தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயப் பாடமானது
நூற்றாண்டுகால போராட்டத்திற்குப் பின்னர் இப்போதுதான் தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயப் பாடமாக ஆக்கப்பட்டுள்ளது. ஒருபக்கம் இச்செய்தி உலகத் தமிழர்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக இருந்தாலும் பிறந்த மண்ணிலேயே தமிழுக்கு ஏற்பட்டுள்ள இப்படியொரு அவல நிலைகண்டு மனம் கொந்தளிக்கிறது.
இந்திய நாட்டின் மற்றைய மாநிலங்களில் அவரவர் தாய்மொழிகள் பள்ளிகளில் கட்டாய மொழிகளாக இருக்கும்போது, தமிழ்நாட்டுப் பள்ளிகளில் மட்டும் தமிழர்களின் தாய்மொழியாம் தமிழுக்கு இடமில்லை என்பது வெட்கக் கேடான நிலைதான். இத்தனை காலத்திற்குப் பிறகு இப்போதுதான் தமிழகத் தமிழனுக்கு தாய்மொழி உணர்வு வந்துள்ளது போலும். தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சிமொழியாக இருந்தாலும் கல்விமொழியாக இல்லாத அவலநிலை இப்போது நீங்கியுள்ளது. இனி தமிழுக்குத் தமிழ்மண்ணில் நல்ல எதிர்காலம் மலரும் என்று மலேசியத் தமிழர்கள் எதிர்பார்க்கிறோம்.
தமிழ்நாட்டில் தமிழைக் கட்டாயப் பாடமாக்கும் சட்டம் 12-6-2006இல் தமிழக அரசினால் நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டத்தின்படி 2006-2007ஆம் கல்வி ஆண்டில் முதலாம் வகுப்பு தொடங்கி 10ஆம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப் பாடமாகப் படிப்படியாக அமுலாக்குவது அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
ஆயினும், இந்தச் சட்டத்தை எதிர்த்து கன்னியாகுமரி மாவட்ட மலையாள சமாஜம், நாயர் சேவை சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தொடக்கக் கல்வி பயிலும் மாணவர்களிடையே தமிழைக் மட்டும் பயிலவேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது. தமிழநாட்டில் ஆந்திரா மற்றும் கேரளா மாநில எல்லைகளில் முறையே தெலுங்கு, மலையாள மொழிகளைப் பாடமாகப் பயிலும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என அவர்கள் வாதிட்டனர்.
எனினும், தமிழகத்தில் பயிலும் அனைத்து மாணவர்களும் தமிழைக் கட்டாயம் கற்க வேண்டும். இதன் மூலம் தமிழ்மொழியின் பெருமையை உணர வேண்டும் என்ற அடிப்படையில்தான் அரசு சட்டத்தைக் கொண்டுவந்து உள்ளது. எனவே, தமிழைக் கட்டாயப் பாடமாக்கும் சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்தத் தீர்ப்பினால், தமிழை அழிப்பதற்குக் காலங்காலமாக சூழ்ச்சிகளும் கீழறுப்புகளும் குளறுபடிகளும் செய்துவருகின்ற தமிழ்ப்பகைவர் கூட்டத்தினர் மூக்கு மொக்கையாகி குப்புற கவிழ்ந்து மண்ணைக் கௌவியுள்ளனர். தமிழ்நாட்டில் தமிழுக்கு விடியல் ஏற்பட்டுள்ளது கண்டு தமிழ்க்கூறு நல்லுலகம் உவகை அடைந்துள்ளது. இதன்வழி, தமிழின் எழுச்சியும் வளர்ச்சியும் விரைவுபடும்; செம்மொழி தகுதிபெற்ற தமிழ் அனைத்துத் துறைகளிலும் நிறைவுபடும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. தமிழுக்குப் புதிய அடையாளமும் ஆக்கமும் ஏற்படும் என்ற உறுதிப்பாடு கிடைத்துள்ளது.
- ஆய்தன்: தமிழகத் தமிழர்களே.. உங்களுக்காக இல்லாவிட்டாலும் கடல்கடந்து வாழும் தமிழர்களை நினைந்து தமிழை வாழவையுங்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக