வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

சனி, 18 அக்டோபர், 2008

மதுவிளம்பரம் செய்யலாமா? ம....தைத் தின்னலாமா?

17-10-2008இல் மலேசிய நண்பன் நாளிதழ் முழுப் பக்கத்தில்; முழு வண்ணத்தில் வெளியிட்ட மகா கேவலமான விளம்பரம்தான் மேலே நீங்கள் பார்ப்பது.

தமிழன் என்றாலே குடிகாரன் என்றும் 'இந்தியா மாபோக்' என்றும் மற்ற இனத்துக்காரன் நம்மைப் பார்த்து பேசுகிறான் என்றால், அதற்கு இப்படிப்பட்ட விளம்பரங்கள் தான் காரணம்.

தீபாவளி வந்துவிட்டாலே போதும். இந்த மது(பியர்) விளம்பரங்கள் நமது நாளிதழ்களில் பக்கத்திற்குப் பக்கம் வந்து கண்ணைப் பறிக்கும்.. அத்தோடு கூடவே நமது கலை பண்பாட்டைக் கலக்கோ கலக்கென்று கலக்கும்!!

தீபாவளி என்று வந்தாலே இந்தத் தமிழன் குடிப்பான்.. கூத்தடிப்பான் என்று மது நிறுவனங்கள் நன்றாகத் தெரிந்து வைத்துள்ளன. நாட்டில் உள்ள அத்தனை மது (பியர், பிராந்தி, விசுக்கி, ரம்மு) நிறுவனங்களும் போட்டிப் போட்டுக்கொண்டு விளம்பரங்களைப் போட்டு தூள் கிளப்புகின்றன.. கூடவே சேர்த்து தமிழன் மானத்தையும் கெடுக்கின்றன!!

இப்படியாக, மது நிறுவனங்கள் தமிழனையும், தீபாவளியையும், தமிழ்ப் பண்பாட்டையும் கேவலப்படுத்துவது ஒரு பக்கம் இருக்கட்டும்.

அந்தக் கேடுகெட்ட மது நிறுவனங்கள் தூக்கிப் போடும் எலும்புத் துண்டுக்கும்; அஞ்சுக்கும் பத்துக்கும் நாக்கைத் தொங்கப் போட்டு... இப்படி கேவலமான விளம்பரங்களைப் போடும் நம்முடைய நாளிதழ்களின் மானங்கெட்டத் தனத்தை... மழுங்காண்டித் தனத்தை.. என்னவென்று சொல்லுவது!! எங்கே போய் முட்டிக்கொள்வது!!

தமிழர்களின் பாரம்பரிய கலை.. வழிபாடுகளிலும் ஆலயங்களிலும் முக்கிய இடம்பெறும் கலை.. எறும்பு முதலிய சிறு உயிர்களையும் போற்றி உணவளிக்கும் உயர்ந்த கலை.. என்றெல்லாம் சிறப்புப் பெற்றது கோலக் கலை. கோலத்தின் நடுவில், குத்துவிளக்கு இருக்க வேண்டிய இடத்தில் மதுப்புட்டிகளை வைத்து மகா இழிவுபடுத்தி.. விளம்பரம் போட்டிருக்கும் தமிழ் நாளிதழின் நாதாரித்தனமான போக்கைத் 'தமிழுயிர்' மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழ் மரபு நாசமானால் எனக்கென்ன..! தமிழ்ப் பண்பாடு கெட்டால் எனக்கென்ன..! தமிழன் மானம் கப்பலேறினால் எனக்கென்ன..! காசு கிடைத்தால் போதும்.. பணம் வந்தால் போதும்.. என்று கடைந்தெடுத்த கேவலப் புத்தியோடு இப்படி ஒரு விளம்பரத்தைப் போட்டிருக்கும் அந்த நாளிதழை மானமுள்ள தமிழர்கள் இனி வாங்கலாமா?

காசு வருகிறது.. பணம் கிடைக்கிறது என்பதற்காக மொழி, இன, கலை, பண்பாட்டுச் சிறப்புகளை இப்படி அடைமானம் வைக்கலாமா? இதனைப் பார்த்துக்கொண்டு சுரணையுள்ள தமிழர்கள் சும்மா இருக்கலாமா?

தமிழ்ப் பண்பாட்டுக்கே வெடி வைக்கும் இந்த விளம்பரத்தைப் பார்த்து பொங்கி எழாமல் இருந்தால் அவன் கண்டிப்பாக குடிகாரனாக இருப்பான்!! அல்லது, குடிகார குடும்பத்தில் பிறந்தவனாக இருப்பான்!! அல்லது குடிகார பரம்பரையில் வந்தவனாக இருப்பான்!!

தீபாவளியின் மாண்பைக் குழிதோண்டிப் புதைக்கும் இந்த விளம்பரத்தைப் பார்த்துவிட்டு நமது நாட்டில் உள்ள சமய, மத, பொது இயக்கங்களும் தலைவர்களும் வாயை மூடிக்கொண்டு இருந்தால்... அவர்களும் இந்தக் குடிக்கு அடிமையாகத்தான் இருப்பார்களோ என்று எண்ண வேண்டியிருக்கும்.


ஆகவே, இதனால் அனைவருக்கும் அறிவிப்பது என்னவென்றால், தமிழர்கள் மானமுள்ளவர்கள் என்பதைக் காட்டவும்; தமிழர்கள் குடிகாரர்கள் அல்லர் என்பதைக் காட்டவும்; தமிழ் பண்பாட்டைச் சீரழிவிலிருந்து காக்கவும்; தீபாவளியின் தூய்மையைக் காக்கவும் அனைவரும் உடனடியாக மலேசிய நண்பன் நாளிதழுக்குத் தொடர்புகொண்டு கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என தமிழுயிர் கேட்டுக்கொள்கிறது.

பேசத் தெரிந்தவர்கள் பேசுங்கள்..!
ஏச மட்டுமே தெரிந்தவர்கள் ஏசுங்கள்..!
எழுதத் தெரிந்தவர்கள் கண்டித்து எழுதுங்கள்..!
இணையம் தெரிந்தவர்கள் மின்மடல் அனுப்புங்கள்..!

இப்படிப்பட்ட மது விளம்பரங்களுக்கு இந்த ஆண்டோடு முற்றுப்புள்ளி வைப்போம்!!

மக்கள் சொன்னால் மகேசனே கேட்பான்.. மலேசிய நண்பன் கேட்காதா?
மலேசிய நண்பனுக்குப் போடுகிற போட்டில்.. மற்ற நாளிதழ்களும் மது விளம்பரத்தைப் போடாமல் மூடிக்கொண்டு இருக்க வேண்டும்!!

மலேசிய நண்பன், No.544-3, Batu Complex off Jalan Ipoh, Batu 3/4, 51200, Kuala Lumpur.
தொலைபேசி எண்: 03-62515981
தொலைப்படி: 03-62591617
மின்னஞ்சல்: news@nanban.com.my

@ஆய்தன்:-
ஆண்டுக்கொரு முறைதானே என்று சொல்லி
மதுவிளம்பரம் செய்யலாமா? அட மடையா
ஆயுளுக்கொரு முறைதானே என்று சொல்லி
மலத்தையள்ளித் தின்னலாமா?

5 கருத்துகள்:

Sivaganapathy சொன்னது…

""".........மக்கள் சொன்னால் மகேசனே கேட்பான்.. மலேசிய நண்பன் கேட்காதா?
மலேசிய நண்பனுக்குப் போடுகிற போட்டில்.. மற்ற நாளிதழ்களும் மது விளம்பரத்தைப் போடாமல் மூடிக்கொண்டு இருக்க வேண்டும்!!......"""

ஐயா .... மக்கள் சொன்னால் மகேசனே கேட்பான்.....ஆனால் அதே மக்கள் மலேசியா நண்பனை கேட்பார்களா என்றால் ...எனது பதில் .....கண்டிப்பாக கேட்க மாட்டர்கள் !!!

ஒரு வேலை நீங்கள் சுட்டிய காட்டிய விளம்பரம் தமிழ் நேசனில் வந்திருந்தால் ....

சொல்லவேண்டுமா ....

மக்கள் முண்டியடித்துக்கொண்டு கேட்பார்கள் ...

நான் சொல்வது சரிதானே ?????

""..மங்கள தீபாவளி நாள் வாழ்த்துக்கள்.."

பெயரில்லா சொன்னது…

see front page of malaysia nanban today. nanban asks for apology regarding the beer ad.
thanks.

-maniraj,subang

பெயரில்லா சொன்னது…

Malaysia Nanban carried another liquor ad (page 6)today. Their apology doesn't serve any purpose; they are trying to hoodwink our society.

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

மலேசிய நண்பனில் வந்த மதுவிளம்பரத்திற்கு எதிராக கண்டனம் தெரிவித்த பல இயக்கங்களின் அறிக்கைகளை மக்கள் ஓசையும், தமிழ் நேசனும் விரிவாக வெளியிட்டுள்ளன.

ம.நண்பனும் தன்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்டது.

இதன்வழியாக, இப்படிப்பட்ட மது விளம்பரங்களுக்கு இந்த ஆண்டோடு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என நம்புகிறேன்.

தமிழ்ப் பண்பாட்டு நலன்கருதி இப்படியொரு நல்ல முடிவை நமது நாளிதழ்கள் செய்ய வேண்டும்.

பெயரில்லா சொன்னது…

தமிழன் என்றால் குடிகாரன் என்று பிற இனம் நம்மை பழிக்கும் நிலையானதை, தமிழ் நாளிதழ்களே இன்று நிஜமாக்குகின்றன.ஊசி இடம் கொடுத்தால் தானே நூல் நுழைய முடியும்? தமிழ் நாளிதழ்கள் இலாபத்தை மட்டும் கருத்தில் கொள்ளாது சற்று சமுதாய உணர்வுடனும் நடந்துக் கொள்ள வேண்டும்.