வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

திங்கள், 14 ஏப்ரல், 2008

சித்திரைப் பிறப்பு தமிழ்ப் புத்தாண்டா?


தமிழருக்குப் புத்தாண்டு எது?
தைத்திங்களா? அல்லது சித்திரையா?

விக்கிரமாதித்த ஆண்டு - வடஇந்திய ஆண்டு
சாலிவாகன ஆண்டு - மற்றொரு இந்திய ஆண்டு
வைசாகி – பஞ்சாபியருக்குப் புத்தாண்டு
தீபாவளி – குசராத்தியருக்குப் புத்தாண்டு
பங்காப்த – வங்காளியருக்குப் புத்தாண்டு
குடிபத்வா – மராட்டியருக்குப் புத்தாண்டு
உகாதி – தெலுங்கருக்குப் புத்தாண்டு
விசு – மலையாளிகளுக்குப் புத்தாண்டு
சனவரி – ஆங்கிலேயருக்குப் புத்தாண்டு
இசிரி – முசுலிம்களுக்குப் புத்தாண்டு
பன்னிரு விலங்காண்டு – சீனருடைய ஆண்டு
நிப்பண்ணா – புத்த சமயத்தவருடைய ஆண்டு
மகாவீரர் ஆண்டு – சமணருடைய ஆண்டு

இப்படி எல்லாருக்கும் இருக்கிறது
தனியொரு ஆண்டு
தனித்தனிப் புத்தாண்டு

தமிழருக்குப் புத்தாண்டு எது?
தைத்திங்களா? அல்லது சித்திரையா?

தை என்பது பொங்கல்
சித்திரையே தமிழ்ப் புத்தாண்டு
என்கிறது ஒரு கூட்டம்!

தைதான் தமிழ்ப் புத்தாண்டு
சித்திரை இந்துப் புத்தாண்டு
என்கிறது இன்னொரு கூட்டம்!

தை எல்லாத் தமிழருக்கும் புத்தாண்டு
சித்திரை இந்துத் தமிழருக்குப் புத்தாண்டு
என்கிறது வேறொரு கூட்டம்!

இப்படி மூன்று கூட்டங்கள்
முட்டி மோதி மூக்குடைகின்ற
முட்டாள்தனம் வேரெங்குமே இல்லை!
மூலைகெட்டத் தமிழினம் சிந்திப்பதே இல்லை!
சித்திரை தமிழ்ப் புத்தாண்டு என்றால் – அது
சார்ந்திருக்கும் 60ஆண்டுக் கணக்கும்;
சோதிடக் குறிப்பும்; சமயச் சார்பும்
தமிழில் இல்லை! தமிழருடையது இல்லை!

சித்திரை இந்துப் புத்தாண்டு என்றால் – அதனை
வடநாட்டார், ஆந்திரர், கேரளர் கன்னடர் ஆகிய
வேறெந்த இந்துவும் நம்புவதில்லை!
புத்தாண்டாக நினைப்பதுவும் இல்லை!

தமிழரின் புத்தாண்டாய் சித்திரை வந்தது
தமிழ்ப் பகைவர் செய்துவிட்ட வேலை!
ஆரியரால் நேர்ந்த வரலாற்றுப் பிழை!
தமிழனை முடக்கும் இரும்புச் சிறை!

ஆதிகாலம் தொடங்கி தமிழனுக்குப் புத்தாண்டு
தைத் திங்கள் முதல் நாள் என்றே
ஐந்நூறு சான்றோர்கள் ஒன்றுகூடி
1921-இல் முடிவெடுத்தனர்;
1972-இல் நடைமுறைப்படுத்தினர்;
2008-இல் சட்டத்தை மறுவுறுதிப்படுத்தினர்.

பத்தன்று நூறன்று பன்னூறன்று
பல்லாயிரத்தாண்டாய் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தை முதல் நாள் பொங்கல் நன்னாள்
என்று புத்தாண்டை நிறுவி புரட்சிக்கவி பாட்டெழுதினார்.

இத்தனைக்குப் பிறகும் தமிழர் மயங்கலாமா?
எதுதான் புத்தாண்டு என கலங்கலாமா?
தமிழர்க்குப் புத்தாண்டு தைதான் என்றே
கொண்டாடுவோம்! தமிழ்வெல்ல ஒன்றாகுவோம்!

@ஆய்தன்: தை முதல் நாளே தமிழர்க்குப் புத்தாண்டு;
திருவள்ளுவர் ஆண்டே தமிழர்க்குத் தொடராண்டு!

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஒவ்வொரு புதிய ஆண்டு பிறந்ததும் தமிழரிடையே தலைதூக்கும் மாபெரும் சிக்கல் இந்தப் புத்தாண்டுச் சிக்கலாகும். அதையொட்டிய தங்களின் கருத்து சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளது. மிகப் பயன்மிக்க செய்திகளை வழங்கி உள்ளீர்கள். பாராட்டுகள்! வாழ்த்துகள்!

தமிழ்ப் புத்தாண்டு தைத்திங்கள் முதல்நாளே என்பதை உலகத் தமிழர் அனைவரும் கொண்டாடுகின்ற காலம் நிச்சயம் ஒருநாள் மலரும். ஆரியச் சூழ்ச்சியினால் தமிழர் இழந்துவிட்ட தமிழர் மெய்ம்மங்களும் உன்மைகளும் நிச்சயமாக ஒருநாள் வெளிப்பட்டே தீரும்.

சித்திரையில் புத்தாண்டைக் கொண்டாடும் ஆரிய வழிபட்ட மரபை விடுத்து, தமிழ் மரபு வழியிலான தை முதல் நாளையே தமிழர்கள் புத்தாண்டாகக் கொண்டாட வேண்டும். ஆரிய அமைப்படுத்தங்களிலிருந்து தமிழர் முற்றிலுமாக விடுபட தை முதல் நாளில் இனி புத்தாண்டைக் கொண்டாடுவோம்.

அன்புடன்,
தமிழுறவில் உங்களுடன்,
இளஞ்சித்திரன் - வெள்ளி மாநிலம்.

சிவயோகம் சொன்னது…

We need to study the Aryan Invasion Theory thoroughly.

வினோத்குமார் சொன்னது…

என்னைப் பொறுத்த வரையில், தைப் பொங்கல் பண்டிகை தான் !
உழவர்கள் கொண்டாடும், இத்தினத்தை வருடப்பிறப்பு என்பது ......? (புரியவில்லை)
எது எப்படியாக இருப்பினும், நான் ஏற்கனவே சொன்னது போல புதிய வருட தினத்தில் இருக்கும் நல்ல மனம், குணம் எப்போதும் அனைவருக்கும் நிலைத்திருக்க முயற்சி செய்தால், அனுதினமும் புத்தாண்டு கொண்டாட்டம் தான் !

பாரதி சொன்னது போல

என்னை புதிய உயிர் ஆக்கி !
என்றும் சந்தோசம் கொண்டிருக்கச் செய்வாய் !