வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

சனி, 3 மே, 2008

தமிழா.. தமிழா.. எழுந்திரு..!


“இந்த நாட்டில் நம்மைப் பார்த்து சிறுபான்மை இனம் என்று பேசியவர்கள் எல்லாம் இன்று நம்மைப் பார்த்து பயந்து ஒளிகிறார்கள். உங்களில் நான் ஒருவன் என்ற உணர்வு தமிழனுக்கு வேண்டும். இறைவன் ஒருவனே நமக்கெல்லாம் தலைவன். அவன்மீது பாரத்தைப் போட்டுவிட்டு தினமும் வழிபாடு செய்யுங்கள். நமக்கு இனி வெற்றிதான்.” என்று பங்கோரில் உள்ள பத்திரகாளியம்மன் ஆலயத்தில் நடந்த கூட்டு வழிபாட்டில் இண்டிராப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தனேந்திரன் உணர்ச்சி பொங்க பேசினார்.

இனிவரும் காலத்தில் தமிழர்கள் பின்பற்றுவதற்கு 5 கட்டளைகளைப் பிறப்பித்துள்ளோம்.

1.ஒவ்வொரு தமிழரும் (இந்தியரும்) தங்களை வாக்காளராகப் பதிவுசெய்ய வேண்டும்.
2.ஒவ்வொரு தமிழ் வாழ்விணையரும் (தம்பதியரும்) குறைந்தது 5 பிள்ளைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்.
3.தமிழ்ப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்ப வேண்டும். இதனைக் குறிக்கோளாகக் கொள்ளவேண்டும். நமது கலை பண்பாடு தமிழ்க்கல்வி கற்றால்தான் தெரியும் – புரியும்.
4.ஒரு தமிழன் இன்னொரு தமிழனைப் பார்த்தால் இன்முகம் காட்டிப் பழக வேண்டும்.
5.முறையான இறைவழிபாடு தமிழனிடம் இருக்க வேண்டும்.

@ஆய்தன்:
முதலில், தமிழ் – தமிழர் உணர்வு பற்றி பேசியிருக்கின்ற அன்பர் தனேந்திரன் அவர்களைத் தமிழுயிர் வணங்குகிறது. காரணம், இந்தியர் – இந்து என்ற உணர்வு எமது மக்களிடையே பெருகியுள்ள அளவுக்குத் தமிழ் – தமிழர் என்ற உணர்வு பெருகவில்லை அல்லது பெருக்கப்படவில்லை. இதனால், எதிர்காலத்தில் மலேசியத்தில் தமிழரின் மொழி, இன, சமய, கலை, பண்பாட்டு வரலாறுகளும் சுவடுகளும் மறைந்துபோகும் பயங்கரம் நிகழக்கூடும். இந்தப் பேரழிவைத் தடுத்து நிறுத்த இந்தியர் – இந்து என்ற உணர்வைக் காட்டிலும் தமிழ் – தமிழர் என்ற உணர்வே பெரிதும் பயன்படும். இந்த உண்மையின் அடிப்படையில் அன்பர் தனேந்திரன் முன்வைத்துள்ள கருத்துகள் சிந்திக்கக்கூடியனவாக உள்ளன.

எமது மலேசியத் தமிழரிடையே தற்போது புதிய எழுச்சியும் விழிப்புணர்ச்சியும் ஏற்பட்டிருப்பது உண்மையே. 2007 நவம்பர் 25ஆம் நாளுக்குப் பின்னர் எமது தமிழினத்தில் ஏற்பட்டுள்ள வரலாற்றுத் திருப்பமாக இதனைக் குறிப்பிடலாம். ஆனால், இந்த எழுச்சியும் விழிப்புணர்ச்சியும் இந்தியர் – இந்து என்ற வட்டத்திற்குள்ளேயே சுற்றிக்கொண்டிருப்பதாக கருதுகிறேன். இந்தியர் – இந்து என்ற உணர்ச்சியுடன் நாம் தமிழர்; நம் தாய்மொழி தமிழ் என்ற உணர்ச்சியும் பொங்கியெழ வேண்டும்.

மொழியால் தான் ஓர் இனம் அடையாளம் காட்டப்படும். அரசியல் சட்டப்படி நாம் அனைவரும் இந்தியர்கள் எனச் சுட்டப்பட்டாலும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்பதால் நாம் தமிழர்கள் என்பதை மறக்கலாகாது. இந்தியர் – இந்து என்ற உணர்ச்சியை மட்டுமே மக்களிடையே விதைத்துவிட்டு தமிழ் – தமிழர் என்ற உணர்ச்சியைச் சாகடித்துவிடக்கூடாது. மாறாக, தங்களை இந்தியர் – இந்து என்று மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க்கும் இளையோரிடையே தமிழ் உணர்வையும் தமிழர் என்ற உணர்ச்சியையும் ஊட்ட வேண்டும். அந்தக் கடமையை நன்றாக உணர்ந்து செயல்பட்டிருக்கும் தமிழன்பர் தனேந்திரன் அவர்களைத் தமிழுயிர் பாராட்டுகிறது. அதேவேளையில், நமது தமிழரிடையே குறிப்பாக, இளையோரிடையே தமிழ் உணர்வை தொடர்ந்து ஊட்டிவருமாறு அவரைத் தமிழுயிர் வேண்டுகிறது.

இந்தியர் என்பது வெள்ளைக்காரன் நமக்குக் கொடுத்த அடையாளம். ஆனால், பரம்பரை பரம்பரையாக நாம், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர். எனவே, ஆங்கிலேயன் வைத்த இரவல் பெயரில் நீண்ட காலம் வாழ்ந்துவிட முடியாது. நமது மரபுவழியான உண்மைப் பெயரை மீட்டெடுத்து அதனையே உயர்த்திப்பிடிக்க வேண்டும். தமிழ் – தமிழர் என்ற உணர்ச்சியே எதிர்காலத்தில் நமக்கு நல்வாழ்வை ஏற்படுத்தும். உலக உருண்டையில் தமிழருக்குத் தனிநாடு அமையும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இனி நாம் அன்னியர் பெயரில் குளிர்காயத் தேவையில்லை. நமது சொந்த அடையாளத்தோடு; சொந்த பெயரோடு எழுந்திட வேண்டும்.

தமிழனென்று செல்லடா தலைநிமிர்ந்து நில்லடா!

எங்குப் பிறப்பினும் தமிழன் தமிழனே
இங்குப் பிறப்பினும் அயலான் அயலானே!

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

தமிழன் என்ற உணர்வை ஊட்டும் நல்ல அருமையான செய்தி. நான் புதிதாக தமிழுயிர் அகப்பக்கத்தை படித்தேன். சிறப்பாக உள்ளது. தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். காலத்திற்கு மிகவும் தேவையான காரியம்.
-குமரேசன் (Skudai, Johor Baharu)