வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

செவ்வாய், 11 செப்டம்பர், 2007

தமிழ்ப்பள்ளிகளை ஒழிக்க வேண்டுமா?



"மலேசியாவில் செயல்படும் தமிழ்ப் பள்ளிகள் ஒழிக்கப்படுவதை நான் காண விரும்புகிறேன்" என்று ஓய்வுபெற்ற முறையீட்டு நீதிபதி டத்தோ.வி.சி.ஜார்ஜ் என்பவர் பேசினார் என்ற செய்தி கடந்த 4-9-2007ஆம் நாள் தமிழ் நேசன், மலேசிய நண்பன் ஆகிய தமிழ் நாளிதழ்களில் வெளிவந்தது. 'ரிலெவன்' எனப்படும் வழக்கறிஞர் மன்ற செய்தியிதழுக்கு வழங்கிய நேர்க்காணலில் அந்த முன்னாள் நீதிபதி அவ்வாறு கருத்து தெரிவித்திருந்ததை வழக்கறிஞர் அ.சிவநேசன் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். 'ரிலெவன்' இதழுக்கு ஆங்கிலத்தில் வழங்கிய நேர்க்காணலில் முன்னாள் நீதிபதி டத்தோ வி.சி.ஜார்ஜ் "I would like to see tamil schools abolished" என்று சொன்னது நாட்டில் உள்ள எமது தமிழ் மக்களிடையே எரிமலையாய் வெடித்தது. நாடெங்கிலும் அனைவரும் குமுறிப் போயினர்.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, அரசு சார்பற்ற இயக்கம், ஆசிரியர் சங்கம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பொதுமக்கள், மாணவர்கள் என குமுகாயத்தின் அனைத்துத் தரப்பினரும் ஒரே குரலில் ஒன்றாய்ச் சேர்ந்து முன்னாள் நீதிபதிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி நின்றனர். அவர் மன்னிப்புக் கோரவேண்டும் என்றும் நாடெங்கெங்கிலும் தமிழ்த் தலைவர்களும் மக்களும் பொங்கி எழுந்தனர்; கண்டனம் தெரிவித்தனர்; அமைதி மறியல் நடத்தினர்; எதிர்ப்புப்போராட்டம் நடத்தினர். மலேசிய வரலாற்றில் தனிப்பட்ட வேற்றுமைகளை மறந்து எமது தமிழ்மக்கள் அனைவரும் ஒரே குடையின்கீழ் நின்று தமிழ்ப்பள்ளிக்கு ஆதரவான போராட்டத்தை முன்னெடுத்தது வரலாற்றுப் பெருமையாக அமைந்தது. 50 ஆண்டுகாலத்தில் மலேசியத் தமிழ்க் குமுகாய விடியலுக்கான முன்னுரையாகவும் அமைந்தது. இந்தக் குமுகாயப் போராட்டத்தின் நடப்புகளைத் 'தமிழுயிர்' இங்கே நாட்குறிப்பாக வழங்குகின்றது.

4.9.2007:- *'ரிலெவன்' எனப்படும் வழக்கறிஞர் மன்ற இதழுக்கு வழங்கிய ஒரு நேர்க்காணலில் முறையீட்டு வழக்குமன்ற முன்னாள் நீதிபதி டத்தோ வி.சி.ஜார்ஜ் "தமிழ்ப்பள்ளிகள் ஒழிக்கப்படுவதை நான் காண விரும்புகிறேன்" என்று கூறியிருப்பதாக வழக்கறிஞர் ஆ.சிவநேசன் பொதுவுக்கு வெளிப்படுத்தினார். அதற்காக கடுமையான கண்டனமும் தெரிவித்தார். தன்னுடைய பேச்சினை முன்னாள் நீதிபதி மீட்டுக்கொள்ள வேண்டும் எனவும் இல்லையேல் காவல்துறையில் புகார் செய்யப்படும் எனவும் கூறினார்.

5.9.2007:- *முன்னாள் நீதிபதி வி.சி.ஜார்ஜ் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியும் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்தும் பல இயக்கத் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டனர். மலேசியத் திராவிடர் கழகத் தலைவர் ரெ.சு.முத்தையா, மனித உரிமை ஆணையர் டத்தோ.என்.சிவசுப்பிரமணியம், மலேசிய இந்து சங்கத் தலைவர் டத்தோ.அ.வைத்தியலிங்கம், ஐ.பி.எப். கட்சியின் தேசிய உதவித் தலைவர் எம்.சம்பந்தன், சிலாங்கூர் மக்கள் வளர்ச்சிக் கழகத் தலைவர் கே.பஞ்சமூர்த்தி, மலாயா தமிழ்ப்பள்ளி ஆசிரியர் சங்கத் தலைவர் பெ.தர்மலிங்கம், மலேசியத் தமிழ் இளஞர் மணிமன்றத் தலைவர் பி.பொன்னையா, பயனீட்டாளர் சங்கத் தலைவர் டத்தோ சுலைமான் ஆகியோர் தங்கள் கண்டனங்களை வெளியிட்டனர்.

* இவ்விவகாரம் பற்றி விளக்கம் பெற சென்ற மலேசியநண்பன் செய்தியாளர் நக்கீரனிடம் நீதிபதி மரியாதைக் குறைவாக நடந்துகொண்டதோடு எந்த விளக்கமும் அளிக்கவில்லை. *மேலும், வழக்கறிஞர் அ.சிவநேசனும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரனும் காவல்துறையில் புகார் செய்யவிருப்பதாகக் கூறினர். *முன்னாள் நீதிபதியின் வரப்புமீறிய பேச்சைக் கண்டித்தும் அவர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கெடா, சுங்கை பட்டாணி மகா ஜோதி தமிழ்ப்பள்ளி பெற்றோர்களும் மாணவர்களும் அமைதி மறியல் நடத்தினர்.

6.9.2007:- *முன்னாள் நீதிபதியின் கருத்துக்கு ம.இ.கா.வின் தேசியத் தலைவர் டத்தோ சிறி ச.சாமிவேலு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார். கல்வி அமைச்சின் நாடாளுமன்ற செயலாளர் மாண்புமிகு கோமளாதேவி, ம.இ.கா.தலைமைச் செயலாளர் டத்தோ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் முதலான இன்னும் பிறருடைய கண்டனங்கள் தொடர்ந்தன.

*இதற்கிடையில், முன்னாள் நீதிபதிக்கு எதிரான காவல்துறை புகாரை ஒத்திவைப்பதாகவும் தமது பேச்சு தொடர்பாக விளக்கம்தர அவருக்கு வாய்ப்பு வழங்குவதாகவும் வழக்கறிஞர் அ.சிவநேசன் குழுவினர் அறிவித்தனர்.

7.9.2007:- *இந்தச் சிக்கல் தொடர்பாக விளக்கம் அளிப்பதாக முன்னாள் நீதிபதி முன்வந்த செய்தியை நாளிதழ்கள் அறிவித்தன. அ.சிவநேசன், எம்.குலசேகரன் முதலான தமிழ் வழக்கறிஞர்கள், இயக்கப் பொறுப்பாளர்கள், இதழாளர்கள் ஆகிய தரப்பினரைச் சந்திக்க அவர் முன்வந்திருக்கும் செய்திகள் வந்தன.

8.9.2007:- *"தமிழ்ப்பள்ளிகள் தொடர்பாக மன்னிப்பு கேட்க மாட்டேன். தமிழ்ப்பள்ளிகள் மேசமான நிலையில் இருப்பதால் அவை ஒழிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டேன்" என்று முன்னாள் நீதிபதி தம் கருத்தில் உறுதியாக இருக்கும் செய்திகள் வெளிவந்தன. தம் தாய்மொழி மலையாளம்; சமயம் கிறித்துவம் தாம் மலேசிய மலையாளிகள் சங்க நிருவாகக் குழு உறுப்பினர், தன்னுடைய பிள்ளைகளை மலையாள மொழி படிக்க கேரளாவிற்கு அனுப்பி வைத்ததாகத் தன்னை அறிமுகப்படுத்திகொண்ட அவர் கூட்டத்தில் கலந்துகொண்டோர் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் இருந்ததாகவும் அப்படியே சொன்ன பதில்கள் குழப்பமாக இருந்ததாகவும் நாளிதழ்கள் கூறின. *நீதிபதியின் கூற்று தமிழ் மக்களை மேலும் சினமடையச் செய்தது.

9.9.2007:- *டத்தோ.வி.ஜார்ஜ் மன்னிப்பு கேட்க மறுத்ததைத் தொடர்ந்து 8.9.2007இல் தலைநகர் பிரிக்பீல்ட்டு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்ட செய்தி வெளிவந்தது. *ஜார்ஜை கைது செய்க என்ற கோரிக்கையும் செய்தி தலைப்பாக வெளிவந்தன. *மேலும், இன்னும் 10 நாட்களில் கோலாலம்பூரில் மிகப் பெரிய கண்டனô பேரணி நடத்தப்படும் என்றும் அ.சிவநேசன் தெரிவித்தார்.

10.9.2007:- *முன்னாள் நீதிபதியின் உருவ பொம்மை தலைநகர் பிரிக்பீல்ட்டு சாலையில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காலணியால் அடித்து பின்னர் தீயிடப்பட்ட செய்திகள் நாளிதழ்களை அலங்கரித்தன. மக்கள் செயலணித் தலைவர் கலைவாணர் தலைமையில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. *காஜாங் இந்து நடவடிக்கைக் குழு காவல்துறையில் புகார் செய்தனர். *மலேசியத் தமிழ்நெறிக் கழகம், மலேசிய இந்தியர் சங்கம், பினாங்கு ஜனநாயக செயல் கட்சி, பினாங்கு ஐ.பி.எப், பினாங்கு இந்து சங்கம், பினாங்கு அறிவாலயம் ஆகியோரின் கடுமையான எதிர்ப்பு அலைகள் கண்டன அறிக்கைகளாக வெளிவந்தன.
11.9.2007:- பேரா, பாரிட் புந்தாரில் இயங்கும் செயிண்ட்மேரி தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கமும், பாரிட் புந்தார் தமிழ் இளைஞர் மணிமன்றத்தினரும் காவல்துறையில் புகார் செய்ததாக ம.நண்பன் செய்தி கூறியது. தமிழ்ப்பள்ளிகளின் நிலை குறித்து முடிவுசெய்ய வேண்டியவர்கள் தமிழ்ப்பள்ளிகளுக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்பும் பல்லாயிரக்கணக்கான பெற்றோர்களே அன்றி யாரோ ஒரு பார்வையாளர் அல்ல. நாட்டின் அரசியல் சட்டத்தை அவமதித்ததற்காகவும் அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் குந்தகம் விளைவித்ததற்காகவும் முன்னாள் நீதிபதி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெ.ஆ.சங்கத் தலைவர் முருகையா தம் அறிக்கையில் குறிப்பிட்டுளார்.

12.9.2007:- டத்தோ ஜார்ஜுக்கு எதிராக மேலும் ஒரு புகார் பினாங்கு நிபோங் திபாலில் செய்யப்பட்டது. செபராங் பிறை வட்டாரத்திலுள்ள கலிடோனியா இளைஞர் மன்றச் செயலர் கோ.அமிதலிங்கம், ஜாவி தோட்டத் தமிழ்ப்பள்ளி பெ.ஆ.சங்கத் தலைவர் பெ.சுப்பிரமணியம், டிரான்ஸ் கிரியான் தோட்ட கெராக்கான் கிளையின் சார்பில் எம்.நலிங்கம், பினாங்கு மாநில இந்திய மாணவர்களின் பெற்றோர் சங்கத் தலைவர் ம.தமிழ்செல்வன் ஆகியோர் புகார் செய்தனர். தனது அறிக்கையைத் திரும்பப் பெறுவதோடு பொது மன்னிப்பும் கேட்க அவர் மறுப்பாரேயானால் அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ம.தமிழ்செல்வன் கேட்டுக்கொண்டார்.
  • ஆய்தன்: தமிழ்ப்பள்ளியின் நலன்காக்க துடித்தெழுந்த தமிழ்த் தாயின் வீரத்திரு மக்களுக்குத் எமது வீரவணக்கம்! இவர்களைப் போல் ஒற்றைத் தமிழ்மகன் உள்ளவரை; உள்ளத்தில் தமிழ்த்தாய் ஆட்சி புரியும்வரை தமிழ் நிலைக்கும்! தமிழ்ப்பள்ளிகள் நீடிக்கும்!

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

தமிழ் குமுகாயத்தில் எழும் இதுபோன்ற சிக்கல்களை மிக நேர்த்தியாக தரும் தமிழுயிர் வலைப்பதிவு மிகவும் சிறப்புற அமைந்துள்ளது. தமிழ் குமுகாயத்திற்கு மிக மிக தேவையான வலைப்பதிவாகத் தமிழுயிரைக் கருதுகிறேன். தொடரட்டும் தமிழுயிரின் தமிழ்ப்பணி. வாழ்த்துகள்.

அன்புடன்,
சுப.நற்குணன், பேரா.

வே. இளஞ்செழியன் சொன்னது…

மேனாள் நீதிபதி அவர்கள் கூறியது கண்டிப்பாக தவறான ஒன்றாக இருந்த போதிலும், அவருக்கு எதிராக காவல்துறையில் புகார் செய்ததில் எனக்கு உடன்பாடு இல்லை. காரணங்கள்: 1) வி.சி. ஜியார்ஜ் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் பதிலளித்தார் (நேசன் இதழைக் கவனிக்க); தொடர்ந்து, மன்னிப்பு கேட்காவிட்டாலும், தமதறிக்கையைத் தமிழ்ப்பள்ளிகள் சீனப்பள்ளிகளுக்கு ஒப்பாக உயர வேண்டும் என்று மாற்றிக்கொள்வதாக கூறினார்; வந்திருந்தோர் (சிவனேசன் உட்பட) அவர் கூறியவற்றை ஏற்றே வெளியேறினர். வெளியே வந்து இவ்விடயத்தை அரசியலாக்கியது கேவளம். 2) இது மக்களாட்சி; பேச்சுரிமையை விரும்பும் நாம் மற்றவர்களுக்கும் அதனை அளித்தல் வேண்டும். வி.சி. ஜியார்ஜ் தனது பேச்சுரிமையைப் பயன்படுத்தினார். அவரது கருத்தைச் சுட்டிக்காட்டுவது, கண்டனம் தெரிவிப்பது தமிழர் கடமை. அரசியலாக்குவது சுயநலம்.

தமிழ், தமிழ்ப்பள்ளி என்று குதித்தெழுத்த அத்தனை தமிழ்ப்பள்ளி 'காப்பாளர்களில்' எத்தனை பேர் தங்கள் குழந்தைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பியுள்ளனர்? தங்கள் குழங்தைகளுடன் தமிழில் உரையாடுகின்றனர்? வேடதாரிகள்.

குறிப்பு: வழக்கறிஞர் சிவனேசனின் குழந்தைகள் தமிழ்ப்பள்ளியில் பயின்றனர்.

பெயரில்லா சொன்னது…

வே.இளஞ்செழியன் அவர்களே, அந்த நீதிபதிக்கு எதிராக புகார் செய்தது மட்டும் போதாது. அவரை நீதிமன்றம் வரை இழுத்துச் சென்றிருக்க வேண்டும் என்பது எனது கருத்து. காரணம், எந்தக் கொம்பனும் தமிழ்ப்பள்ளி உரிமை பற்றி பேசுதல் கூடாது. கருத்து சுதந்திரத்தை வேறு விசயத்தில் வைத்துக்கொள்ளட்டும் அந்த நீதிபதி. மலாய்க்காரரும் சீனரும் அவர்கள் உரிமை பற்றி எதிர்மறையாக பேசுவதில்லை. நாம் மட்டும் ஏன் இப்படி? தன் தாய்மொழி வேண்டும் என்பதற்காக கேரளா வரை தன்னுடைய பிள்ளையை அனுப்பி வைக்க தெரிந்த அந்த நீதிபதிக்கு தமிழர்கள் தங்கள் தாய்மொழியை படிக்க வேண்டுமே என்று சிந்திக்காதது ஏன்? தன் தாய்மொழி மேல், தமிழ்மொழி கேவலம் என்பது போன்ற தோரனையில் அவர் பேசியுள்ளார் என்பது உங்களுக்குப் புரியவில்லையா? அவர் அவ்வாறு பேசியதற்குக் காரணம் தமிழ்ப்பள்ளியின் மீது இருக்கும் காப்புணர்வு அல்ல! அது மிக மோசமான காழ்ப்புணர்வு! தமிழுக்கு இந்த நாட்டில் அங்கீகாரன் கிடைக்கிறதே என்ற ஒரு கூட்டத்தாரின் மன அரிப்பு! இந்தியர் என்ற போர்வைக்குள் பதுங்கிக்கொண்டும் எல்லா வித சலுகைகளையும் வாரிக்கொண்டு குடும்பம் குட்டிகளை வளர்த்துக்கொண்டு பிறகு தன் சுயரூபத்தைக் காட்டிவிடும் நயவஞ்சகர்களையும் துரோகிகளையும் உங்களால் அடையாளன் கண்டுகொள்ள முடியவில்லையா? இந்தியர்களில் பெரும்பகுதியான தமிழர்களின் உரிமையில் இந்தியர்கள் என்ற போர்வைக்குள் ஒளிந்துகொண்டு ஏளனம் பேசுவதும் பகடி பண்ணுவதும் கடுமயாக கண்டிக்கப்பட வேண்டிய செயல்கள். தமிழர்கள் வேடதாரிகள் என்றால், இந்தியர் என்ற பெயரில் ம.இ.கா. இருக்க, பிறகு எதற்கு கேரளா மக்களுக்கு ஒரு சங்கம்? ஆந்திரா மக்களுக்கு ஒரு சங்கம்? கன்னட மக்களுக்கு ஒரு சங்கம்? பஞ்சாபி மக்களுக்கு ஒரு சங்கம்? யார் வேடதாரிகள்? இந்தியர் என்ற போர்வை போர்த்திக்கொண்டு அரசாங்கத்தின் சலுகைகளைக் கொள்ளையடித்துக்கொண்டு உள்ளுக்குள்ளே தன் சுய ரூபத்தில் ஆட்டம் போடுபவர்களே வேடதாரிகள். இவர்களுக்கு தமிழரைப் போல இந்தியர் என்ற ஒரு குடைகுள்ளே வரமுடியுமா?

இனிமேல் யாரும் தமிழர் உரிமையில் கைவைக்க கூடாது என்பதற்காக மேனாள் நீதிபதியை கண்டித்ததும் உருவ பொம்மையை செருப்பால் அடித்ததும் தீயிட்டுக் கொளுத்தியதும் நீதியே..! நியாயமே..! இந்த விவகாரத்தில் எனது மனம் கூ..ள்!
-சித்தன் சிவாஜி