வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2007

தமிழ்ப் பழிப்பும்! தமிழர் விழிப்பும்!

18-08-2007 என்ற நாள் மலேசியத் தமிழ் வரலாற்றில் மறக்க முடியாத நாள். இந்த நாளில்தான் 'மலேசிய நண்பன்' நாளிதழ் தமிழ் நெடுங்கணக்கில் மாற்றம் செய்ய சில தரப்பினர் முனைகிறார்கள் என்று ஒரு அதிரடியான செய்தியை வெளியிட்டது. முந்துதமிழின் அடித்தளத்தையே ஆட்டம்காணச் செய்யும் இந்தக் கொடுஞ்செயலை அறிந்து தமிழ் உணர்வாளர்களும் உறவோர்களும்; அறிஞர்களும் அடிமட்டத் தொண்டர்களும், தமிழ்சார்ந்த அமைப்புகளும் தமிழ்ப் பற்றாளர்களும் பேரதிர்ச்சி அடைந்தனர். தமிழுக்கு எதிராக செயல்பட்டதாக அடையாளம் கூறப்பட்ட பாடத்திட்ட மேம்பாட்டுக் குழுவுக்கு எதிராகப் பொங்கி எழுந்தனர். நெடுங்கணக்கில் மாற்றம் என்னும் செய்தியோடு 'தமிழ் நீசமொழி' என்று யாரோ ஒருவர் பேசிவிட்டார் என்னும் உணர்ச்சிமிகு செய்தியும் சேர்ந்துகொண்டதால் தமிழ் மக்கள் பெரிதும் கொதிப்படைந்து போய்விட்டனர் என்பது உண்மை. தேசிய அளவில் இதற்குக் கண்டனக் குரல்கள் உரக்க ஒலித்தன. மலேசியத் தமிழுலகம் இதுவரை கண்டிராத அளவுக்கு மிகப்பெரிதான கொந்தளிப்பை உருவாக்கிய இந்த 'வரலாற்றுச்' சிக்கல் பற்றியும் அதனைத் தொடர்ந்து எழுந்த தீப்பிழம்புக்கு ஒப்பான கண்டன முழக்கங்கள் பற்றியும் இறுதியில் ஏற்பட்ட தீர்வு பற்றியும் இங்கே எமது 'தமிழுயிர்' தொகுத்து வழங்குகிறது.

செய்தி : பாடத்திட்ட மேம்பாட்டுத் திட்டக் குழுவில் தமிழ் மொழிக்காக நியமிக்கப்பட்டவர்கள் தமிழ்மொழியில் இதுவரை உள்ள நெடுங்கணக்கையே மாற்றியமைக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது எனத் தமிழ்ப் பற்றாளர்கள் வருத்தம் தெரிவித்தனர். கிரந்த எழுத்துகள் என்று ஜ, ஸ, ஷ, ஹ, ‚ ஆகிய எழுத்துகளை தனியாகச் சுட்டாமல் தமிழ் எழுத்துகளுடன் இணைத்து 252 எழுத்துகளாக அறிவித்துவிட வேண்டும். இல்லையெனில், தூயதமிழ் என்று சொல்லிக்கொள்வோரின் நீசமொழி (பாஸ்டர்ட் லாங்குவேஜ்) ஆகிவிடும் என்று பேசிய அந்தக் குழுவைச் சேர்ந்தவரை இழிமாந்தர் என்றுதானே எண்ணவேண்டியிருக்கிறது. மேலும், கிரந்த எழுத்தான 'ஜ' என்ற எழுத்திற்கு வலுவான அம்சம் இருப்பதால்தான் சிவாஜி திரைப்படம் வெற்றி பெற்றதாக அந்த அதிகாரிகள் கூறினார்களாம். தமிழ்மொழியால் வாழ்ந்துகொண்டு அந்த மொழியின் அடித்தளத்திற்கே வெடி வைக்கும் கேடான செயலைச் செய்ய சிலர் முற்பட்டுள்ளதாகத் தமிழ்ப் பற்றாளர்கள் இதனை வருணித்துள்ளனர். (மலேசிய நண்பன் செய்தி:18.8.2007)


கண்டனக் குரல்கள் : (இரா.திருமாவளவன், மலேசியத் தமிழ்நெறிக கழகத் தேசியத் தலைவர்) தமிழ் நெடுங்கணக்கை மாற்றிக் கிரந்த எழுத்துகளை இணைக்கும் திட்டமானது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதும் எதிர்க்கத்தக்கதுமாகும். தூய தமிழில் எழுதுவதையும் பேசுவதையும் 'வேசி மொழி' (Bustard Language) என்று சொல்ல இவர்களுக்கு எப்படி மனம் துணிந்தது? தமிழைச் சூத்திர மொழி என்று ஆரிய பார்ப்பன நூல்களில் குறிப்பிட்டிருப்பதை இவர்கள் வழிமொழிகிறார்கள் என்றால் இவர்கள் எந்தப் பிறப்பினர்? தமிழுக்குச் சீரழிவை ஏற்படுத்த முனைந்தால் நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

(ரெ.சு.முத்தையா, மலேசியத் திராவிடக் கழகத் தேசியத் தலைவர்) தமிழனாகப் பிறந்து தமிழில் பேசிக்கொண்டு தமிழால் பிழைத்துக் கொண்டு தமிழ்மொழியை வேசிமொழி என்று கூறுகிற ஒரு மனிதனைக் கொண்டுள்ள ஓர் இனம் உலகத்திலேயே தமிழினம்தான். இது மாகேவலம். எல்லாம் உடைத்தத் தமிழில் அயல்மொழிக் கலப்பு எதற்கு? தமிழை நீசமொழி என்று நினைப்பவர்கள் உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யும் கேடர்களைப் போன்றவர்கள்.

(மு.மணிவெள்ளையன், மலேசியத் தமிழ் இலக்கியக் கழகத் தலைவர்) வெறும் பழம் பெருமைகளை மட்டுமே பேசி வாழும் தமிழர்களிடத்தில் மொழியுணர்வு குன்றிவிட்டதே என்று இத்தனை நாளும் உள்ளம் களைப்புற்றிருந்த நமக்கு தமிழால் பிழைக்கும் தமிழனே, தமிழை 'வேசிமொழி' என்று கூறியிருப்பது நிலைகுலையும் நிலையை ஏற்படுத்தி இருக்கின்றது.

(மா.தமிழன்பன், பாவலர் மன்ற பேரா மாநிலத் தலைவர்) "மூன்றுறழ்ந்த பதிற்றெழுத்தான் முழுவதுமாய்; உனக்கினிதாய்த் தோன்றிடும் அத்தமிழ்" என்று சிவஞான முனிவரின் கருத்துபடியும் மொழிப்பேரறிஞர் தேவநேயப் பாவாணரின் 'தமிழ் வரலாறு' நூல்படியும் தமிழ் நெடுங்கணக்கு வரையறுக்கப்பட்ட ஒன்று. எனவே, ஆக்க வேலைகள் ஏதும் இருந்தால் செய்யுங்கள்; இல்லாவிடில் சோம்பியாவது திரியுங்கள்.

(சு.வை.லிங்கம், சிலாங்கூர் மாநில தமிழ் இளைஞர் மனிமன்ற முன்னாள் தலைவர்) தமிழினத்திற்கு வேலியே தமிழ்தான். தமிழில் அரியது அத்தனையும் உரியதாய் இருக்க அடுத்ததைத் தேடும் அசட்டுத்தனத்தை விட்டுவிடுங்கள். தாய்மொழியைப் பழிக்கும் கீழ்ச்செயலையும் அறவே அறுத்து விடுங்கள்.

(திருவருள், செலாமா) தமிழ் நெடுங்கணக்கை மாற்றி அமைக்கும் எண்ணம் மின்னல் கீற்று போலக்கூட துளிர்க்கக் கூடாதே! எப்படி வந்தது இந்த ஏகடியத் துணிவு? இந்த மொழியை நம் மாணவர்களிடையே வளர்க்கவும் பாதுகாக்கவும் உங்களுக்கு வாய்ப்பு தரப்பட்டிருக்கிறதே தவிர சிதைக்க அல்ல! திருவாசகம், திருமந்திரம் உள்ளிட்ட 12 திருமுறைகளில் பயன்படுத்தப்பட்டுள்ள இலட்சக்கணக்கான சொற்கள் நல்லதமிழ் சொற்களே! அவற்றின் வழிதானே 63 நாயன்மாரும் இன்னும் பிறரும் இறைமாட்சியின் அருந்துணையை நாடியுள்ளனர். நல்லதமிழைத் தாக்கும் முகமாக 'நீசமொழி' என்று பேசியவரின் நீச குணம் இன்றோடு ஒழியட்டும்.

(டத்தோ சுலைமான், போம்கா தேசிய உதவித் தலைவர்) கல்வி அமைச்சர் இதில் தலையிட்டு தமிழ் நெடுங்கணக்கை மாற்ற விரும்பும் பாடத்திட்டக்குழு உறுப்பினர்களை உடனே நீக்க வேண்டும். 'செம்மொழி' தகுதியைப் பெற்றது தமிழ். அதைச் சிதைக்கும் முயற்சியில் யார் ஈடுபட்டாலும் சங்கம் போராட்டத்தில் இறங்கும்.

(கரு.யோகநாதன், திருவள்ளுவர் நன்னெறி மையத் தலைவர்) தமிழுக்கு மீண்டும் இழுக்கா? தமிழரே அதற்குத் துணையா? நெஞ்சம் பதறுகிறது. நாட்டிலுள்ள அனைத்துத் தமிழ் சார்ந்த இயக்கங்களும் வெறுமனே கைகட்டி வாய்மூடிக் கொண்டிராமல் ஒருமித்த குரல் எழுப்புவோம்.

(க.முனுசாமி, தமிழ் எழுத்தாளர் வாசகர் இயக்கம்) 'தமிழ் எங்கள் உயிர்' என்று முழங்கிய தமிழவேள் கோ.சாரங்கபாணி நிதி திரட்டி பல்கலைக்கழகத்திக் தமிழதான் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று குரல்கொடுத்து வெற்றி பெற்றார். அதனால், சமஸ்கிருதம் தவிர்க்கப்பட்டது. தற்போது பொறுப்பில் உள்ள பாடத்திட்டக் குழுவினர் 'சாஸ்திரி'யின் அதே முயற்சியில் மீண்டும் தமிழை வேரறுக்க துணிந்துள்ளனர். தமிழைத் தாயாக நினைக்கும் தமிழர்களின் இந்தப் பிரச்சினைக்குப் பொது அமைப்புகள் ஒன்றுகூடி கல்வி அமைச்சரைச் சந்தித்து விரைந்து தீர்வுகாண வேண்டும்.

(சி.சங்கர், பினாங்கு அறிவாலயத் தலைவர்) "மரபு திரிபின் பிறிது பிறிதாகும்" என்ற தொல்காப்பியச் சிந்தனைக்கேற்பத் தமிழ் மரபைக் காக்க வேண்டும். தமிழ் யாருடைய தனிப்பட்ட சொத்தல்ல. தமிழரின் சொத்து. மொழி அறிஞர்களிடமும் துறைசார்ந்த வல்லாண்மை பெற்றவர்களிடமும் ஆலோசனை பெற்ற பிறகே மொழி தொடர்பான முடிவுகளை எடுக்க வேண்டும். அதிகார பலத்தால் தனிப்பட்ட ஒரு சிலர் எடுக்கும் முடிவால் ஏற்படும் தமிழ்ச்சிதைவை இனியும் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனவே, இதற்குப் பொறுப்பானவர்கள் விளக்கம் தரவேண்டும். இல்லையேல், கல்வி அமைச்சுக்கு முறையீட்டுக் கடிதம் அனுப்புவதோடு அமைதி மறியலும் நடத்தப்படும்.

தீர்வு : மலேசியத் தமிழுலகத்தைக் கிளர்ந்தெழச் செய்த இந்த உணர்ச்சிமிகு செய்தி கல்வி அமைச்சின் நாடளுமன்ற செயலாளர் மாண்புமிகு கோமளா கிருஷ்ணமூர்த்தியின் விளக்கத்தால் ஒரு நிறைவு பெற்றது. தமிழ் நெடுங்கணக்கில் நிலைத்திருக்கும் உயிர் எழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய் எழுத்து, ஆய்த எழுத்துக்களான 247உடன் வடமொழி எழுத்துகளைச் சேர்க்கும் திட்டம் ஏதும் கல்வி அமைச்சுக்கு இல்லை என்று அவர் தெரிவித்தார். (தமிழ் நேசன் நாளிதழ் 22.8.2007)

  • ஆய்தன் : தமிழைத் தாயாக – தெய்வமாக - உயிராக – வாழ்வாக – மதிப்பவர் உணர்வோடு விளையாடுவது பெரும் பிழை! பிறவிப் பாவம்!

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

இந்தச் செய்தியை மிகச் சிறப்பாகத் தொகுத்து அளித்திருக்கும் தமிழுயிருக்கு நன்றிசொல்ல விழைகிறேன். எதிர்காலத்தில் இதுவொரு வரலாற்று ஆவணமாக இருக்கும் என்றால் மிகையன்று.

தமிழில் கைவைக்க யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. எனவே, அவரவர் விருப்பத்திற்குத் தமிழை மாற்றியமைக்க முற்பட்டால் தமிழின் தொன்மை வரலாறு சிதைந்து போகும்.

எதிகால தமிழ்க் குமுகாயம் மொழிக்குருடர்கள் நிறைந்த குமுகாயமாக ஆகிவிடும். தன் சொந்த வரலாற்றை மறந்த இனம் நீடுவாழ்தல் அரிது.

எனவே, மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிறந்த கட்டுமானத்தையும் செம்மை வடிவத்தையும் பெற்றுவிட்ட தமிழ்மொழியில் தயவுகூர்ந்து யாரும் கைவைக்க வேண்டாம்.

தமிழுயிரோடு தமிழ்ப்பணி செய்ய விரும்பும்,
இளஞ்சித்திரன் - வெள்ளி மாநிலம்