ஞாயிறு, 26 அக்டோபர், 2008
வியாழன், 23 அக்டோபர், 2008
சந்திராயன் சாதனைக்குப் பின்னால் ஒரு தமிழர்
தவிர, உலகமெங்கும் வாழும் இந்தியர்களை மிகவும் பெருமை கொள்ளச் செய்துள்ளது. அதோடு, இந்தியாவிலிருந்து (தமிழ்நாடு) வெளிநாடுகளில் குடியேறி வாழுகின்ற தமிழர்களும் இந்த்ச் சந்திராயன் சாதனையால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உண்மையில் சொல்ல வேண்டுமானால், உலகமெங்கும் உள்ள தமிழர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்ள வேண்டும். காரணம் என்னவென்றால், இந்தச் சந்திராயன் சாதனையின் பின்னணியில் ஒரு தமிழர் இருக்கிறார் என்பதுதான்.
தமிழன் என்று சொல்லடா!
தலை நிமிர்ந்து நில்லடா!
காலம் வரும் பாரடா!
உலகைப் புரட்டிப் போடடா!
எழுதியோன்: ஆதவன் 6 மறுமொழி(கள்)
சனி, 18 அக்டோபர், 2008
மதுவிளம்பரம் மண்ணுக்குப் போகட்டும்
தமிழரின் பண்பாட்டைச் சீர்குலைத்து; தமிழரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய அந்த மது விளம்பரத்தை வெளியிட்டதற்காக மலேசிய நண்பன் நாளேடு 18-10-2008இல் கீழ்க்காணும் வகையில் தனது வருத்தத்தைத் தெரிவித்தது.
வருந்துகிறோம்
மதுவிளம்பரத்தை வெளியிட்ட மலேசிய நண்பனின் மானங்கெட்டச் செயலை உடனடியாகக் கண்டித்தவர்கள்:-
1)மலேசிய இந்து சங்கம்
2)சொகூர் மாநில, மலேசிய இந்து சங்கப் பேரவை
3)சொகூர் மாநில, இந்து தர்ம மாமன்றம்
4)மலேசிய இந்தியர் இளைஞர் மன்றம்
5)பினாங்கு பயனீட்டாளர் சங்கம்
6)ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவு
7)பேரா மாநில, ம.இ.கா இளைஞர் பிரிவு
இவர்களோடு சேர்ந்து, தமிழுயிர், ஓலைச்சுவடி, நனவுகள் ஆகிய மலேசியத் தமிழ் வலைப்பதிவுகளும் கடுமையான கண்டனத்தை வெளியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் – தமிழர் – சமயம் – கலை – பண்பாடு ஆகியவற்றின் மீது அக்கறை கொண்டு குமுகாய நலன்கருதி செயல்பட்ட மேற்கண்ட அனைவரையும் 'தமிழுயிர்' நெஞ்சாரப் பாராட்டுகிறது. தமிழ்க் குமுகாயக் கேடுகளைக் களையெடுக்க ஒன்றிணைந்து பாடுபடுமாறு 'தமிழுயிர்' அனைவரையும் அழைக்கிறது.
@ஆய்தன்:-
மருந்துக்குக் கூட இனி மதுவிளம்பரம் கூடாது - மீறி வந்தால்
ஆர்ப்பாட்டம் செய்யவும் அடித்து நொறுக்கவும் தமிழர் தயங்கக் கூடாது!
எழுதியோன்: ஆதவன் 7 மறுமொழி(கள்)
மதுவிளம்பரம் செய்யலாமா? ம....தைத் தின்னலாமா?
தமிழன் என்றாலே குடிகாரன் என்றும் 'இந்தியா மாபோக்' என்றும் மற்ற இனத்துக்காரன் நம்மைப் பார்த்து பேசுகிறான் என்றால், அதற்கு இப்படிப்பட்ட விளம்பரங்கள் தான் காரணம்.
தீபாவளி வந்துவிட்டாலே போதும். இந்த மது(பியர்) விளம்பரங்கள் நமது நாளிதழ்களில் பக்கத்திற்குப் பக்கம் வந்து கண்ணைப் பறிக்கும்.. அத்தோடு கூடவே நமது கலை பண்பாட்டைக் கலக்கோ கலக்கென்று கலக்கும்!!
தீபாவளி என்று வந்தாலே இந்தத் தமிழன் குடிப்பான்.. கூத்தடிப்பான் என்று மது நிறுவனங்கள் நன்றாகத் தெரிந்து வைத்துள்ளன. நாட்டில் உள்ள அத்தனை மது (பியர், பிராந்தி, விசுக்கி, ரம்மு) நிறுவனங்களும் போட்டிப் போட்டுக்கொண்டு விளம்பரங்களைப் போட்டு தூள் கிளப்புகின்றன.. கூடவே சேர்த்து தமிழன் மானத்தையும் கெடுக்கின்றன!!
இப்படியாக, மது நிறுவனங்கள் தமிழனையும், தீபாவளியையும், தமிழ்ப் பண்பாட்டையும் கேவலப்படுத்துவது ஒரு பக்கம் இருக்கட்டும்.
அந்தக் கேடுகெட்ட மது நிறுவனங்கள் தூக்கிப் போடும் எலும்புத் துண்டுக்கும்; அஞ்சுக்கும் பத்துக்கும் நாக்கைத் தொங்கப் போட்டு... இப்படி கேவலமான விளம்பரங்களைப் போடும் நம்முடைய நாளிதழ்களின் மானங்கெட்டத் தனத்தை... மழுங்காண்டித் தனத்தை.. என்னவென்று சொல்லுவது!! எங்கே போய் முட்டிக்கொள்வது!!
தமிழர்களின் பாரம்பரிய கலை.. வழிபாடுகளிலும் ஆலயங்களிலும் முக்கிய இடம்பெறும் கலை.. எறும்பு முதலிய சிறு உயிர்களையும் போற்றி உணவளிக்கும் உயர்ந்த கலை.. என்றெல்லாம் சிறப்புப் பெற்றது கோலக் கலை. கோலத்தின் நடுவில், குத்துவிளக்கு இருக்க வேண்டிய இடத்தில் மதுப்புட்டிகளை வைத்து மகா இழிவுபடுத்தி.. விளம்பரம் போட்டிருக்கும் தமிழ் நாளிதழின் நாதாரித்தனமான போக்கைத் 'தமிழுயிர்' மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழ் மரபு நாசமானால் எனக்கென்ன..! தமிழ்ப் பண்பாடு கெட்டால் எனக்கென்ன..! தமிழன் மானம் கப்பலேறினால் எனக்கென்ன..! காசு கிடைத்தால் போதும்.. பணம் வந்தால் போதும்.. என்று கடைந்தெடுத்த கேவலப் புத்தியோடு இப்படி ஒரு விளம்பரத்தைப் போட்டிருக்கும் அந்த நாளிதழை மானமுள்ள தமிழர்கள் இனி வாங்கலாமா?
காசு வருகிறது.. பணம் கிடைக்கிறது என்பதற்காக மொழி, இன, கலை, பண்பாட்டுச் சிறப்புகளை இப்படி அடைமானம் வைக்கலாமா? இதனைப் பார்த்துக்கொண்டு சுரணையுள்ள தமிழர்கள் சும்மா இருக்கலாமா?
தமிழ்ப் பண்பாட்டுக்கே வெடி வைக்கும் இந்த விளம்பரத்தைப் பார்த்து பொங்கி எழாமல் இருந்தால் அவன் கண்டிப்பாக குடிகாரனாக இருப்பான்!! அல்லது, குடிகார குடும்பத்தில் பிறந்தவனாக இருப்பான்!! அல்லது குடிகார பரம்பரையில் வந்தவனாக இருப்பான்!!
தீபாவளியின் மாண்பைக் குழிதோண்டிப் புதைக்கும் இந்த விளம்பரத்தைப் பார்த்துவிட்டு நமது நாட்டில் உள்ள சமய, மத, பொது இயக்கங்களும் தலைவர்களும் வாயை மூடிக்கொண்டு இருந்தால்... அவர்களும் இந்தக் குடிக்கு அடிமையாகத்தான் இருப்பார்களோ என்று எண்ண வேண்டியிருக்கும்.
ஆகவே, இதனால் அனைவருக்கும் அறிவிப்பது என்னவென்றால், தமிழர்கள் மானமுள்ளவர்கள் என்பதைக் காட்டவும்; தமிழர்கள் குடிகாரர்கள் அல்லர் என்பதைக் காட்டவும்; தமிழ் பண்பாட்டைச் சீரழிவிலிருந்து காக்கவும்; தீபாவளியின் தூய்மையைக் காக்கவும் அனைவரும் உடனடியாக மலேசிய நண்பன் நாளிதழுக்குத் தொடர்புகொண்டு கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என தமிழுயிர் கேட்டுக்கொள்கிறது.
பேசத் தெரிந்தவர்கள் பேசுங்கள்..!
ஏச மட்டுமே தெரிந்தவர்கள் ஏசுங்கள்..!
எழுதத் தெரிந்தவர்கள் கண்டித்து எழுதுங்கள்..!
இணையம் தெரிந்தவர்கள் மின்மடல் அனுப்புங்கள்..!
இப்படிப்பட்ட மது விளம்பரங்களுக்கு இந்த ஆண்டோடு முற்றுப்புள்ளி வைப்போம்!!
மக்கள் சொன்னால் மகேசனே கேட்பான்.. மலேசிய நண்பன் கேட்காதா?
மலேசிய நண்பனுக்குப் போடுகிற போட்டில்.. மற்ற நாளிதழ்களும் மது விளம்பரத்தைப் போடாமல் மூடிக்கொண்டு இருக்க வேண்டும்!!
மலேசிய நண்பன், No.544-3, Batu Complex off Jalan Ipoh, Batu 3/4, 51200, Kuala Lumpur.
தொலைபேசி எண்: 03-62515981
தொலைப்படி: 03-62591617
மின்னஞ்சல்: news@nanban.com.my
@ஆய்தன்:-
ஆண்டுக்கொரு முறைதானே என்று சொல்லி
மதுவிளம்பரம் செய்யலாமா? அட மடையா
ஆயுளுக்கொரு முறைதானே என்று சொல்லி
மலத்தையள்ளித் தின்னலாமா?
எழுதியோன்: ஆதவன் 5 மறுமொழி(கள்)
வியாழன், 16 அக்டோபர், 2008
ஈழத்துத் தமிழருக்காக எமது தமிழா ஒன்றுபடு!
- (சில குறிப்பிட்ட காரணங்களால் பிறை நிகழ்ச்சி வேறொரு நாளுக்கு மாற்றி வைக்கப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். அதன் விவரம் அறிய இங்கே சொடுக்கவும்)
எழுதியோன்: ஆதவன் 4 மறுமொழி(கள்)
வகைமை:- தமிழ் ஈழம்
செவ்வாய், 14 அக்டோபர், 2008
தப்பிப் பிறந்த தமிழ்வாத்தியும்! பெரியவாத்தியும்!
ஐயா, என்னுடன் பணியாற்றும் ஓர் ஆசிரியர் பத்து ஆண்டுகள் அனுபவமுள்ளவர். அவர் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் ஆங்கிலத்தில் இருப்பதால் அதனைப் போதிக்கும் ஆசிரியர்களுக்கு 10% சிறப்பூதியம் (அலவன்சு) கிடைக்கிறது. இதனால் பல தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் பயன் அடைகின்றனர். இப்போது அந்தப் பாடங்களை மீண்டும் தமிழுக்கு மாற்றிவிட்டால் அந்த 10% சிறப்பூதியம் இல்லாமல் போய்விடும். இதனால் ஆசிரியர்களுக்குப் பண நெருக்கடி ஏற்படும் என்கிறார். அவருக்கு நாங்கள் கூறும் காரணங்கள் எடுபடவில்லை. நீங்கள்தான் நல்ல பதிலடி கொடுக்க வேண்டும் ஐயா.
*மின்மடல் 2:- விடுத்தவர், மா.கலை – இரவாங்கு, சிலாங்கூர்.
அன்புள்ள ஆய்தன் அவர்கட்கு, எங்கள் தலைமையாசிரியர் அண்மையில் வெளியிட்ட ஒரு கூற்று. அதாவது, நடந்து முடிந்த யூ.பி.எஸ்.ஆர் தேர்வின் அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய தேர்வுத்தாள்கள் மற்ற தேர்வுத் தாள்களை விட சற்று தடிப்பாக இருந்தன. அதனைப் பற்றிக் கருத்துரைத்தார் அவர். அதாவது, "ஆங்கிலத்திலும் தமிழிலும் ஏன் தேர்வுத் தாள்களைக் கொடுத்தார்கள். அதனால் பாருங்கள் தேர்வுத் தாள் எவ்வளவு தடிமனாக இருக்கிறது. இப்படி இரண்டு மொழிகளில் கொடுக்கச் சொல்லி இவர்களிடம் (மலேசியத் தேர்வுக் கழகம்) யார் கேட்டது? மாணவர்கள் ஆங்கிலத்தில் படிப்பதால், தாளும் ஆங்கிலத்தில் மட்டும் இருந்தால் போதாதா? தமிழில் வேறு எதற்குப் போடுகிறார்கள். இப்படி தடிப்பான புத்தகத்தைப் பார்த்தவுடன் மாணவர்கள் மனநிலை பாதித்து விடுவார்கள். பிறகு எப்படி தேர்வைச் சிறப்பாக எழுதுவார்கள்? ஆக, தேர்வுத் தாளில் தமிழும் இடம்பெற்றது தேவையற்றது என அவர் பேசினார். இதனைப் பற்றி கருத்துரைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
@ஆய்தன்:-
நாட்டில் தமிழ்ப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் பலர் மிகச் சிறந்த தமிழ்ப்பற்றோடும் தமிழின உணர்வோடும் பணியாற்றி வருகின்றனர். தமிழ்ப்பள்ளி, தமிழ்க்கல்வி, தமிழ் மாணவர் வளர்ச்சியைக் கருதி அல்லும் பகலும் அயராமல் பாடாற்றிவரும் ஆசிரியர்களும், தலைமையாசிரியர்களும், அதிகாரிகளும் பற்பலர் உள்ளனர். 'நல்லார் ஒருவர் உளரேல், அவர்பொருட்டு எல்லாருக்கும் பெய்யும் மழை' என்ற ஔவையின் கூற்றுக்கு ஏற்ப, இத்தகைய நல்லுள்ளங்கள் சில இருப்பதால்தான் தமிழ்ப்பள்ளிகள் இன்றும் நாட்டில் தலைநிமிர்ந்து நிற்கின்றன.
அதே வேளையில், மேலே சொல்லப்பட்டது போன்ற தமிழ் வாத்திகளும் பெரிய வாத்திகளும் நிறைய பேர் தமிழ்ப் பள்ளிகளில் குப்பைக் கொட்டிக் கொண்டிருக்கின்றனர்; கூலிக்கு மாறடித்துக் கொண்டிருக்கின்றனர்; சோத்துக்கும் சுகத்துக்கும் தமிழ்ப்பள்ளிகளை நத்திப் பிழைத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
பத்து விழுக்காடு (10%) சிறப்பூதியப் பணத்திற்காகப் பத்தாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த தாய்மொழியை அடகுவைக்கப் பார்க்கும் அந்தத் தமிழ் வத்திக்கு அறிவு, மானம், ஈனம் என்று எதாவது ஒன்று இருக்கிறதா? இப்படிப்பட்ட தன்னலப் பேர்வழிகளும் பணப் பேய்களும் தமிழ்ப்பள்ளியில் குடித்தனம் நடத்திக்கொண்டிருப்பது வெட்கக் கேடு!
நாளைக்கே அந்தப் 10% சிறப்பூதியத்தை இந்த அரசாங்கம் நிறுத்திவிட்டால் இந்தத் தன்மானமில்லாத் தமிழ்வாத்தி என்ன செய்வார்? தெருவில் போய் பிச்சையா எடுப்பார்? 10% சிறப்பூதியம் முக்கியமா அல்லது பத்தாயிரம் ஆண்டுகளாக உலக உருண்டையில் பல போராட்டத்திற்கு இடையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் செம்மொழித் தமிழ் முக்கியமா?
10% சிறப்பூதியத்திற்காக தாய்மொழியை அடமானம் வைப்பதற்கு அந்தத் தமிழ் வாத்திக்கு மனம் வருகிறது என்றால், இன்னும் 20% கொடுத்தால் கட்டிய மனைவியையும் 50% கொடுத்தால் பெற்ற மகளையும் விற்றே விற்று விடுவார்! இப்படிப்பட்ட பண வாத்(து)திகளைத் தமிழ்ப்பள்ளிகளிலிருந்து விரட்டி அடிக்கவேண்டும்.
அடுத்து, அந்தப் பெரிய வாத்திக்கு வருவோம். கணிதம் அறிவியல் பாடங்களில் ஆறு ஆண்டுகளாகத் தொலைந்து போன தமிழ் இப்போது தேர்வுத் தாளில் மீண்டும் தலைக்காட்டுவது கண்டு பூரித்து போயிருக்கும் தமிழர்களில் இப்படியும் ஒரு பெரியவாத்தியா? அந்தப் பெரியவாத்திக்கு ஏன் இப்படியொரு சிறியபுத்தி!
மாணவர்கள் மீது மிகவும் அக்கறை கொண்டுள்ள அந்தப் பெரியவாத்திக்குத் தமிழின் மீது அக்கறை இல்லாமல் போனது ஏனோ? மாணவர் மனநிலையை நினைத்து வருந்தும் அந்தப் பெரியவாத்தி தமிழின் அழிவை நினைத்து வருந்தாமல் போனது ஏனோ? பெரும்பாலான பின்தங்கிய மாணவர்கள் தேர்வுத்தாளைத் தமிழில் படித்து மகிழ்ச்சியோடு விடையளித்திருப்பார்களே என்று அந்த மரமண்டைப் பெரியவாத்திக்குத் தெரியாமல் போனது ஏனோ?
தொலைந்து போகவிருந்த தமிழை அரசாங்கமே மீண்டும் கொண்டு வந்திருக்க, 'சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி தடுப்பது போல' அரசாங்கக் கொள்கையை மதிக்காத, அந்தப் பெரியவாத்தியை உடனே பணிநீக்கம் செய்ய வேண்டும்!
தொடர்பான செய்திகள்:-
எழுதியோன்: ஆதவன் 11 மறுமொழி(கள்)
வெள்ளி, 10 அக்டோபர், 2008
தமிழுக்கு அதிகாரியா? தமிழுக்குச் சதிகாரியா?
*மின்மடல் விடுத்தவர்: கோ.குணசீலன், நெகிரி செம்பிலான்.
தமிழுயிர் ஐயா ஆய்தன் அவர்களுக்கு வணக்கம்.
கணிதமும் அறிவியலும் தமிழில் படித்தால் ஏறுமா? என்ற உங்கள் ஆய்வுக் கட்டுரையையும் அதற்கு மற்றவர்கள் எழுதிய கருத்துகளையும் ஆழமாகப் படித்தேன். அதனை ஒட்டி ஒரு முக்கியமான தகவலை மிகுந்த மன வருத்தத்தோடு உங்களுடன் பகிர்ந்துகொள்ள இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
அண்மையில் என் ஊரில் ஆசிரியர்களுக்கான ஒரு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஓர் உயர் தமிழ்ப் பிரிவு அதிகாரி வந்தார். உணவு நேரத்தில் பலர் கூடி அவருடன் கலந்துரையாடினர். அப்போது கணிதம் அறிவியல் பாடங்களை மீண்டும் தமிழுக்கு மாற்றுவது பற்றி பேச்சு வந்தது.
அப்போது அந்த தமிழ் அதிகாரி கூறிய வார்த்தைகள் என் நெஞ்சில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியதைப் போல் இருந்தது. அவர் கூறியவை பின்வருமாறு:-
1)கணிதம் அறிவியலை மீண்டும் தமிழுக்கு மாற்றத் தேவையில்லை.
இதுபோல் பல காரணங்களை அவர் அடுக்கிப் பேசினார். தமிழ் மொழிக்காக நியமனம் செய்யப்பட்ட ஓர் உயர் அதிகாரி இப்படி பேசிய மன்னிக்க முடியாத குற்றம் என்று நினைக்கிறேன். தமிழுக்கு ஆதரவாக பேச வேண்டிய அந்த அதிகாரி தமிழுக்குக் குழிபறிக்கும் வகையில் பேசலாமா? அவர் அந்தப் பதவியில் நீடிக்கலாமா? இதற்கு நாம் என்ன செய்யலாம்?
தாய்த்தமிழுக்காக இந்தத் தகவலை வெளிப்படுத்துகிறேன். நீங்கள்தான் ஒரு தீர்வைச் சொல்ல வேண்டும். நன்றி, வணக்கம்.
@ஆய்தன்:-
- நல்லாசிரிய அன்பர் கோ.குணசிலன் அவர்களின் மேற்கண்ட மின்மடலை படித்துவிட்டீர்களா?
- தமிழுக்குப் பணி செய்ய நியமிக்கப்பட்ட அதிகாரிகள் சிலர் இவ்வாறு தமிழுக்கு எதிராக செயல்படுகிறார்கள்.. கீழறுப்பு வேலை செய்கிறார்கள்.. என்பதைத் அறிவீர்களா?
- தனக்கும் தன் மனைவி மக்களுக்கும் சோற்றையும் சுகத்தையும் வாரி வழங்கும் தமிழுக்கு இப்படி ஒரு இரண்டகம் செய்யலாமா?
- அல்லது அந்த அதிகாரி கூறியுள்ள வாதங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளதா? தமிழுக்கும் தமிழ் மாணவர்க்கும் ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கும் நன்மையாக அமையுமா?
(பின்குறிப்பு:- இந்தச் செய்திக்குத் தமிழுயிர் அன்பர்களிடமிருந்து வந்த சூடான மறுமொழிகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்.)
எழுதியோன்: ஆதவன் 13 மறுமொழி(கள்)
திங்கள், 6 அக்டோபர், 2008
கணிதமும் அறிவியலும் தமிழில் படித்தால் ஏறுமா?
மூத்த தலைவர்களின் முடிவுகள் பிழை என்று கூறும் வகையில் இத்திட்டம் தற்பொழுது தாய்மொழிக்கே மாற்றப்படும் தருவாயில் இருக்கின்றது. இப்பாட திட்டம் மறுபடியும் தாய்மொழிக்கெ மாற்றப்படுமெயானால், தமிழ் மாணவர்களின் நிலை???? இந்தக் கூற்றைபற்றி தங்களின் கருத்து என்ன???
- @ஆய்தன்:-
கணிதம் – அறிவியல் பாடத்தை ஆங்கிலத்தில் கற்பிக்க ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, கோடானு கோடி வெள்ளி பாழாக்கப்பட்டு, ஒரு தலைமுறையின் அறிவுக் கண்கள் ஆறாண்டுகள குருடாக்கப்பட்டு நாசப்படுத்தப்பட்டுள்ள கொடுமை உலகிலேயே நமது நாட்டில்தான் நடந்துள்ளது.
'கண்கெட்டப் பிறகு கதிரவ வணக்கம்' என்பது போல கணிதம் – அறிவியலை மீண்டும் தாய்மொழியில் கற்பிப்பது பற்றி இப்போதுதான் புத்தி வந்தது போல அரசியலாளர்கள் நாடகமாடிக் கொண்டிருக்கின்றனர்.
கணிதம் – அறிவியல் பாடமொழிச் சிக்கலில் மிகவும் தெளிவாகவும் தொலைநோக்குப் பார்வையுடனும் மொழி, இனநலப் பாதுகாப்பு உணர்வுடனும் நல்லதொரு முடிவினைக் கண்டவர்கள் சீனர்கள்.
ஆனால், மதிகெட்ட மலேசியப் பெருங்குடி மக்களின் முட்டாள்தனமான முடிவை ஏற்றுக்கொண்டு பாழுங்கிணற்றில் மண்டியடித்து விழுந்தவர்கள் தமிழர்கள்! இல்லையில்லை, தமிழர்களுக்குத் தலைவர்களாக இருந்தவர்கள்.
அந்த முட்டாள்தனத்தைப் பகிரங்கமாக ஒத்துக்கொள்ள வேண்டிய நெருக்கடியான நிலைமைக்கு இன்று அந்த அரசியல் தலைவர்கள் ஆளாகி உள்ளனர். வீராப்பு பேசியவர்கள் இன்று குப்புற கவிழ்ந்து கிடப்பதைப் பார்க்கப் பரிதாபமாகத்தான் இருக்கிறது.
இப்போதாவது, கணிதம் – அறிவியல் பாடங்களைத் தாய்மொழியிலேயே கற்பிக்க வேண்டும் என்று சீனர்களைப் போல அறிவான ஒரு முடிவுக்கு இவர்கள் வர வேண்டும்.
*தமிழ்ப்பள்ளிகளில் ஏன் கணிதம் – அறிவியல் பாடங்களைத் தமிழ்மொழியில் கற்பிக்க வேண்டும்?
௧.ஒரு குழந்தைக்குத் தொடக்கக் கல்வியை அதனுடைய தாய்மொழியில்தான் வழங்கவேண்டும் என்று ஐக்கியநாடுகள் அவையின் (United Nations) கல்விக் கோட்பாடாக இருக்கின்றது.
௨.கணிதம் – அறிவியலை ஆங்கிலத்தில் கற்பித்தால் குழந்தைகளின் ஆங்கிலமொழி ஆற்றலை வலுப்படுத்திவிடலாம் என்பது முற்றிலும் தவறான ஒரு அணுகுமுறையாகும்.
௩.கணிதமும் அறிவியலும் திறன் பாடங்கள் (Skill Subject). திறன் பாடங்களைப் புரியாத ஆங்கில மொழியில் கற்பித்தால் மாணவரின் அறிவுத்திறன் பாதிக்கப்படுகிறது. மேலும், ஆங்கில மொழியறிவும் மட்டுப்படுகிறது.
௪.எந்த ஒரு மொழியையும் அந்த மொழியாகத்தான் கற்பிக்க வேண்டுமே தவிர, கணிதம் – அறிவியல் போன்ற திறன் பாடங்களின் வழியாக ஒரு மொழியைக் கற்பித்துவிட முடியாது.
௫.உலக அளவில் அறிவியல் துறையில் மாபெரும் வளர்ச்சி பெற்றுள்ள செருமானியம், உருசியா, கொரியா, சீனா, சப்பான் முதலான நாடுகளில் கணிதம், அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம் ஆகிய பாடங்கள் அவர்களின் தாய்மொழியிலேயே கற்பிக்கப்படுகின்றன.
௬.நமது தாய்மொழியாகிய தமிழில் கணிதம் – அறிவியல் பாடங்களைச் சிறப்பாக கற்பிக்க முடியும். தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கணிதம் – அறிவியலைத் தாய்மொழியில் படித்தால் கணிதக் கோட்பாடுகளையும் அறிவியல் கருத்துருக்களையும் நன்றாகப் புரிந்துகொள்வார்கள்.
௭.இந்திய நாட்டின் முன்னாள் அதிபராக இருந்த அணுவியல் ஆய்வாளர் அப்துல் கலாம் அவர்கள் தம்முடைய தொடக்கக் கல்வியைக் குறிப்பாகக் கணிதம் – அறிவியலை தமிழ்மொழியில்தான் படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
*தமிழ்ப்பள்ளிகளில் கணிதம் – அறிவியல் பாடங்களைத் தமிழ்மொழியில் கற்பித்தால் ஏற்படப்போகும் நன்மைகள் என்ன?
1.தமிழ்ப்பள்ளி என்ற தனி அடையாளம் தொடர்ந்து நிலைத்திருக்கும்.
2.தமிழ்ப்பள்ளிகளின் முகாமையான பாட மொழியாகத் தமிழே நிலைபெறும்.
3.தமிழ்மொழிக்கான அரசுரிமைகள் மீட்கப்படும்; நிலைப்படுத்தப்படும்.
4.இந்நாட்டில் தமிழ்மொழியை நிலைப்படுத்தவும் வலுப்படுத்தவும் உறுதியான அடித்தளம் உருவாகும்.
5.மற்ற இரு மொழிகளுக்கு இணையாக அறிவியல் துறைசார் ஆக்கங்கள் தமிழிலும் நடைபெறும்.
6.கணிதம் – அறிவியல் பாடநூல்கள் அரசு செலவில் தமிழிலேயே அச்சிடப்படும்.
7.கணிதம் – அறிவியல் பாடநூல்கள் எழுதுவதற்கான வாய்ப்புகள் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஏற்படும்.
8.கணிதம் – அறிவியல் பயிற்சிநூல்கள் உருவாக்குவதற்கும் பரப்புவதற்கும் நம்மவர்களின் பதிப்பகங்களுக்கு நல்லதொரு வாய்ப்பு கிட்டும். நம்மவர் பதிப்பகங்கள் வளர்ச்சி பெறும்.
9.அரசுப் பாடநூல்கள், தனியார் நிறுவனப் பயிற்சி நூல்கள் எழுதும் ஆசிரியர்களுக்கு ஓரளவு கூடுதல் வருமானம் கிடைக்கும்.
10.கணிதம் – அறிவியல் தேர்வுகளைத் தமிழில் அணியப்(தயார்)படுத்துவதற்கு தமிழாசிரியர்களுக்கு வாய்ப்பு உண்டாகும்.
11.தமிழ்ப்பள்ளிகளுக்கான கணிதம் – அறிவியல் தேர்வுகளை நடத்தவும் கண்காணிக்கவும் தமிழ் அதிகாரிகள் நியமிக்கப்படலாம்.
12.தேர்வுத் தாள்களைத் திருத்தும் பணிகளுக்குத் தமிழாசிரியர்களின் தேவை பெருகும்.
13.நமது மாணவர்களின் தேர்வுத் தாள்களை நமது ஆசிரியர்களே திருத்தி மதிப்பெண்கள் போடுவார்கள்.
14.கணிதம் – அறிவியல் தொடர்பான ஆயிரமாயிரம் கலைச்சொற்கள் அழிவிலிருந்து பாதுகாக்கப்படும். மேலும், புதுப்புதுக் கலைச்சொற்கள் உருவாகும்.
15.கணிதம் – அறிவியல் பாடங்களுக்கான துணைநூல்கள், மேற்கோள் நூல்கள், கலைச்சொல் அகராதிகள் ஆகிய உருவாகும்.
16.கணிதம் – அறிவியல் பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியருக்கான வேலை வாய்ப்புகள் நமது இளையோர்களுக்கே கிடைக்கும்.
17.தனியார் கல்வி நிறுவனங்கள், சிறப்புக் கல்வி (Tuition) நடுவங்களில் கணிதம் – அறிவியல் பாடங்களைக் கற்பிக்கும் வேலை வாய்ப்புகள் நம்மவர்களுக்கே கிடைக்கும்.
18.தாய்மொழியில் கணிதம் – அறிவியல் பாடங்களைப் படிப்பதால் மாணவர்களின் அறிதலும் புரிதலும் சிறப்பாக இருக்கும்.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு (அதி:47 குறள்:467 )
எழுதியோன்: ஆதவன் 13 மறுமொழி(கள்)
வியாழன், 2 அக்டோபர், 2008
தமிழ் மானங்கெட்ட வானவில்!
மேலே இருக்கும் படத்தை உற்றுக் கவனித்தால், தமிழ்ப் பெயரில் எழுத்துப் பிழையைக் காணலாம். 'பயிற்ச்சி பட்டறை' என்று அசுற்றோ வானவில் திரும்பத் திரும்பக் காட்டியது.
உண்மையில் 'பயிற்சி பட்டறை' என்று "ச்" ஒற்று இல்லாமல் எழுதுவதே சரியானது. இது என்ன பெரிய குற்றமா? சின்ன ஒரு எழுத்துப் பிழைதானே! ஒற்றுப் பிழைதானே! என்று இதனைச் மிக எளிதாகக் கருதிவிட முடியாது.
'பயிற்சி' என்ற மிக மிக எளிமையான ஒரு சொல்லைக் கூட பிழையின்றி எழுத முடியாதா இந்த அசுற்றோவால்?
மாணவர்கள் தொடங்கி படித்தவர்கள், பெரியவர்கள் என பல இலக்கம் (இலட்சம்) தமிழ் மக்கள் பார்க்கக்கூடிய ஒரு ஊடகம் இப்படி ஒரு தவற்றைச் செய்யலாமா?
நிகழ்ச்சித் தலைப்புகளையும் அறிவிப்புகளையும் விளம்பரங்களையும் எப்போதுமே "ரோமனாய்சு தமிழில்' போடும் அசுற்றோ, அத்திப் பூத்தது போல எப்போதாவது போடும் தமிழ் எழுத்துகளில் இப்படி குளறுபடி செய்யலாமா?
தமிழ் என்றால் அவ்வளவு இளக்காரமா இந்த அசுற்றோவுக்கு?
தமிழ் எழுத்தை / சொல்லைப் பிழையில்லாமல் போட வேண்டுமே என்ற அக்கறை வேண்டாமா இந்த அசுற்றோவுக்கு?
THR Raga என்பதை கொஞ்சமும் பிசிறில்லாமல் "தி ஹெச் ஆர் ராகா! அஹா.. சிறந்த இசை" என்று சமற்கிருத எழுத்தைச் சேர்த்து 'H' மற்றும் 'HA' ஆகிய ஓசை கெடாமல் எழுத புத்தியும் சுரணையும் உள்ள அசுற்றோவுக்கு.. தமிழ் எழுத்தில் மட்டும் புத்திகெட்டு.. சுரணைக்கெட்டுப் போனது ஏன்? ஏன்? ஏன்?
"வீட்டில் பிள்ளை பட்டினிக் கிடக்குதாம்; அடி மடையன் ஒருவன் குரங்குக் குட்டிக்குப் பால் கொடுத்தானாம்" என்று மலாய்மொழியில் ஒரு பழமொழி உள்ளது. அதுபோல், சொந்த மொழியைச் சீரழிய விட்டுவிட்டு செத்துபோன சமற்கிருதத்தையும் தமிழைச் சாகடிக்கும் ஆங்கிலத்தையும் வாழவைக்கும் அசுற்றோ வானவில்லுக்கு அறிவு இருக்கிறதா?
தாய்த்தமிழைப் பிழைபட எழுதி இப்படி நாசப்படுத்தும் அசுற்றோவுக்குக் கொஞ்சமாவது தமிழ்மொழி மானம் வேண்டாமா?
அழகு தமிழைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கும், தமிழ் மானங்கெடா அசுற்றோவைச் சும்மா விடலாமா?
தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடக்கூடாது என்பார்கள். அப்படி ஒரு நிலைமையை அசுற்றோ வானவில் ஏற்படுத்தலாமா?
தெரியாமல்தான் கேட்கிறேன், அசுற்றோவில் தமிழ் அறிந்தவர் எவரும் இல்லையா? தமிழைக் கவனிக்க ஆளே கிடையாதா? தமிழ் எழுத்துகளைப் பார்த்து திருத்தும் அளவுக்கு தமிழ்மொழி கற்ற பணியாளரை அசுற்றோ நியமிக்கவில்லையா?
தமிழ்க் கணினித் துறையில் உலகத்திற்கே முன்னோடியாக இருக்கும் மலேசியத் தொலைக்காட்சித் திரையில் தமிழுக்குப் பதிலாக, 'ரோமனைசு தமிழ்' எழுத்து வருவதும், தப்பித் தவறி வருகின்ற தமிழும் தப்பும் தவறுமாக வருவதும் மானங்கெட்டச் செயலாகத் தெரியவில்லையா?
இரண்டே சொற்கள் கொண்ட 'பயிற்சி பட்டறை' என்பதை சரியாக எழுதத் தெரியாமல் 'பயிற்ச்சி பட்டறை' என எழுத்துப் பிழையோடு போடுகின்ற அசுற்றோவுக்குத் தமிழ்ச் சுரணை கிடையாதா?
@ஆய்தன்:-
தமிழாலே அசுற்றோ வானவில் பிழைக்குமாம்! – அந்தத்
தமிழுக்கு அதுவேதான் கொள்ளியும் வைக்குமாம்!
எழுதியோன்: ஆதவன் 21 மறுமொழி(கள்)