வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2008

மலேசியத்தில் தமிழ்க் காப்பகம்மலேசிய மண்ணில் தமிழ்மொழியைப் பேணவும் வளர்த்தெடுக்கவும், தமிழ் சார்ந்த இயக்கங்களின் தலைவர்கள் பலர் ஒன்றுகூடி 'தமிழ்க் காப்பகம்' ஏற்படுத்துவதற்கு முடிவெடுத்துள்ளனர். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கூட்டம் கடந்த 8..8.2008ஆம் நாள் சிலாங்கூர் சா ஆலத்தில் வெற்றிகரமாக நடந்தேறியது.

மலேசியத்தில் தமிழ்மொழிக்கு எதிராக ஏற்படுகின்ற அழிப்பு வேலைகளை வேருடன் அறுத்தெறியவும், தமிழுக்கு ஆக்கமான பணிகளை முன்னெடுக்கவும் ஆகிய முகாமையான இலக்குகளை முன்வைத்து 'தமிழ்க் காப்பகம்' அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்கள் அனைவரும் தங்களின் கருத்துகளை வெளிப்படையாகக் கூறி கலந்துரையாடினர்.

மலேசியத்தில் தமிழ் நிலைப்பாடு உறுதிசெய்யப்படுவது மிகவும் அவசியம் என்பது எல்லாத் தலைவர்களின் ஒருமித்தக் கருத்தாக அமைந்தது. மலேசிய அரசு தமிழைப் படிப்பதற்கான வாய்ப்புகளைச் சட்டமுறைப்படி வழங்கி வருகின்றது. அந்த வாய்ப்புகளைத் தமிழர்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மலேசியத் தமிழ்க் காப்பகத்திற்கு, மலேசியத் தங்கத் தமிழ் மணிமன்றத்தின் தேசியத் தலைவர் தமிழ்த்திரு சு.வை லிங்கம் தலைமைப் பொறுப்பேற்றுள்ளார். துணைத் தலைவராக மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் தலைவர் இணைப் பேராசிரியர் மருத்துவர் க.குமரன், உதவித் தலைவர்களாக தமிழ்த்திரு இரே.சு.முத்தையா (தேசியத் தலைவர், மலேசியத் திராவிடக் கழகம்), தமிழ்த்திரு பி.பொன்னையா (தேசியத் தலைவர், மலேசியத் தமிழ் இளஞர் மணிமன்றப் பேரவை) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். தமிழுக்கு நலிவு ஏற்படும்போதெல்லாம் முன்னின்று போராடும் செயல்வீரர் தமிழ்த்திரு இரா.திருமாவளவன் (தேசியத் தலைவர், மலேசியத் தமிழ்நெறிக் கழகம்) செயலாளராகவும், டத்தோ செல்லக்கிருஷ்ணன் (தங்கத் தமிழ் மணிமன்றம்) பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும், கோலாலம்பூர் முத்தமிழ்ப் படிப்பகத்தின் சிவராசு வேதையா, ம.தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் பொன்.அன்பழகன், ம.திராவிடர் கழகத்தின் நாகபஞ்சு, ம.தமிழ்நெறிக் கழகத்தின் கனல்வீரன், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் மருத்துவர்.ம.கிருஷ்ணன், திருக்குறள் பணிக்களத்தின் சுப.நாராயணசாமி, ம.தமிழ் கலைஞர் இயக்கத்தின் வி.தி.கிருஷ்ணன், ம.இந்திய கலாச்சார மன்றத்தின் ஆனந்தன், ம.கலைஞர் கருணாநிதி மன்றத்தின் அன்பு இதயன், ம.தமிழர் கலைமன்றத்தின் ஜோசப் செபஸ்டியன், ம.தமிழ் மணிமன்றத்தின் கை.சிவப்பிரகாசம் ஆகியோர் 'தமிழ்க் காப்பகத்தின்' செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மலேசியத்தில் தமிழைக் காக்க உருவாக்கப்பட்டுள்ள இந்தத் 'தமிழ்க் காப்பகம்' சீருடன் செயல்பட்டு சிறப்பான திட்டங்களை முன்னெடுத்து வினையாற்றிட 'தமிழுயிர்' மனதார வாழ்த்துகின்றது. தமிழ்க் காப்பகத்தின் எல்லாப் பணிகளுக்கும் 'தமிழுயிர்' முழு ஆதரவை வழங்க அணியமாக உள்ளது. 'தமிழ்க் காப்பகத்தின்' சீரிய தமிழ்ப்பணிகளைப் பற்றிய செய்திகளைத் தமிழருக்குப் பரப்புவதற்கும்; 'தமிழுயிர்' முழுமையாக ஈடுபடும்.

ஆகவே, 'தமிழ்க் காப்பக' பொறுப்பாளர்கள் தங்களின் அறிக்கைகள், செய்திகள் ஆகியவற்றை 'தமிழுயிருக்கு' விடுத்துவைக்கலாம்.

@ஆய்தன்:-
எமது பகைவர் எங்கோ மறையட்டும்
இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே!

1 கருத்து:

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

தமிழ்க் காப்பகம் சிறப்பான பணிகளைச் செய்ய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.

மலேசியாவில் செயல்படும் அனைத்து தமிழ் இயக்கங்களும் தமிழ்க் காப்பகத்திற்கு முழு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்க வேண்டும்.