கள் மத்தியில் பல்வேறு விதமான குழப்பங்களும் சந்தேகங்களும் உலா வருகின்றன. பல்லாயிரக்கணக்கில் நடந்த படுகொலைகளை மறந்து விட்டு, தலைவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதத்திற்குள் நாம் ஆழ்ந்து போக வேண்டும் என்று சிங்கள அரசு விரும்பியவாறே தற்பொதைய நிலவரங்கள் உள்ளன.

மேலும், இயக்கத்தில் உள்ளதாக சொல்லப்படும் சில தலைவர்களின் அறிக்கைகள், “போராளிகள்” என அடையாளப்படுத்தப்படும் சிலரது கட்டுரைகள் சிங்கள அரசின் உளவுத்துறைக்கு நேரடியாகவே துணைபோவதாக நாம் கணிக்கிறோம்.

புலம் பெயர் வாழ் தமிழ் மக்களின் இணைய வலைப்பின்னலில் இந்திய உளவுத்துறையான றோ அமைப்பு ஊடுருவியுள்ளதாக அதிர்வு இணையம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்ததை நாம் அறிவோம்.

ஆயுதப் போராட்டம் நடத்தியது தவறு என்று சொல்வதும், இயக்கத்தின் கடந்த காலத் தவறுகள் குறித்து பட்டியலிடுவதுமாக சில கட்டுரைகள் கூட வெளிப்பட்டன. இயக்கத்திற்குள் நடைபெற வேண்டிய விவாதங்கள் பொது விவாதங்களாக்கப்பட்டுள்ளன. அதற்கு மிகச் சமீபத்திய உதாரணம், சில இணையதளத்தில் வெளியான “இன்னொரு இறைவன் வரமாட்டான் எங்களைக் காப்பாற்ற” என்ற கட்டுரை. இயக்கத்தின் மீது சேறடிக்கும் விமர்சனங்களை எழுப்பும் அக்கட்டுரை பொது விவாதத்தளத்திற்கு விடப்பட்டிருப்பது வருத்தத்திற்குரியது. அக்கட்டுரையில்,

*தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவு பலவீனப்பட்டிருந்தது,
*புலிகள் இயக்கத்தின் சகல மட்டங்களிலும் சிங்கள உளவுப்பிரிவினர் ஊடுருவியிருந்தனர்,
*சமாதானக் காலத்தில் இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் வழி சொகுசு வாழ்க்கைப் பழக்கப்படுத்தப்பட்டது,
*இயக்கத்திற்குள் சிங்கள இராணுவம் ஊடுருவல்,
*கட்டாய ஆள் சேர்ப்பு

உள்ளிட்ட எண்ணற்ற விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை குறித்து நேரடியாக எந்தக் கருத்தையும் வெளியிடுவதற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தவிர வேறு யாருக்கும் உரிமையிருக்க முடியாது.

ஏனெனில், இவை அனைத்தும் இயக்கத்தின் நடவடிக்கைகள் குறித்த உள்ளரங்கத் திறனாய்வுச் செய்திகள். இவை உண்மையா பொய்யா என்பதல்ல எமது அக்கறை. தமிழீழ விடுதலைப்புலிகள் குறித்து எதிர் முகாம் மேற்கொள்ளும் வழமையான அவதூறு பரப்பலின் அனைத்து அம்சங்களும் இந்த ஒரேக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளதை நாம் கவனிக்க வேண்டும். எழுதியவர் நோக்கத்தைக் குறித்து நாம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அதே வேளை, இக்கட்டுரை ஏற்படுத்தும் விளைவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் இன்று சந்தித்திருக்கும் பின்னடைவு அவ்வியக்கம் கடந்த காலத்தில் செய்த தவறுகளின் விளைவு என்று பரவலாக பரப்புரை செய்யப்படுகின்றது. இப்படி செய்பவர்கள் அனைவரும் ஈழத்தில் இன அழிப்பு நடந்ததையோ இன்றும் முகாம்களில் விலங்குகளை போல அடைக்கப்பட்டுள்ள 3 இலட்சம் தமிழர்களின் வாழ்வை குறித்தோ அநியாயமாக திருப்பி அனுப்பப்பட்ட “வணங்காமண்” கப்பல் குறித்தோ எந்தப் போராட்டத்தையும் முன்னெடுக்காதவர்கள் என்பதும், இவர்கள் அனைவரும் இலங்கையிலும் தமிழகத்திலும் அரசதிகாரத்தின் ஒட்டுக் குழுக்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் நாம் அறிந்த செய்திகள். இந்நிலையில் இயக்கத்தின் மீது போகிற போக்கில் விமர்சனங்களை வீசும் மேற்கண்ட கட்டுரை இயக்கத்தின் ஆதரவு முகாமிலிருந்தே வெளியிடப்பட்டிருப்பது ஒட்டுக் குழுக்களுக்கு ஊட்டமளிக்கும் செயலாக அமைந்து விடும்.

ஏசியன் ட்ரைபியுன்” இணையதளம் நேற்று(22.06.09), தலைவர் பிரபாகரனை படுகொலை செய்தது பொட்டு அம்மானாகவே இருக்க முடியும் என்ற பொருளில் தலைவர் பிரபாகரனுக்கு எதிராக புலிகளின் புலனாய்வுப் பிரிவு செயல்பட்டது என்று கட்டுரை வெளியிட்டுள்ளது. இச்செய்தியை சிங்கள இராணுவம் வெளியிட்டதாக “ஏசியன் ட்ரைபியுன்” குறிப்பிட்டுள்ளது. இந்தக் கட்டுரை தமிழகத்தில் தினத்தந்தி நாளிதழில் விரிவாகவே வெளியிடப்பட்டுள்ளது. ஆக, பொட்டு அம்மான் மீதும் புலிகளின் புலனாய்வுப்பிரிவின் மீதும் தமிழர்கள் மத்தியில் களங்கம் ஏற்படுத்தும் முயற்சி தொடங்கப்பட்டதை நாம் உணர முடிகின்றது.

இந்தப் பின்னணியில் சில இணையதளம் வெளியிட்ட கட்டுரை தெரிந்தோ தெரியாமலோ சிங்கள உளவுத்துறையின் சதியின் ஒரு பகுதியாக மாறும் ஆபத்திருக்கிறது.

இது போன்ற சூழல்களை தவிர்ப்பது போராடும் இனத்திற்கு தேவையான அடிப்படை ஒழுங்கு என்று நாம் கருதுகிறோம். எந்த இயக்கமும், தலைமையும் விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டது அல்ல. ஆனால், விமர்சனம் செய்யப்படுவதற்கென்று களமும் காலமும் இருக்கின்றது. இணையதளங்கள் அதற்கான களமல்ல. இது அதற்கான காலமும் அல்ல. இதை ஒரு தீவிர சிக்கலாகவே கணக்கில் எடுத்துக் கொண்டு தமிழர் இணையதளங்கள் செயல்பட வேண்டும் என்று வேண்டுகிறோம்.

தோழமையுடன்,
க.அருணபாரதி,
ஒருங்கிணைப்பாளர், இளந்தமிழர் இயக்கம்

@ஆய்தன்:-

தமிழீழத் தாயகமே நமது இலக்கு - எதிர்வரும்

தடைகளை எல்லாம் தூள்தூளாக நொறுக்கு...!!

ஞாயிறு, 21 ஜூன், 2009

தேசியத் தலைவர் இல்லை என்பது புலிகளின் புதிய போர் உத்தியா?



தாய் மண்ணை விடுவிக்கும் போராட்டத்தை புதிய வியூகத்துடனும் பழைய வேகத்துடனும் தொடர்ந்து செல்வதற்கான வழிமுறைகளில் தீவிரமாக இருக்கிறது ஈழத் தமிழினம். புலம் பெயர்ந்து வாழும் அவர்களின் சொந்தங்கள் இதற்கான முழு ஒத்துழைப்பையும் அளித்து வருகிறது. இந்நிலையில், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புலனாய்வுத்துறையின் வெளியகப் பணிப்பிரிவு பொறுப்பாளர் கதிர்காமத் தம்பி அறிவழகனிடமிருந்து நம்பமுடியாத ஓர் அறிக்கை வெளியானது.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு வீரவணக்கம் செலுத்தி தொடங்கியுள்ள அந்த அறிக்கையில், "எமது தேசியத்தலைவர் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் சரணடைந்ததாக வும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின் கொல்லப்பட்டதாகவும் அவர் தற்கொலை செய்துகொண்டார் எனவும் பல்வேறு மாறு பட்ட செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. எமது தலைவர் சரணடையவோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை சிறிலங்கா படை யினருடன் போரிட்டே வீரகாவியம் ஆகினார்' என்று அறிவழகனின் அறிக்கை தெரிவிக்கிறது.
பிரபாகரன் பற்றி விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் வெளியிட்ட அறிக்கையை உட னடியாக மறுத்து அறிக்கை விட்டவர்தான் அறிவழகன். அவர் பத்மநாதன் வழியில் இப்போது அறிக்கை வெளியிட்டிருப்பதால் உலகத் தமிழினம் பதைபதைப்பும் குழப்பமும் அடைந்திருக்கிறது. இந்த அறிக்கையின் பின்னணி என்ன என்பது பற்றி விடுதலைப்புலிகளின் சர்வதேச அளவிலான செயல்பாட்டாளர்களிடம் நாம் விசாரித்தோம்.
"இறுதிக்கட்டப் போரின்போது சிங்களப் படையினர் திணறிப்போகும் வகையில் ஊடறுப்புத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி, விடுதலைப் போராட்டத்தைத் தொடர் வதற்காக வெளியேறினார் எங்கள் தேசியத் தலைவர். சிங்கள அரசோ விடுதலைப் புலிகளை முற்றிலுமாக அழித்துவிட்டதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறது. அது சொல்லிக் கொண்டிருக்கும் பொய் எங்களுக்கு ஒரு வழியில் நல்லதுதான்.
உலகில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப் பட்டுள்ள தடையை நீக்குவதுதான் இப் போதைய எங்களின் முதல்பணி. பிரபாகரன் இல்லை என சிங்கள அரசாங்கமே சொல்லும் போது விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கான தடை தேவையற்றது என்ற வாதத்தை வைத்து நாங்கள் தடையை நீக்கப் போராடுவோம். அந்த நிலைப்பாட்டின் அடிப்படை யில்தான் அறிவழகனின் அறிக்கையும் வெளியாகியுள்ளது. இதுவும் விடுதலைப் போரின் ஒரு யுக்திதான்.
ஈழத்தமிழர்கள் குறிப்பிடத்தக்க அளவில் வாழும் அசுத்திரேலியாவில் புலிகள் இயக்கத்திற்கு தடை கிடையாது. இப்போது அங்கும் தடை விதிக்கக் கோரியது இலங்கை அரசு.
ஆனால், அசுத்திரேலிய அரசோ, புலிகள் இயக்கத்தை அழித்துவிட்டதாக நீங்களே சொல்கிறீர்கள். பிறகு எதற்கு தடை. நாங்கள் தடை விதிக்க முடியாது எனச் சொல்லிவிட்டது. இதே அடிப்படையில் மேற்குலக நாடுகளில் எங்கள் இயக்கத்திற்கு உள்ள தடையை நீக்கப் பாடுபடுவோம்.
சிங்கள அரசின் மனிதஉரிமை மீறல்கள் வெளிப்படையாகக் கண்டிக்கத் தொடங்கி யுள்ள அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் எங்கள் இயக்கத்திற்கு உள்ள தடையை நீக்கி, விடுதலைப் போராட டத்திற்கான ஆதரவைத் திரட்டுவதுதான் தற்போதைய எங்கள் திட்டம். நாடு கடந்த தமிழீழத் தாயகம் என்ற முறையில் செயல்படத் தொடங்கியுள்ளோம்.
தற்போதைய நிலையில் தமிழீழக் குடியரசை வெளிநாட்டில் நிறுவுவது என்றும் அதன் மூலமாக சர்வதேச சமுதாயத்தின் ஆதரவைப் பெருக்குவது, புலிகள் மீது தடையில்லா உலகத்தை உருவாக்கியபின், எங்கள் தேசியத் தலைவரின் தலைமையில் இலங்கை மீது போர் தொடுப்பது என நீண்ட திட்டங்கள் உள்ளன. இவை சிதைந்து விடக்கூடாது என்ற அடிப்படையில்தான் அறிவழகனின் அறிக்கை வெளியாகியுள்ளது.
புலிகள் இயக்கத்திற்கு தடை விதிக்க மறுத்த அசுத்திரேலியாவிலோ அல்லது புலம் பெயர் தமிழர்கள் பெருமளவில் உள்ள கனடாவிலோ நாடு கடந்த தமிழீழத் தாயகத்தை நிறுவுவதற்கான பணிகளை உருத்திரகுமாரன் தலைமையிலான ஈழத்தமிழர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். நேதாசி இப்படித்தான் வெளிநாட்டிலிருந்து கொண்டு சுதந்திர இந்தியாவை பிரகடனம் செய்தார்.
இன்று விடுதலைப்போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும் பலர் இதே முறையில் செயல்படுகின்றனர். உலக நாடுகளின் ஆதரவைப் பெறும் வகையில் எங்களின் நாடு கடந்த தமிழீழக் குடியரசின் பணிகள் இருக்கும்'' என விரிவாகத் தெரிவித்தனர்.
ஈழ விடுதலைப் போராட்டத்தை சர்வதேச அளவில் எழுச்சி பெறச் செய் திருக்கிறது ராஜபக்சே அரசின் மனிதத் தன்மையற்ற கொடூரத் தாக்குதல்.
@நன்றி:-விகடன்

சனி, 20 ஜூன், 2009

"தேசியத் தலைவர் வீரமரணம்" என்று புலிகள் அறிவித்ததாக அறிக்கை



செய்திக்குப் போகும் முன்…


பின் வரும் செய்தி தமிழீழ விடுதலைப் புலிகளின் முத்திரையுடன் கூடிய அறிக்கையாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. தலைவர் வீரமரணமடைந்தார் என முதலில் அதிகாரப் பூர்வமாக செல்வராசா பத்மநாதன் அறிக்கை விட்டபிறகு, அதனை மறுத்து தலைவர் நலமாக உள்ளார் என அறிவித்தது இந்த உளவுப் பிரிவுதான்.

அதே உளவுப் பிரிவு அலுவலகத்திலிருந்துதான் இந்த புதிய அறிக்கை ‘அறிவழகன்’ பெயரில் வெளியாகியுள்ளது.

இந்த அறிக்கையை தமிழ்நெட் இன்னமும் வெளியிடவில்லை. மற்ற தளங்களில் பெரும்பாலானவை வெளியிட்டுள்ளன.

இந்த அறிக்கையின் பின்னணி, இதில் வேறு ஏதேனும் ‘மறைபொருள்’ உள்ளதா என்பது குறித்து பின்னர் ஆராயலாம்… இப்போதைக்கு அமைதியாக இருப்போம் என்பதே இந்த அறிக்க சொல்லும் செய்தி!

முதலில் நாமும் இந்த அறிக்கையை அப்படியே வெளியிட்டோம். பின்னர் ஒரு முக்கியமான தலைவர் மற்றும் ஈழ ஆதரவாளர்கள் சிலரின் தொடர்ச்சியான விளக்கங்களின் பேரில் இந்த முன்குறிப்பைத் தருகிறோம்.

முதல்வர் கலைஞருக்கு இந்த விவகாரத்தில் பல சந்தேகங்கள் இருப்பதாகவும், அதனாலேயே அவர் அமைதி காப்பதாகவும் தமிழக உளவுத் துறை அதிகாரி ஒருவரும் மற்றும் தடவியல் துறையின் அதிகாரி ஒருவரும் சற்று முன் நம்மிடம் தெரிவித்தனர். அவர்கள் விவரம் இப்போதைக்கு வேண்டாம்.

மற்றபடி பிரபாகரன் குறித்து ஆயிரக்கணக்கான செய்திகளில் ஒன்றாக இதனை எடுத்துக் கொள்ளுங்கள்…!

--------------------------------------

எம் பாசத்துக்குரிய தமிழ் பேசும் மக்களே!

எமது இயக்கத்தின் தலைவரும் பிரதம ராணுவத் தளபதியுமான தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வீரச்சாவு அடைந்துவிட்டார் என்பதனை விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை இப்போது உறுதிப்படுத்தியிருக்கின்றது.

*தேசியத் தலைவர் அவர்களைப் பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர்த்தும் முயற்சிகள் தொடர்பான இறுதி நேரச் சம்பவங்கள் பற்றிய தகவல்கள் அறிந்த - தற்போது பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ள - எமது புலனாய்வுப் போராளிகள் வேறு துறைப் போராளிகள் மற்றும் இலங்கை படைத் துறையின் உயர் பீடத்துடன் தொடர்புடைய எமது தகவலாளர்கள் ஆகியோர் தலைவர் அவர்களது வீரச் சாவினை இப்போது உறுதிப்படுத்துகின்றனர்.

கடந்த மே மாதத்தின் நடுப் பகுதியில் - 15 (வெள்ளிகிழமை) முதல் 19 ஆம் திகதி (செவ்வாய்கிழமை) வரையான காலப் பகுதியில் வன்னி - முள்ளிவாய்க்கால் களப் பிரதேசத்திலிருந்து முரண்பட்ட பல தகவல்கள் வெளிவந்தபடி இருந்தன.

சீரான தகவல் பரிமாற்ற வசதிகள் இருக்காமையாலும் அங்கிருந்து வெளியேறிய எமது புலனாய்வுப் பேராளிகள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று சேர முடியாமல் இருந்தமையாலும் அவர்களால் அனுப்பப்பட்ட பல தகவல்கள் சிதைவடைந்த நிலையிலேயே வெளியில் கிடைத்திருந்தன.

அதனால் - அப்போது கிடைத்த தகவல்களைச் சீர்ப்படுத்தி எடுத்ததன் அடிப்படையில் - எமது அன்புக்குரிய தலைவர் அவர்கள் நலமாக இருப்பதாகக் கருதியே அவ்வாறான ஒரு செய்தியை வெளியிட நாம் மே மாதம் 22 ஆம் நாள் தீர்மானித்தோம்.

இதே வேளை - தலைவர் அவர்களது பாதுகாப்பான இருப்பு மற்றும் நகர்வுகள் தொடர்பாக - இறுதிவரை அவருடன் கூட இருந்த தளபதிகளால் பல தகவல்கள் வழங்கப்பட்டு வந்தன. இவற்றின் அடிப்படையிலேயே - எமது இயக்கத்தின் அனைத்துலக உறவுத் துறையின் இயக்குனர் செல்வராசா பத்மநாதன் அவர்களும் - ஆரம்பத்தில் - இரு வேறு முரண்பட்ட செய்திகளைத் தரும் சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டிருந்தார் என்பதையும் எம்மால் உணர முடிகின்றது.

குழப்பியதற்காக மன்னிப்பு கேட்கிறோம்…

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது அந்த மாபெரும் தியாகம் தொடர்பான உறுதிப்படுத்தப்படாத ஒரு செய்தியை 22 ஆம் திகதி வெளியிட்டமைக்காக வருத்தப்படுகின்ற அதே வேளையில், அவ்வாறான ஒரு செய்தியை வெளியிட்டு குழப்பகரமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியதற்காக எமது அன்புக்குரிய மக்களிடம் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை மன்னிப்புக் கோருகின்றது.

எமது தேசியத் தலைவரின் வீரச்சாவு தொடர்பாக பல்வேறு தரப்பினர் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வந்தனர். அவர் கைது செய்யப்பட்டதாகவும் சரண் அடைந்ததாகவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின் கொல்லப்பட்டதாகவும் அவர் தற்கொலை செய்துகொண்டார் எனவும் பல்வேறு மாறுபட்ட செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் - எந்த செய்தியினையும் தகவலையும் முழுமையாக உறுதிப்படுத்தி வெளியிட வேண்டிய கடமை புலனாய்வுத்துறையினர் ஆகிய எமக்கு உண்டு.

அதனடிப்படையில் - தேசியத் தலைவர் அவர்கள் சரணடையவோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை என்பதையும் அவர் இலங்கை படையினருடன் போரிட்டே வீரகாவியம் ஆகினார் என்பதையும் நாம் மிகத் திடமாக உறுதிப்படுத்துகின்றோம்.

இப்போது தோன்றியுள்ள மிக உச்ச நெருக்கடியான கால கட்டத்தில் - எம் பெருந் தலைவர் அவர்கள் உருவாக்கி வளர்த்தெடுத்து நமது கைகளில் தந்து விட்டுச் சென்றுள்ள எமது விடுதலைப் போராட்டத்தை - அதே உறுதிப்பாட்டுடனும் அதே கட்டுக்கோப்புடனும் அதே ஒருங்கிணைவுடனும் நாங்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

தமிழீழ அரசுக்காக இணைந்து பாடுபடுவோம்…

எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் எமது இறுதி இலட்சியத்தை நோக்கிய எமது போராட்டத்தின் அடுத்த படிநிலையாக - தற்போது உருவாக்கப்படவுள்ள ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ அமைவதற்கு நாம் எல்லோரும் சேர்ந்து பணியாற்றுவதே எம் முன்னால் உள்ள கடமையாகும்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுக்கும் அவருடன் வீரச்சாவடைந்த எமது இயக்கத்தின் போராளிகள் தளபதிகளுக்கும் வீரவணக்கத்தைச் செலுத்துவதுடன் இந்தப் போரில் படுகொலை செய்யப்பட்ட எமது பாசத்துக்குரிய மக்களுக்கு விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை தனது அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்ளுகின்றது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், உயிருடன் இருப்பதாக கூறப்படும் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான் குறித்து அறிவழகன் அறிக்கையில் பெயர் குறிப்பிட்டு எந்தத் தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-----------------------------------------

இவ்வாறு விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை அறிவித்துள்ளதாக அந்த அறிக்கை கூறிக்கொண்டது.

@ஆய்தன்:-

*(தேசியத் தலைவர் அவர்களைப் பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர்த்தும் முயற்சிகள் தொடர்பான இறுதி நேரச் சம்பவங்கள் பற்றிய தகவல்கள் அறிந்த - தற்போது பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ள - எமது புலனாய்வுப் போராளிகள் வேறு துறைப் போராளிகள் மற்றும் இலங்கை படைத் துறையின் உயர் பீடத்துடன் தொடர்புடைய எமது தகவலாளர்கள் ஆகியோர் தலைவர் அவர்களது வீரச் சாவினை இப்போது உறுதிப்படுத்துகின்றனர்.)

இங்கு ஒன்று மட்டும் புரியவில்லை. தேசியத் தலைவரை முக்கியமான இடத்துக்கு மாற்றும் போது எந்தத் தளபதியும் அவருடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாமல் காப்பதற்குத் தானே நினைப்பர். ஆனால், இங்கு தலைவர் கொல்லப்பட்டு அவரின் உதவியாளர்கள் பத்திரமாக பாதுகாப்பு பகுதிக்கு வந்து விட்டதாக கதை செல்லப்படுகிறது. இது எப்படி சாத்தியம்? என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.