வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

புதன், 12 மார்ச், 2008

நாடகத்தமிழ் வளர்க்கும் பாலா வாழ்க!


உலகில் பல்வேறு மொழிகளும் மக்களும் தோன்றுவதற்கு முன்பே செம்மாந்த நிலையினை அடைந்துவிட்ட மொழி தமிழாகும்; மக்கள் தமிழராவர். பல உலக மொழிகளுக்கு ஒலிக்குறிப்பு, வரிவடிவம் என எதுவுமே இல்லாத காலத்திலேயே இயல், இசை, நாடகம் என மூன்று தமிழாக முன்னிலை கண்டது நமது தமிழ்மொழி. இயலும் இசையும் இணைந்து இருப்பது நாடகத்தமிழில் தான். அதனால்தான் முத்தமிழில் நாடகத் தமிழ் சிறப்பிடம் பெறுகின்றது. அந்த நாடகத் தமிழைத் தமிழக மண்ணில் போற்றி வளர்த்தோர்கள் பற்பலர் ஆவர். நாடகத் தமிழானது புராண நாடகம், இலக்கிய நாடகம், தெருக்கூத்து, சமூக நாடகம், ஓரங்க நாடகம், நவின நாடகம் என பல்வேறு பரிணாமங்களைக் கண்டு இன்றளவும் வாழ்ந்து வருகின்றது. தமிழ் நாட்டில் திரைப்படம், சின்னத்திரை, தொலைக்காட்சி ஆகியவற்றின் தாக்குறவுகளுக்கு இடையில் நாடகத்துறை முற்றிலும் நலிந்துவிடாமல் அவ்வப்போது தலைக்காட்டிக் கொண்டிருக்கிறது.

தமிழ் மண்ணில் தோன்றி வளர்ந்த தமிழ் நாடகக் கலை காலங்களைக் கடந்து.. கடல்களைக் கடந்து நமது மலேசியத்திலும் ஓரளவு வாழ்ந்து வருகின்றது என்பதை நினைக்கும்போது மெருமிதம் ஏற்படுகின்றது. மலேசியத் தமிழர்களுக்கு இப்படி ஒரு பெருமிதம் ஏற்படுவதற்குக் காரணமாக விளங்குபவர் மலேசியத் தமிழ் மேடை நாடக இளம் இயக்குநர் எஸ்.டி.பாலா என்பவர்தான். மலேசியாவைப் பொறுத்தவரையில் நாடகத் துறையில் பெரும் பங்காற்றிய நாடகத் தந்தை ஆழி அருள்தாசன், சா.ஆ.அன்பானந்தன், பைரோஜி நாராயணன், பிரேம் கமால், வீ.கோவிந்தராஜ், நாடகக் காவலர் ஆர்.பி.எஸ்.மணியம் முதலான நாடகத்துறை முன்னோடிகளின் வரிசையில் தற்போது தமிழரின் இக்கலையைப் பேணிவருபவர் எஸ்.டி.பாலா என்றால் மிகையன்று.

அண்மையில் மலேசியத் தமிழர்களின் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் வரலாற்று நாயகர் துன் சம்பந்தன் அவர்களின் இறவாப் புகழ் பேசும் 'சம்பந்தன்' என்ற மேடை நாடகத்தை அரங்கேற்றி வரலாற்றுச் சாதனை படைத்திருக்கும் இளஞர் பாலாவைத் 'தமிழுயிர்' நெஞ்சாரப் பாராட்டுகிறது. ஏழைத் தமிழர்களுடன் ஏழையாகவே வாழ்ந்து, மக்களுக்குச் சேவை செய்வதையே தம்முடைய உயிர்மூச்சாகக் கொண்டு, தமிழர்தம் நல்வாழ்வுக்குப் பெரும் பாடாற்றிய மலேசிய இந்தியர் காங்கிரசு கட்சியின் ஐந்தாவது தலைவராகிய துன்.வி.தி.சம்பந்தன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அருமையாக மேடை நாடகமாக்கி அரங்கேற்றம் செய்துள்ள பாலாவை எவ்வளவுப் பாராட்டினாலும் தகும்.

'சம்பந்தன்' மேடை நாடகம் கடந்த பிப்பிரவரி 29ஆம் நாள் தொடங்கி மார்ச்சு 4 வரையில் கோலலம்பூரில் நடைபெற்றது. நாட்டின் கலைத்துறைக்கு அடையாளமாக கம்பீரமாக வீற்றிருக்கும் 'இசுத்தானா புடாயா'வின் ஆதரவோடு இந்த நாடகம் அரங்கேறியிருப்பது கண்டு மலேசியத் தமிழ்க் குமுகாயம் பெருமைப்பட வேண்டும்.

மேடை நாடகத் துறையில் முழுமூச்சாக ஈடுபட்டுவரும் பாலாவுக்கு இது 19ஆவது நாடகமாகும். தமிழகம் வரையில் சென்று நாடக அரங்கேற்றம் செய்டுள்ள இந்த இளைஞர் தொடர்ந்து மேலும் பல நாடகங்களை நடத்தி வெற்றிபெற 'தமிழுயிர்' மனதார வாழ்த்துகிறது. தமிழரின் தொன்மைக் கலையும் முத்தமிழின் மூன்றாம் தமிழுமாகிய நாடகத்தைத் தொடர்ந்து பேணிவரும் பாலாவுக்கு ஒட்டுமொத்தத் தமிழர்களும் துணைநிற்க வேண்டும்; பாலாவைப் போற்றி ஊக்கப்படுத்த வேண்டும்.  • ஆய்தன்: நாடகத் தமிழைக் காக்கும் பாலா தமது பெயரில் உள்ள 'எஸ்.டி' என்பதைத் தமிழாகவே எழுதி இயற்றமிழையும் காக்க வேண்டுகிறேன்.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

வணக்கம். வாழ்க! தமிழ்நலம் சூழ்க! மலேசியத் தமிழ் நாடகத்துறையினை இன்றளவும் கட்டிக்காத்துவரும் இளம் இயக்குநர் பாலா அவர்களைப் பற்றி மிக அருமையான கட்டுரை.

தமிழ்மொழியில் நடக்கும் கேடுகளை வன்மையாகக் கண்டித்துவரும் தமிழுயிர் தமிழுக்கு ஆக்கமான பணிகள் நடைபெறும்போது பாராட்டவும் தயங்குவதில்லை என்பதற்கு இந்தக் கட்டுரை நல்லதொரு சான்று.

இதுபோன்ற செய்திகளையும் தமிழுயிர் தொடர்ந்து வெளியிட வேண்டும். மலேசியாவில் தமிழுக்கு நிகழ்ந்துள்ள ஆக்கமான வளர்ச்சிகளையும் தமிழுயிர் பதிவுசெய்ய வேண்டும்.

அன்புடன்,
இளஞ்சித்திரன்,
வெள்ளி மாநிலம்.