வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வெள்ளி, 4 ஏப்ரல், 2008

தமிழைத் தீய்க்கிறது மின்னல் வானொலி


தமிழ்மொழியின் பெயரால் ஊழியமும் ஊதியமும் பெற்றுக்கொண்டு தமிழ் என்னும் தேமதுர தேக்கு மரவேரில் வெந்நீரை ஊற்றுகின்ற வேலையை தமிழ்ப்பகைவர் பலரும் செய்துவருகின்றனர். இவ்வேளையில் மின்னல் எப்.எம் எனப்படும் மின்னல் பண்பலையும் தமிழ் அழிப்பில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

மின்னலில் நல்லதமிழ் இனி தேவையில்லை. பேச்சு மொழியோ, வழக்கு மொழியோ, ஆங்கிலம் மலாய் கலந்த கலப்பு மொழியோ எதை வேண்டுமானாலும் பேசலாம். எந்த ஒரு வரைமுறையும் இல்லாமல் தட்டுத் தடுமாறி ஏதோ பெயருக்குத் தமிழ் பேசத் தெரிந்தால் போதும் எவர் வேண்டுமானாலும் வானொலியில் பேசலாம்; அறிவிப்பாளராக ஆகலாம் என்ற நிலை உருவாகி வருகின்றது. நல்லதமிழில் பேசும் அறிவிப்பாளர்களை ஓரங்கட்டிவிட்டு கலப்புமொழியில் உளறிக்கொட்டும் அரைவேக்காடு அறிவிப்பாளர்களைப் பணிக்கு அமர்த்தும் ஆபத்து வந்துகொண்டிருக்கிறது.

சுழியம் என்ற நற்றமிழ்ச் சொல்லை அழித்துவிட்டு 'பூச்சியம்' என்ற வடமொழியை வாழவைத்துக் கொண்டிருக்கும் திமிரில் மின்னல் இப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நல்லதமிழ்ப் பேசி அருமையாக நிகழ்ச்சிகளை வழிநடத்தி நேயர்களைக் கவர்ந்திழுத்த அறிவிப்பாளர்கள் சிலரை வேறு பிரிவுக்கு மாற்றிவிட்டு; இன்னும் சிலரை பணியிலிருந்து நீக்கிவிட்டு மின்னல் இப்போது அடாவடித்தனம் செய்து கொண்டிருக்கிறது. கேட்பாரும் மேய்ப்பாரும் இல்லாமல், எவருக்கும் பதில்சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை என்ற ஆணவத்தில் தன்மூப்பாக மின்னல் இப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

24 மணி நேரமும் சினிமா பாடல்; சினிமா செய்தி; சினிமா சினிமா என்று திரைத்துறை குப்பைகளையே ஒலிபரப்பி வருகிறது. பழையப் பாடல்கள் இனி மின்னலில் ஒலிபரப்பாகா. புதிய அறிவிப்பாளர்கள் கலப்புமொழியில் பேச வற்புறுத்தப்படுகிறார்கள். மலேசியத் தமிழ் வானொலியின் 62 ஆண்டுகால வரலாற்றில் எப்போதுமே இல்லாத அளவுக்கு இப்போது 'Meet you guys' என்று அறிவிப்பு வருகிறது. தமிழ் நிகழ்ச்சிகளுக்கு 'Food – Fun – Dance – Fair' என்று ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்படுகிறது. இளைஞர்களை எப்படியாவது கவர வேண்டும் என்பதுதான் மின்னலின் நோக்கமாம். அதனால், பெரியவர்களும் நல்ல தமிழ் உணர்வாளர்களும் இலக்கிய நயம் கொண்டவர்களும் இனநலம் கொண்டவர்களும் மின்னலுக்கு தேவையில்லையாம். இப்படியெல்லாம் பல கொடுமைகள் தமிழ் வானொலியான மின்னலில் நடந்துவருகின்றன.

இத்தனை கேடுகளும் கொடுமைகளும் கோளாறுகளும் மின்னலில் நடைபெறுவதற்கு முக்கியக் காரணம் அதனுடைய தலைமைதான். தாறுமாறாகத் தமிழ்ப் பேசி இராகா வானொலி முதல் இடத்தைப் பிடித்து விட்டதாம். அதனால் மின்னலிலும் கொச்சைத் தமிழில் பேசி கொடி நாட்ட போகிறார்களாம் கோமாளிகள். மின்னலில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் குறைமதியாளர்களைப் பலரும் கண்டித்து வருகின்றனர்.

மலேசியத் திராவிடர் கழகத்தின் கண்டனம்.
"தமிழர்களுக்குத் தமிழ்தான் விழியும் செவியும் ஆகும். இந்த நாட்டு சாலையோரங்களில் ஆங்காங்கே 'Bahasa Jiwa Bangsa' என்று விளம்பரத் தட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை மின்னலில் தற்காலத் தலைவர் நின்று நிதானமாகப் படிக்க வேண்டும். தாங்கள் வகிக்கும் பொறுப்பைப் பயன்படுத்தி மொழிக்கு உரம் இடவேண்டுமேயன்றி ஊறு விளைவிக்கக் கூடாது" என்று மலேசியத் திராவிடர் கழகத் தேசியத் தலைவர் இரெ.சு.முத்தையா கண்டித்துள்ளார்.

தங்கத் தமிழ் மணிமன்றத்தின் கண்டனம்
"இந்த நாட்டில் வாழ்கின்ற இந்தியர்களில் 85 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர்கள் தமிழர்கள்தான். ஆகவே, மலேசியத் தமிழர்களுக்காத்தான் மின்னல் வானொலிப் பிரிவு அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ளதே தவிர இராசசேகரன் தன் விருப்பம் போல் செயல்படுவதற்காக அல்ல" என்று மலேசியத் தங்கத்தமிழ் மணிமன்றத் தலைவர் சு.வை.லிங்கம் கண்டித்துள்ளார்.

தமிழுயிர் அன்பர் இளஞ்சித்திரன் கண்டனம்
ஒரு காலத்தில் மலேசியாவில் தமிழ் வளர்ச்சிக்குப் பாடாற்றிய இந்த வானொலி இன்று தமிழை அழித்தொழிக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. நன்றாகத் தமிழ்ப்பேசி நிகழ்ச்சிகளை வழிநடத்திய திறமையான அறிவிப்பாளர்களை முடக்கிப் போட்டுவிட்டது இந்த வானொலி. கொழுத்த யானை தலையில் மண்ணை வாரி போட்டுக்கொள்வதைப் போல வானொலி தலைவர் செயல்பட்டு வருகின்றார். மொழி, இன உணர்வற்ற ஒரு தனி மனிதனின் செயலால் 200 ஆண்டுகள் பாரம்பரியமும் வரலாற்றுச் சிறப்பும் மிக்க மலேசியத் தமிழினத்தின் அடையாளங்கள் அழிந்து போவதற்கான சூழ்நிலைகள் உருவாகி வருகின்றன. மொழியின் மீது நம்பிக்கையற்ற தனியாள் ஒருவரின் தன்மூப்பான செயலால் எதிர்காலத் தலைமுறைக்கு நல்லதமிழ் போய்ச்சேராமல் தடைவிதிக்கப்படுகிறது. தமிழை வாழவைக்க வேண்டிய வானொலி தலைவர் தமிழை அழித்துக் கொண்டிருப்பது வேதனைக்குரியது.


தமிழுயிர் அன்பர் இளையவேல் கண்டனம்
புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதையாக மின்னல் எப்.எம் வானொலி இப்போது ராகா வானொலியைப் பார்த்து தன்னுடைய தனி அடையாளத்தை இழந்து வருகிறது. மின்னலுக்கு என்று தனியான - தரமான நேயர்கள் கூட்டம் எப்போதுமே உண்டு என்பது அதன் தலைவருக்குத் தெரியாமல் போய்விட்டதா? மின்னலின் தீவிர நேயர்கள் படித்தவர்கள்; பண்பாளர்கள்; நல்லன விரும்பிகள்; தமிழ்ப் பற்றாளர்கள் என்பதை அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.மலேசியத் தமிழ் மக்களுடன் கடந்த 62 ஆண்டுகளாகப் பின்னிப் பிணைந்துள்ள பாசத்திற்குரிய மின்னல் வானொலி இப்படி இன்னலை ஏற்படுத்தக்கூடாது. தமிழ்மொழி வளர்ச்சியில் மாபெரும் பங்களிப்பைச் செய்துள்ள மின்னலின் தன்மூப்பான செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். தொடக்கக் காலத்தில் மலாயா வானொயாக இருந்து பின்னர் ரங்காயான் மேரா, வானொலி ஆறு என்ற பல்வேறு பெயர்களில் தமிழ்மொழிக்கு மகுடம் சூட்டிய இந்த வானொலி இப்போது தமிழை அழிக்க முனைந்திருப்பது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இரா.பாலக்கிருஷ்ணன், மருத்துவர் பூபாலன் போன்றோர் தலைமையில் நல்லதமிழை முன்னெடுத்த மின்னல் வானொலியின் தற்காலத் தலைவர் சிந்தித்து செயல்பட வேண்டும் எனத் தமிழுயிர் கேட்டுக்கொள்கிறது.


  • ய்தன்: தூங்குகின்ற தமிழர்கள் இருக்கும்வரை மின்னல் தமிழுக்குச் செய்யும் இன்னல்கள் ஓயப் போவதில்லை.


2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

NAMATHU AATHANGGAM ELLAARUKKUM VARAVENDUM.KURAIYAI SUTTIYA 'MAKKAL OSAI' 'MALAYSIA NANBAN'PATHTHIRIGAIYAALARGAL ALZHAIKKAPPATTU MIRATTAPPATTIRUKKIRAARGALAAM.iNI AVARGAL ETHIRPPAAGA EZHUTHA MAATTAARGALAAM.RAJA SEKARAN PANAM PANNUVATHARKKAAGA MINNAL VAANOLIYAI VAZHINADATHTHUGIRAAR.PANAM KODUPPAVARGALUKKU MATTUM VAAIPPU SAATHAGAMAAGIRATHU.PACHCHONTHIGAL SUYA NALATHUKKAAGA SORAM POIKKONDIRUKKIRAARGAL.

பெயரில்லா சொன்னது…

Abdullah-vin arsukku nal uthaaranam Minnal Vanoli.Pathavikkum,Koolikkum vanthavargal Amaichin Thalama seyalaalar,Thalaimai Iyakkunar,Vaanoli Thayaarippu,oliparappu iyakkunargalidam Rajasekaramnaippondra pullurivigal,perugindra lanjathilirunthu oru siru thogaiyai thanthu makkal oodagaththil oolzhal rajiyam nadaththugiraar.Rajasekaran udan paniyaatriyavargal naanggal.